கல்முனை பிரதேச செயலகத்தினை தரமுயர்த்துகின்ற விவகாரம் தற்போது அரசியல் தரப்பினரின் விவாத மேடையாக மாறியிருக்கின்றது. இருப்பினும் இவ்விடயத்தினை முனைப்போடு முன்னெடுக்கின்ற கல்முனை சிவில் சமூகத்தினர் அரசியல் அணுகுமுறைகளுக்கு அப்பால் தரமுயர்த்தலின் நியாயபூர்வத்தை எடுத்தியம்பியும், பிரதேச செயலகமொன்றின் நிர்வாக கட்டமைப்பின் அவசியத்தினை புரிந்து கொண்டும் சில நடுநிலையான புத்திஜீவிகள் மதகுருமார்கள், அரசியல்வாதிகளின் உதவியுடன் அரசின் சம்மந்தப்பட்ட அமைச்சர்களை அணுகியிருக்கின்றனர்.
இந்த வெற்றிகரமான நகர்வுகளின் பின்னணிதான் தற்போதய விவாதங்களின் அத்திவாரம.; தங்களது அரசியல் இருப்புக்களை காத்துக்கொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலதரப்பட்டோர் வெளியிடுகின்ற அறிக்கைகளும், ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகளின் எதிர்ப்புக் கருத்துக்களும் இவற்றில் உள்ளடக்கம்.
1989ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12ம் திகதி இரண்டாக பிரிக்கப்பட்ட கல்முனையின் நிர்வாகம் இன்றுவரை காணி, நிதி அதிகாரமளிக்கப்படாத உப பிரதேச செயலகமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகம் என்ற பெயரில் இயங்கி வருகின்றமை அனைவரும் அறிந்ததே. கடந்த காலங்களில் இதனை தரமுயர்த்துவதற்கான முயற்ச்சிகள் பலதரப்பட்ட தரப்புக்களால் பல்வேறுபட்ட சந்தர்ப்;பங்களில் முன்னெடுக்கப்பட்டபோதும் அவை கைகூடவில்லை. இதனை தடுக்கின்ற பிரதான பாத்திரத்தினை கல்முனையை தங்களது அரசியல் தலைநகரமாக சித்தரிக்க முனைகின்ற ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வகித்து வருகின்றது, அன்று முதல் இன்றுவரை இங்குள்ள சமூகத்தை அரசுக்கு எதிரானவர்களாகவும், பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாகவும் சித்தரித்து அவர்களது நகர்வுகளை நிறுத்தி ஒடுக்கி வந்துள்ளது.
கல்முனையின் நீண்டகால வரலாற்றையும், எதிர்காலத்தில் கல்முனை வாழ் தமிழர்களது அரசியல் இருப்பு, அபிவிருத்தி என்பவற்றை ஆராய்ந்து அதற்கேற்ற விதத்திலேயே கல்முனை சிவில் சமூகத்தினால் பிரதேச செயலக தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முற்றிலும் மாறுபட்ட வடிவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போதய நிலையில் எவ்வாறாயினும் தமிழ் தேசிய கூட்டமைப்பை இவ்விவகாரத்துக்குள் இழுத்து விடுவதன் மூலம் இச்செயற்பாடுகளை தடுக்கமுடியும் என்ற எண்ணத்துடன் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசும், தமது அரசியல் இருப்புக்கு குந்தகம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் தமது கருத்துக்களை பத்திரிகைகள், இணையத்தளங்கள் ஊடாக புயல் வேகத்தில் வெளியிட்டு வருகின்றனர்.
'நமக்குள் பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்ற இந்த இருகட்சிகளினதும் கபடத்தை வெளிச்சமிட்டுக் காட்ட இவ்விருகட்சியினரதும் கடந்தகால இன நல்லுறவுகள் தொடர்பான செயற்பாடுகள், அம்பாறை மாவட்ட சிறுபான்மை மக்களுக்காக இவர்கள் செய்திருக்கின்ற தியாகங்கள் ஒரு சிலவற்றை மீட்டிப்பார்க்க வேண்டியுள்ளது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தை கல்முனை சிவில் சமூகம் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்கு தற்போது வந்திருப்பதும் கூட கடந்த 25 வருடகாலத்தில் கல்முனை தமிழ் சமூகம் இப்பிரதேச செயலகம் தொடர்பில் சந்தித்த கசப்பான அனுபவங்களே ஆகும். இவற்றிக்கு பொறுப்பானவர்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் எனும் போது அவர்களே வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் ஆவர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பினரும் கூட இப்பிரச்சினையை தாம் பிரதிநித்துவம் செய்யும் ஏனைய மாவட்டங்களில் காணப்படுகின்ற முஸ்லீம்களுடனான எல்லை மற்றும் காணிப்பிரச்சினைகளுடன் தொடர்புபடுத்தி அம்பாறை மாவட்ட தமிழர்களை முஸ்லீம் சமூகத்திடம் தாரைவார்த்து விட்டு தமது நோக்கங்களை நிறைவேற்றவே முயற்ச்சிக்கின்றனர் என்பது அவர்களது அறிக்கைகள் ஊடாகவும், செயற்பாடுகள் ஊடாகவும் நன்கு அறியக்கூடியதாக உள்ளது. அம்பாறை மாவட்டத்தை முஸ்லீம் சமுகத்திடம் விட்டுக் கொடுத்து விட்டு ஏனையமாவட்டங்களில் தமது அரசியல் நலன்களை உறுதிப்படுத்தி கொள்வதே தமது வியூகமாகுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெளி மாவட்ட அரசியல் வாதிகளின் கருத்தாக இருக்கின்றது.
இத்தரமுயர்வு விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்களுக்கிடையேயும், வெளிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கிடையேயும் கருத்து முரண்பாடுகள் வலுவடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்பில் வெளிமாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் முஸ்லீம் காங்கிரசுடன் ஆரோக்கியமற்ற பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவார்களாயின் அம்பாறை மாவட்ட உறுப்பினர்கள் கட்சியினை விட்டு வெளியேறுவதற்கு தயாராக உள்ளதாகவும் கருத்து தெரிவித்து வருவதாக அறிய முடிகின்றது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன் செல்வராஜா, அரியநேந்திரன் போன்றோரின் அறிக்கைகளும் செயற்பாடுகளும் அம்பாறை மாவட்ட தமிழ் சமூகத்தினை ஆத்திரமடையச் செய்துள்ளது பொன் செல்வராஜா அவர்கள் பெரியநீலாவணையின் ஒரு பகுதியை தனது வாக்கு வங்கியை நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்துடன் இணைக்க முயற்ச்சிக்கின்றார். அரியநேந்திரன் மட்டக்களப்பிலுள்ள முஸ்லீம்களுடனான சில காணி பிரச்சினைகளை தீர்க்க அம்பாறை மாவட்டத்தில் சில விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியுள்ளது என கூறியுள்ளார். இவற்றுக்கப்பால் மாவை சேனாதிராஜா எந்தவிதமான கருத்துகளையும் வெளியிடாமல் மதில் மேல் பூனை போன்றுள்ளார். உண்மையிலேயே அம்பாறை மாவட்ட தமிழ் சமூகம் தொடர்பான அக்கறை தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் அழைப்பு தொடர்பில் உள்ள கபடத்தன்மையினை உணர்ந்து தமிழ் தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் ஜந்நு கட்சிகளும் கையெழுத்திட்டு பகிரங்கமாக தமது நிலைப்பாட்டினை தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அது நடைபெறவில்லை. இது ஒன்றே போதும் அம்பாறை மாவட்ட தமிழ் சமூகம் தொடர்பில் இவர்களுக்குள்ள அக்கறையினை வெளிக்காட்டுவதற்கு. இவற்றை நன்கறிந்தே இப்பிரதேசத்தின் இருப்பு, அபிவிருத்தியில் ஆர்வம் கொண்டு தமது பிரதேச செயலகத்தை ஸ்திரப்படுத்தும் செயற்பாடுகளை கல்முனை சிவில் சமூகம் மேற்கொண்டுவருகின்றது.
முஸ்லீம் சமூகத்தை பொறுத்தவரையில் அவர்களிடம் சில நியாயமற்ற எதிர்பார்ப்புக்கள் இருக்கின்றது, எல்லை நிர்ணயத்தின் போது கல்முனை நகரில் அதிகளவு வர்த்தக நிலையங்கள் தமக்கு சொந்தமானதாகையால் அவை தமது பிரிவுக்குள் உள்ளடக்கப்பட வேண்டும் எனக் கேட்பது எவ்விதத்திலும் நியாயமில்லை. வியாபாரத்தையே பிரதானமாகக் கொண்ட சமூகம் என்றவகையிலும், 30வருட கால யுத்தம் தமிழர்களிடமிருந்து அவர்களுக்கு அளித்த வெகுமதிதான் அவ்வியாபார நிலையங்கள் என்பதையும், கல்முனையின் நிர்வாகத்தினுள் ஆரம்பகாலத்தில் முஸ்லீம்கள் இருக்கவில்லை என்பதையும், 2001ம் ஆண்டு இடம் பெற்ற புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் போதே இவை வலுக்கட்டாயமாக தங்களது ஆளுகைக்குட்பட்டது என்பதையும் உணர்வார்களேயானால் தங்களது எதிர்பார்ப்பின் நியாயமற்ற தன்மையினை புரிந்து கொள்வார்கள்.
கடந்த 30வருடகாலங்களில் இரு இனங்களுக்குமிடையே இப் பிரதேசத்தில் ஏற்பட்ட கசப்புணர்வுகளையும், தமிழர்கள் யுத்தசூழலால் இழந்தவற்றில் ஒரு பகுதியாவது திருப்பி வழங்குகின்றோம் என்ற நல்லெண்ண சமிக்கையின் மூலம் இரு இனங்களுக்கிடையேயும் உறவை வலுப்படுத்திக் கொள்ளும் ஒரு சந்தர்ப்பமாகவும் இன்றைய சூழலை முஸ்லீம் சமூகம் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும். அதனை விடுத்து அடிப்படை ஆதாரமற்ற கருத்துக்களை தமது சுய அரசியல் இலாபத்திற்காக முஸ்லீம் காங்கிரஸ் தமது சமூகத்திடம் முன்வைப்பது இணக்கப்படான சமூக உறவுக்கு ஆரோக்கியமானதல்ல.
இது மட்டுமன்றி கல்முனை முஸ்லீம் பிரதேச செயலகம், கல்முனை மாநகரசபை என்பவற்றில் தமிழ் மக்கள் மீதான புறக்கணிப்புக்கள் இருக்கத்தக்கதாக அவர்களை மேலும் அதிகாரம் பண்ண நினைப்பதானது முஸ்லீம்கள் மீதான தமிழ் மக்களது அபிமானத்தை குறைத்து விட்டுள்ளது. சில முஸ்லீம் தரப்பினர் நிலத்தொடர்பற்ற பிரதேச செயலகத்தை அமைப்பது தொடர்பாகவும், அதன் நிர்வாகம் தொடர்பாகவும் சில ஆரோக்கியமற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனா.; ஆனால் அவர்கள் 2008ம் ஆண்டு முஸ்லீம்களுக்கென்றே தனியாக அமைக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட கல்வி வலயத்தினுள் உள்ள முஸ்லீம் பாடசாலைகளைக் கொண்டு நிலத்தொடர்பற்ற கல்வி வலயத்தினை மட்டக்களப்பு மத்தி எனும் பெயரில் உருவாக்கியதனை மறந்து விட்டார்களா? இதே போன்று திருக்கோயில் கல்வி வலயம் அமைக்கப்பட்ட போது பொத்துவிலில் இயங்கிய 18 முஸ்லீம் பாடசாலைகளை நிலத் தொடர்பற்ற அக்கரைப்பற்று கல்வி வலயத்துடன் நிர்வாக ரீதியில் இணைத்தமையினையும் மறந்து விட்டார்களா? இதெல்லாவற்றையும் முஸ்லீம் சமூகம் செய்தபோது தமிழ்ச் சமூகம் எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. எனவே நிர்வாக ரீதியில் நிலத்தொடர்பு முக்கியத்துவம் பெறுவதில்லை என்பதை கல்வி வலய பிரிப்பு தொடர்பில் ஏற்றுக் கொண்ட முஸ்லீம் சமூகம் இதனையும் ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும்.
அண்மையில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்ற கூட்டத்தில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சரால் முன்மொழியப்பட்ட வடக்கு பிரதேச செயலகம் 73மூ தமிழர்களையும் 26மூ முஸ்லீம்களையும் 1மூ சிங்களவர்களையும் கொண்டதாகவும் அமைப்பது தொடர்பாக இருந்தது. இதனடிப்படையில் பார்க்கும் போது இதனை தனித்தமிழ் பிரதேச செயலகம் என்று சொல்வதற்கு இடமேயில்லை. இதனை கல்முனை சிவில் சமூக பிரதிநிதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டதுடன், மூவின மக்களும் ஒருங்கே வாழுகின்ற பிரதேச செயலகமாக அமையப்பெறுவதனையும் வரவேற்றிருந்தனர். ஆனால் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் பிரதிநிதிகள் உண்மைக்கு புறம்பான கருத்துக்களை அவ்விடத்தில் முன்வைத்து பொது நிர்வாக அமைச்சரின் முன்மொழிவை நிராகரித்திருந்தனர். அவர்கள் கல்முனை நகரில் தங்களது வியாபாரநிலையங்கள் அதிகம் உள்ளதாகவும் அதனை விட்டுக் கொடுக்க முடியாது எனவும் வாதிட்டனர். இக்கோரிக்கை நியாமற்றது என பொதுநிர்வாக அமைச்சரால் சுட்டிகாட்டப்பட்டது. இவற்றுக்கப்பால் இதில் இன்னொரு உண்மையும் உள்ளது. இவ்வியாபார நிலையங்கள் அனைத்தும் தமிழ் சமூகத்தினை நம்பித்தான் இயங்குகின்றது. அத்துடன் முஸ்லீம் களின் பிரதான தொழில் வியாபாரம் என்பதால் இலங்கையிலுள்ள பெரும்பாலான மாவட்டங்களில் உள்ள நகரங்களில் முஸ்லீம்களே அதிகளவு வர்த்தக நிலையங்களை கொண்டுள்ளனர். அங்குள்ள முஸ்லீம்கள் தங்களுக்கு அதிக கடைத்தொகுதி உள்ளதால் தமக்கென்று தனியான பிரதேச செயலகம் வேண்டுமென்று கோரவில்லை. எனவே முஸ்லீம் காங்கிரஸ் தேவையற்ற கோரிக்கைகளை விடுப்பதை விடுத்து ஆரோக்கியமான விமர்சனங்களை முன்வைக்கவேண்டும்.
வடக்கு பிரதேச செயலகம் தரமுயர்த்தப்பட்டு கல்முனை வாழ் மூவின சமூகத்திடம் கையளிக்கப்படும் வேளையில் அதற்கு பிரதியுபகாரமாக தனக்கே உரித்தான சுயாதீனமான கட்டமைப்பொன்றின் மூலம் அரசுக்கு ஆதரவான மக்கள் அரசியல் கலாசார மாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை கல்முனை சிவில் சமூகம் பூர்த்;தி செய்யும் என்பதில் ஐயமில்லை. இதில் தமிழ் சமூகத்தினையும் ஏனைய சமூகத்தினையும் சார்ந்து செயற்படுகின்ற அரசியல் வாதிகள் அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் அபிலாஷைகளை உணர்ந்து சிவில் சமூகத்துடன் இணைந்து மக்களுக்கான புதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை ஏற்படுத்த முன்வரவேண்டுமென கல்முனை சிவில் சமூகத்தின் தலைவர் பொன். செல்வநாயகம், செயலாளர் கே. ரமேஸ் ஆகியோர். கேட்டுக்கொள்கின்றனர்
No comments:
Post a Comment