அத்துருகிரிய கெரோக்கே படுகொலையுடன் தொடர்புடைய ஒன்பது பேரும் சிறைக்கு!
அத்துருகிரிய நகரிலுள்ள கெரோக்கே இரவு சமூக நிலையத்தின் பாதுகாப்பு அலுவலர் அமைப்பு ரீதியான குற்றவாளிகளால் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்றது தொடர்பில், அத்துருகிரிய பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட 09 பேரும் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர், எதிர்வரும் 09 ஆம் திகதி வரை அவர்களைத் தடுப்புக் காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி வசந்த ஜினதாச நேற்று (04) ஆணையிட்டுள்ளார். இக்கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சாரதி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
கடந்த 01 ஆம் திகதி இரவு 9.25 அளவில் 119 ஆம் இலக்க பொலிஸ் அவசரப் பிரிவுக்கு வழங்கப்பட்ட தகவலொன்றின்படி அந்த கெரோக்கே இரவு சமூக நிலையத்திற்குப் போய் சோதனை செய்த போது, சமூக நிலையத்தின் முன்றலில் கொலை செய்யப்பட்டவர் வெட்டுக் கொத்துக்களுடன் விழுந்திருந்தார் எனவும், அத்துருகிரிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே அவர் இறந்திருந்தார் எனவும் பொலிஸார் நீதிமன்றில் மேலும் தெரிவித்தனர்.
இக்கொலையில் இறந்திருப்பவர் வெலிகட புக்கமுவ வீதியில் 11/8 இல்லத்தில் வசித்த புலத் சிங்களயே சமித் குரே (22) என்ற இளைஞராவார்.
ரணில் பண்டார தர்மசிரி, கயான் சில்வா, தமித்த தரங்க, நதீச கிஹான் மதுசங்க, மதுசங்க சிரியானந்த, இசுரு தியத் சாமர, நுவன் தர்சன, தர்சன திலின பெரேரா, தர்சன பிரதீப் சுபசிங்க எனும் ஒன்பது பேருமே சந்தேக நபர்களாவர்.
இந்தக் படுகொலை நடைபெறுவதற்கு பல நாட்களுக்கு முன்னர் நள்ளிரவு 20 பேரைக் கொண்ட குழுவினர் சமூக நிலையத்தினுள் புகுந்து, அங்கு மதுபானம் கேட்டுள்ளனர். அதற்கு இறந்தவர் முடியாது என்று மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து நிலையப் பணியாளர்களுக்கும் வந்திருந்த குழுவினருக்குமிடையே தகராறு ஏற்பட்டு சண்டை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.
அன்று நடுச்சாம வேளையில் மதுபானம் விற்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என அலுவலர்கள் குறிப்பிட்டுள்ளதுடன், அவ்வேளை அவர்கள் , “நாங்கள் துமிந்த சில்வாவின் அடியாட்கள் என்றும், எங்களிடம் தாக்குதலுக்குள்ளாவதற்கு விருப்பமாக இருக்கின்றதா? என அச்சுறுத்திச் சென்றதாகவும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் நீதிமன்றில் மேலும் குறிப்பிட்டனர்.
இப்படுகொலையுடன் தொடர்புடைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதனால், சந்தேக நபர்களை சிறையிலிடுமாறு பொலிஸார் நீதிபதியைக் கேட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 09 பேரையும் எதிர்வரும் 09 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி வசந்த ஜினதாச கட்டளையிட்டார்.
வழக்கறிஞர்களான டீ.ஜீ.பீ. கருணாரத்ன, கமல் விஜேசிரி, நுவன் ஜயவர்த்தன மற்றும் சந்யா தல்தூவ ஆகியோர் குற்றவாளிகள் தொடர்பில் காட்சியளித்தனர்.
0 comments :
Post a Comment