Wednesday, December 25, 2013

திஸ்ஸ கரலியத்த மகளிர் நலத்துறை அமைச்சராக இருக்க அருகதையற்றவர்- மனித உரிமை, சமூக நலத்துறை ஆர்வலரகள்!

திஸ்ஸ கரலியத்த மகளிர் நலத்துறைக்கு அமைச்சராக இருக்க அருகதையற்றவர் என மகளிர் அமைப்புகளும் மனித உரிமை, சமூக நலத்துறை ஆர்வலர்களும் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருவதுடன், பெண்கள் தொடர்பில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் அவர் கூறிவரும் சர்ச்சைக்குரிய கருத்துக்களால் அவரை உடனடியாக பதவி விலக்கவேண்டும் என்றும் மகளிர் அமைப்புக்கள் கோருகின்றன.

நீண்டகாலமாக இந்தக் கோரிக்கையை ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத் தரப்பிடம் முன்வைத்தும் இன்னும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் இலங்கை பெண்கள் தொடர்பான அரசசார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியம் குற்றஞ்சாட்டு கின்றது.

அமைச்சர் திஸ்ஸ கரலியத்த பகிரங்கமான இடங்களில் பெண்களை மிகக் கடுமையாக அவமானப்படுத்தும் வகையிலும் தரக்குறைவான முறைகளிலும் பேசிவருகிறார் எனவும், மிக அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் பேசும்போது, பதிவிரதையாக இல்லாத-அதாவது தனது கணவனுக்கு விசுவாசமாக நடக்காத பெண்கள் தான் இலங்கையில் பாலின அடிப்படையிலான வன்முறைகள் நடப்பதாக என்று அமைச்சர் தெரிவித்துள்ளார் என சுட்டக்காட்டிய பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் சேப்பாலி கோட்டகொட மகளிர் விவகாரத் துக்கான அமைச்சரிடமிருந்து இப்படியான கருத்து வெளிப்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் எந்தத் தரப்பிடமிருந்தும் இதுவரை பதில் கிடைக்கவில்லை. நாங்கள் சுட்டிக்காட்டுவதை புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் அமைச்சர் இருந்தால் அவர் மன்னிப்புக் கோரவேண்டும் என்றும் பெண்கள் மற்றும் ஊடக கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் தெரிவித்தார்.

பொதுமேடைகளில் பெண்களை ஏளனப்படுத்தி, கேலிபடுத்தி, தரக்குறைவாக பேசும் ஒருவர் பெண்களின் நலனுக்காக உழைக்க வேண்டிய ஒரு அமைச்சுக்கு பொறு ப்பாக இருப்பதை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும், அமைச்சரை பதவி நீக்குவதற்காக எல்லா ஜனநாயக வழிகளிலும் தொடர்ந்தும் குரல்கொடுக்கவுள்ளதாகவும் சேப்பாலி கோட்டகொட கூறினார்.

பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பது எப்படி, பெண்களின் மேம்பாட்டை எப்படி ஊக்குவிப்பது போன்ற விடயங்களை ஒரு ஆண் என்பதற்காக அவரால் புரிந்துகொள்ள முடியாது என்று கூறிவிடமுடியாது. ஆனால் இந்த அமைச்சர் இவற்றைப் புரிந்துகொள்ள முடியாதவராக இருப்பது தான் துரதிஸ்டவசமானது´ என்றும் சேப்பாலி கோட்டகொட சுட்டிக்காட்டினார்.

பெண்களுக்கு தலைமைத்துவப் பொறுப்புக்களை வழங்கக்கூடாது என்றும் அமைச்சர் கூறிவருவதாகவும் மகளிர் அமைப்புகள் கூறுகின்றன. இலங்கையில் முதல்தடவையாக ஆண் அமைச்சர் ஒருவர் மகளிர் விவகாரத்துக்கு பொறுப்பாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment