உறுப்பு நாடுகளின் இதயங்களை ஜனாதிபதி வென்றெடுக்க வேண்டும்! - சஜித்
நாட்டை பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான அழுத்தங்களை வெற்றிக்கொள்ள கட்சி பேதமின்றி அனைதது தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
உள்விவகாரப் பிரச்சினைகள் உள்ளக ரீதியில் தீர்வு காணப்பட வேண்டுமே தவிர சர்வதேச ரீதியில் அல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு இதுவாகும் என அவர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், பாதகமான விளைவுகளை எதிர்நோக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச சக்திகளின் அழுத்தங்களை முறியடிப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைகள் திருப்தி அடையும் வகையில் அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். வெளிவிவகார கொள்கைகளின் காரணமாகவே சர்வதேச நாடுகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்வதாகத் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் மற்றும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் கூட்டாக ஒப்புக்கொண்டமை, நாட்டின் வெளிவிவகார கொள்கைகளில் முக்கிய திருப்பு முனையாக அமைந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி, உறுப்பு நாடுகளின் இதயங்களை வென்றெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்ப் புலம்பெயர் மக்கள் தொடர்பிலான விவகாரங்களுக்காகவே வெளிவிவகார அமைச்சில் தனியான ஓர் அலகு உருவாக்கப்பட வேண்டுமென சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment