Tuesday, December 17, 2013

துண்டான கையை, காலில் ஒட்டவைத்து வளர்த்து பின்னர் அதை மீண்டும் கையில் பொருத்தி வைத்தியர்கள் சாதனை!

மருத்துவ துறையானது நாளுக்கு நாள் தற்போது பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றது. இந்த வகையில் துண்டான கையை, காலில் ஒட்ட வைத்து வளர்த்து பின்னர் அதை வாலிபருக்கு மீண்டும் பொருத்தி வைத்தியர்கள் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் ஷாங்டே என்ற ஊரை சேர்ந்தவர் ஜியாவோ வெய் (20). இவர் அதே பகுதியில் உள்ள தொழிற்சாலையில்வேலை செய்கிறார்.

தொழிற்சாலையில் வேலை செய்த போது எதிர்பாராத விதமாக ஜியாவோ வெய் யின் வலதுகை இயந்திரத்துக்குள் சிக்கி துண்டானது. வலியில் அலறி துடித்தவரை, சகதொழிலாளர்கள் மீட்டனர். மணிக்கட்டு வரை துண்டாகி இயந்திரத்துக்குள் விழுந் திருந்திருந்த துண்டனை எடுத்து கொண்டு ஷாங்டேவில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது கையை காப்பாற்றுவது கடினம் என்று கைவிரித்து விட்டனர். அங்கிருந்த டாக்டர்களின் அறிவுரைப்படி மண்டல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன்பின்னர் சுமார் 2 மணி நேர பயணத்துக்கு பிறகு மண்டல மருத்துவமனையில் ஜியாவோ வெய்யை சேர்த்தனர். வாலிபரின் நிலையை கண்ட டாக்டர்கள், இது மிகவும் கடினமான சிகிச்சை. எனவே நேரடியாக மணிக்கட்டை கையில் பொருத்த முடியாது. வேறு மாதிரி முயற்சி செய்து பார்க்கலாம் என்று கூறினர்.

அதன்பின் துண்டான அவரது கையை அவரது இடது காலில் கணுக்கால் அருகே ஒட்டுசெடியை ஒட்ட வைப்பது போல் வைத்து, அதை உயிர் பெற முயற்சி மேற் கொள்ளப்பட்டது. அதுவரை அவரது வலது கரத்தையும் மருந்துகள் மூலம் பாதுகாத்தனர். சுமார் ஒரு மாதத்துக்கு பிறகு துண்டான கையின் அனைத்து செல்களும் உயிர் பெற்றன. இதனால் மகிழ்ச்சி அடைந்த டாக்டர்கள், காலில் வளர்ந்திருந்த மணிக்கட்டை மீண்டும் ஆபரேஷன் மூலம் அகற்றி வலது கையில் பொருத்தினர்.

தற்போது ஜியாவோ வெய்யின் வலது கரம் வழக்கம் போல் நன்றாக செயல்படுகிறது என்று டாக்டர்கள் தெரிவித்தனர். கை திரும்ப கிடைத்த சந்தோஷத்தில் கண்ணீரோடு ஜியாவோ வெய் டாக்டர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதுகுறித்து இங்கிலாந்து டாக்டர்கள் கூறுகையில், இது ஒரு மருத்துவ அதிசயம். மிகவும் அரிதான முறையில் கையை பிழைக்க வைத்து சீன டாக்டர்கள் சாதனை செய்துள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com