வடமாகாணசபை தேர்தல் முடிவடைந்த பின்னர் அதில் வெற்றி பெற்ற அமைச்சர்களை கௌரவிப்பதற்கே அதிக நிதி செலவாகி வருகின்றது. வடமாகாண அமைச்சர்களில் ஆடம்பரத்தையும் கௌரவிப்புக்களையும் பெரிதும் விரும்பியவர்களாக முதலமைச்சரும் வடமாகாண சுகாதார அமைச்சரும் தான் விளங்குகின்றார்கள். இவர்களுக்கு வாரத்தில் ஒரு தடவையாவது கௌரவிக்கும் நிகழ்வு இடம்பெறாமல் இல்லை. மாலையும் கழுத்துமாக திரிகிறார்களே தவிர மக்கள் எதற்காக வாக்களித்தார்கள் என்பதை இவர்கள் சிந்திப்பதாக இல்லை.
அந்த வகையில் நேற்று (21) வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் தமிழரசுக் கட்சியின் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 150,000 ரூபாய் செலவு செய்து பெருமெடுப்பில் இடம்பெற்றது. இந்த செலவில் மீண்டும் ஒரு கௌரவிப்பு தேவைதானா? இன்று எத்தனை மக்கள் ஒரு வேளை உணவைக் கூட உண்ண முடியாமல் இருக்கிறார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா? எத்தனை பிள்ளைகள் தமது எதிர்காலத்திற்காக கல்வியைத் தொடர முடியாது கொப்பி, புத்தகம் வாங்க முடியாமல் பாடசாலை செல்வதா, இல்லையா என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள் என்பது இவர்களுக்கு தெரியாதா? அது சரி மக்களுடன் பழகி அவர்கள் துன்பங்களை கேட்டால் தானே அது தெரியும். அது சரி படிப்புக்காக விழுந்த வாக்குகள் தானே இவருக்கு.
விழாவானது நரைத்த முடியுடைய இருபது முப்பது பேருடன் தான் நடைபெற்றது. இவர்கள் எதிர்பார்த்த மாதிரி நிகழ்வில் பெரியளவில் யாரும் கலந்து கொள்ளவில்லை. தினமும் கௌரவிப்பு விழா என்றால் வேலையை விட்டு தினமும் போறதா என்று பலர் போகவில்லை போல. நிகழ்வு ஆரம்பித்த போது முதல் நிகழ்வாக மாவீரன் நெல்சன் மண்டேலாவிற்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது தமிழரசுக் கட்சி ஆதரவாளர் ஒருவர் எழுந்து நெல்சன் மண்டேலாவிற்கு ஏன் நாங்கள் அஞ்சலி செலுத்த வேண்டும்? அவர் எமக்கு என்ன செய்தவர்? தந்தை செல்வாவிற்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கத்தினார். குறுக்கிட்ட நிகழ்வின் தலைவரான வவுனியா தமிழரசுக் கட்சிக் கிளைத் தலைவர் டேவிட்நாதன் நீர் இரும். அது எமக்கு தெரியும். என வாயைப் பொத்துமாறு சைகை காட்டியுள்ளார். அப்போது வேறு சில உறுப்பினர்கள் சென்று அவரை சாமாதானப்படுத்தி நிகழ்வை தொடர்ந்து கொண்டு நடத்தியுள்ளார்கள்.
அதன் பின் மக்கள் சேவை மாமணி உரையாற்ற வந்துள்ளார். இவர் மக்களுக்கு சேவை செய்யாமலே மக்கள் சேவை மாமணி என்ற பட்டத்தை பெற்று அதை படித்து பெற்ற பட்டம் போல போட்டுக் கொண்டு அடுத்த நகரசபைத் தலைவர் தான் தான் என்று உதுவலிய சுத்திக் கொண்டு திரியிறவர். சுத்தானந்த இந்து இளைஞர் சங்கத்தின் வாழ்நாள் தலைவரும் இவரே. தலை நரைச்சாலும் உடல் சுருங்கி வார்த்தை தள்ளாடினாலும் இளைஞர் என்று எல்லாரும் இவரை நினைக்கிறாங்க பாருங்க. போற போக்கை பார்க்கும் போது தமிழரசுக் கட்சி சார்பில் வருகின்ற இளைஞர் பாராளுமன்றத்திலும் போட்டியிடுவார் போல தான் இருக்கு. அதை விடுத்து விசயத்திற்கு வருவம். இந்த மக்கள் சேவை மாமணி உரையாற்ற எழுந்த போது மீண்டும் சபையில் குழப்பம். கலியாண வீட்டுக்கு மண்டபம் தரமாட்டன் என்றவன். 15 கதிரையை எடுத்தவன் இவனை ஏன் பேசவிடுகிறீர்கள் என ஒருவர் கத்தியுள்ளார். எல்லாம் கட்சி ஆதரவாளர்கள் தான். மற்ற கட்சி ஆதரவாளர்கள் போய கத்தியவரை சாமாதானப்படுத்தியுள்ளனர்.
அவருடைய பேச்சு முடிந்த பிறகு சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தொடங்கியுள்ளார். தன்னைப் பற்றி முகப்புத்தகத்தில் யரோ விமர்சிக்கினமாம். நல்ல புலனாய்வாளனாம் என்று புகழ்ந்துள்ளார். தான் பாராளுமன்ற தேர்தலில் நின்றாலும் என்று பயத்தில தானாம் இப்படி செய்யினம் என்று சொல்லிட்டாரு. வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில தொடர்பு இருக்கிறதாக அவர் கருதுற மாதிரி சொல்லியிருக்கிறார். இதைப் பற்றியே பேசிட்டு அமர்ந்திட்டாரு. இப்ப எங்கட நாட்டில உங்கட முகப்புத்தக பிரச்சனை தான் பெரிய பிரச்சனையா? அதுக்கா மக்கள் உங்களுக்கு வாக்குப் போட்டது. என பலர் அதிருப்தி அடைந்து நிகழ்வில் இருந்து வெளியேறியுள்ளனர்.
தமிழரசுக் கட்சி மேல் அதிருப்தி வலுத்து வரும் நிலையில் இருக்கும் உங்கள் ஆசனங்களையாவது காப்பாற்ற கொஞ்சமாவது பந்தாக்களை விடுத்து மக்கள் சேவையில் இறங்குங்கள். அல்லது இந்த மூக்குடைபடும் நிகழ்வுகள் தொடரும் என்பதே உண்மை.
No comments:
Post a Comment