Tuesday, December 24, 2013

சகல துறைகளிலும் இலங்கை சக்திவாய்ந்த கேந்திர நிலையமாக திகழவுள்ளது - கோத்தாபய (படங்கள்)

சகல துறைகளிலும் இலங்கை சக்திவாய்ந்த கேந்திர நிலை யமாக திகழவுள்ளது எனவும் இதற்கிணங்க கடல், ஆகாய மற்றும் வர்தகத்தில் சக்திவாய்ந்த கேந்திர நிலையமாக இல ங்கை திகழவுள்ளதாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறினார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நேற்று இடம்பெற்ற "வேர்க் இன் ஸ்ரீலங்கா" மாநாட்டில் கலந்துகொண்டு தலைமையுரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்.

இலங்கையை சக்திவாய்ந்த கேந்திர நிலையமாக மாற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன இதற்கமைய பாரிய உட்கட்டமைப்புக்களான அம் பாந்தோட்டை துறைமுகம், மத்தலை விமானநிலையம், நாடுபூராகவும் தரமான பாதை மற்றும் புகையிரதப்பாதை வலையமைப்பு என எதிர்காலத்தை கருத்திற்கொண்ட அனைத்து வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

"வேர்க் இன் ஸ்ரீலங்கா" வேலைத்திட்டமானது நாட்டுக்கு வெளியேயும் உள்ளேயும் உள்ள இலங்கையின் மனித வளங்களை சக்திவாய்ந்த வர்த்தகர்களையும் நாட்டுக்குள் தமது திறன்களை பயன்படுத்துமாறு அழைப்புவிடுக்கும் வேலைத் திட்டமாகும். இத்திட்டமானது கடந்த மே மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் தொலைநோக்கு நடவடிக்கைகளை வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட "மஹிந்த சிந்தனை" கொள்கைத் திட்டம் மற்றும் அதன் "முன்நோக்கிய பாதை" என்பன தொடர்பில் மேலும் முன்னேற்றுவதற்காக இலங்கையில் சாத்தியமான பல துறைகள் ஏற்கனவே இனங்காணப்பட்டுள்ளன.

இவற்றுள் உடைகள் மற்றும் ஆடை தொழிலில் பரவலாக உலகின் சிறந்த நிலை யமாக நாம் திகழ்வதும் ஓர் எடுத்துக்காட்டாகும். இலங்கையில் வாழ்வதற்கும் பணியாற்றுவதற்குமென அறிவார்ந்த பணியாளர்கள் மற்றும் ஏனைய தொழில்சார் நிபுணர்களுக்கு உதவக்கூடிய சூழலொன்றை உருக்குவதில் அரசாங்கம் மிகவும் ஆர்வம் காட்டிவருகின்றது.

கடந்த 1980 களில் தொடங்கி 2009 வரையிலான காலப்பகுதியில் நாட்டில் தோன்றியிருந்த நிச்சயமற்ற சூழ்நிலை காரணமாக எமது புத்திஜீவிகளில் பலர் நிம்மதியான வாழ்க்கை வசதிகளைத் தேடி ஏனைய நாடுகளுக்குச் சென்றிருந்தனர்.

இத்தகைய தனிநபர்கள் யுத்த சூழ்நிலையிலிருந்து தப்பித்துக்கொள்ளவோ, உயர்கல்வியைப் பெற்றுக்கொள்ளவோ, அதிக பணவருமானம் ஈட்டித்தரவல்ல வேலை வாய்ப்பு வசதியைப் பெற்றுக்கொள்ளவோ அல்லது சிறந்த வாழ்க்கைத் தரமொன்றை அனுபவிக்கவோ சென்றிருந்தாலும், அவர்களின் வெளியேற்றம் உண்மையிலேயே நாட்டிற்குப் பாரதூரமானதோர் இழப்பாகும்.

எமது நாடு கடந்த காலங்களில் முகம் கொடுத்திருந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு, தற்போது துரித சமவிகித வளர்ச்சிக்கான பாதையில் பயணித்துக் கொண்டிருப்பதனால், தங்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிவருவதென வெளிநாடு களில் வாழ்ந்துவரும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த இலங்கையர்கள் கருத்திற்கொள்ள வேண்டிய காலம் தற்போது கனிந்துள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment