தமிழ் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களில் பலர் என்னுடன் இணக்கமாக வேலைகள் செய்து வருகின்றார்கள். ஆனால் சிலர் மாத்திரமே எதிராகச் செயற்படுகின்றனர். என ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
நான் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் மிக நல்ல முறையிலேயே வேலை செய்து வருகின்றேன். எனக்கு தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பிரச்சினை கிடையாது. வட மாகாண சபை தொடர்பாக நாங்கள் மிக நல்ல முறையிலேயே இணைந்து செயற்படுகின்றோம். நாங்கள் பரஸ்பரம் பேசுகின்றோம். எங்களுக்குள் எவ்வித பிரச்சினையும் கிடையாது.
தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் குறிப்பிட்ட சிலர்தான் பிரச்சினை பண்ணுகின்றனர். வட மாகாண சபையை சேர்ந்த குறிப்பிட்ட சிலருக்கு பயந்து ஆளுநர் செயற்பட முடியாது. குறிப்பிட்ட சிலருடைய அழுத்தங்களுக்காக அச்சப்பட முடியாது.
இந்நபர்களின் எதிர்ப்புக்கள், கருத்துக்கள் ஒவ்வொன்றையும் நான் கணக்கில் எடுத்துக் கொண்டிருந்தால் என்னால் வேலை செய்ய முடியாது. நான் எவ்வித தவறும் செய்யவில்லை. அரசமைப்புக்கு முரணாக செயற்படவில்லை. எனவே எனக்கு எதிராக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும். நான் இராணுவத்தில் இருந்த போது நாட்டுக்கு மகத்தான சேவை ஆற்றினேன்.
என்னுடைய மகத்தான சேவைகளை அங்கீகரித்தே என்னை வட மாகாண ஆளுநராக நியமித்தார். சும்மா ஒருவரை ஆளுநராக ஜனாதிபதி நியமிப்பாரா?
ஆனால் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் நானும் சாதாரண பொதுமகன் தான். நபர் ஒருவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பிற்பாடு சாதாரண குடிமகன்தான் என்பதை அவதானிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு தவறுகின்றது. நான் மனித உரிமைகள் விடயத்தை கவனத்தில் எடுத்துள்ளேன். தமிழ் கூட்டமைப்புக்கும் எனக்கும் பிரச்சினை கிடையாது.
ஒரு ஆளுநரை மூன்றே மூன்று குற்றச்சாட்டுக்களுக்காகத்தான் பதவி நிக்க தீர்மானம் நிறைவேற்ற முடியும். ஊழல், மோசடி, அரசமைப்பின் மீறுகை நான் இம்மூன்று குற்றங்களில் எதையும் செய்யவில்லை.
எனவே எனக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அரசமைப்புக்கு முரணானது மாத்திரம் அல்ல செல்லுபடி அற்றதும் ஆகும்.
No comments:
Post a Comment