பாடசாலை மேசை, கதிரைகளை பழைய இரும்பு கடைக்கு விற்ற அதிபருக்கு பிணை!
புத்தளம் பாடசாலை ஒன்றில், பாடசாலைக்குச் சொந்தமான தளபாடங்களை பழைய இரும்புக் கடைக்கு விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட அதிபர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்யுமாறு புத்தளம் நீதவான் நீதிமன்று இன்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் ஒருவர் 2013-10-31ஆம் திகதியன்று செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் அதிபரை நேற்று (06) கைது செய்தனர்.
கல்பிட்டி பிரதேசத்தில் வேறு ஒரு பாடசாலையில் நடைபெற்ற நிகழ்விற்கு கல்வி பணிப்பாளரின் அனுமதியுடன் கொண்டு சென்ற தளபாடங்கள் மீண்டும் அதிபரின் பாடசாலைக்கு கொண்டுவரப்படாது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
அதன்படி விசாரணை செய்தபோது புத்தளம் பிரதேச பழைய இரும்புக் கடையில் 35 ஆயிரம் ரூபாவிற்கு மேசை, கதிரை, இரும்பு என்பவற்றை அதிபர் விற்பனை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
அதன்படி, பாடசாலை அதிபர் சுமனசிறி அமரசிங்க (52வயது) கைது செய்யப்பட்டார்.
0 comments :
Post a Comment