வல்வெட்டித்துறை பிரதேச சபையில் மோசடி: சிவாஜிங்கத்திற்கும் தொடர்பா?
வல்வெட்டித்துறை நகரசபைக்கு சொந்தமான பேருந்து தரிப்பிட சிற்றூண்டிச்சாலை குத்தகை யில் மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பிரத்தியேக செயலாளரும் வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினருமான கருணானந்தராசா மோசடி செய்துள்ளார் என ஆதாரமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த மோசடியில் நகர சபைக்குச் சேர வேண்டிய இரண்டு இலட்சத்து 52 ஆயிரம் ரூபா வரை கையாடல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறை நகர சபைக்குச் சொந்தமான பேரூந்து தரிப்பிட சிற்றுண்டிச்சாலை கடந்த பல வருடங்களாக பகிரங்க ஏலத்தில் 120,000.00 ரூபா வரை விடப்பட்டு, அதன் மூலம் கணிசமான வருமானத்தைப் பெற்று வந்த நிலையில் 2013 ஆம் ஆண்டுக்கான குத்தகையை வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்திற்கு மட்டுமே வழங்கப்பட வேண்டுமென்று நகர சபை நிர்வாகத்திற்கு சிவாஜிலிங்கம் மற்றும் குலநாயகம் தலைமையிலான சில உறுப்பினர்களால் அழுத்தம் கொடுக்கப்பட்டது.
ஏனெனில் நகர சபை நிர்வாகத்தில் உள்ள நான்கு உறுப்பினர்கள், வல்வெட்டித்துறை சனசமூக நிலையத்திலும் நிர்வாக உறுப்பினர்களாக உள்ளமையால் பெரும்பான்மை அங்கத்தவர்களால் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு சபையின் வருமான இழப்பையும் பொருட்படுத்தாது சனமூக நிலையத்திற்கு வழங்கப்பட்டது.
தலைவர் இரத்தினகுமார் மற்றும் செயலாளர் பொ.சிவஞானசுந்தரம் ஆகிய இருவருக்கும் நகராட்சி மன்றத்தின் தலைவர் ந.அனந்தராசாவுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய ஐம்பது வீதம் குறைத்து 60,000.00 ரூபாவுக்கு இச் சிற்றுண்டிச்சாலைக்கான குத்தகை சனசமூக நிலையத்திற்கே வழங்கப்பட்டது.
ஆயினும் சனசமூக நிலையத்திற்கான இந்தச் செயற்குழு பொறுப்பேற்று கடந்த 18 மாதங்களாகப் பூட்டப்பட்ட நிலையில் செயல் இழந்து காணப்படுவது பற்றியும் பொதுமக்கள் உள்ளுராட்சி உதவி ஆணையாளருக்கு முறைப்பாடுகள் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. சனசமூக நிலையத்தின் தலைவர், செயலாளர் இருவராலும் நகராட்சி மன்றத்துடன் செய்து கொள்ளப்பட்ட குத்தகை ஒப்பந்தத்திற்கு அமைவாக நகராட்சி மன்றத்திற்குச் சொந்தமான சிற்றுண்டிச் சாலை வேறு எவருக்கும் கைமாற்றப்படக்கூடாது என்றும் அவ்வாறு அந்த ஒப்பந்தத்தையும் மீறிச் செயற்பட்டால் தலைவர், செயலாளருக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் குத்தகையும் இரத்துச் செயற்பட்டு தண்டனையும் விதிக்கப்படும் என்ற நிபந்தனைகளும் இருந்த போதும், அதனையும் மீறி வல்வெட்டித்துறை நகரசபையின் உறுப்பினரான கோ.கருணானந்தராஜா என்பவருக்குக் கையளித்து அவரிடம் இருந்து மாதாந்த வாடகையாக 8000.00 ரூபாவை சனசமூக நிலைய நிர்வாகிகள் பெற்றுக் கொண்டு வந்ததாக அறியவருகின்றது.
அதேவேளை நகர சபை உறுப்பினரான கோ.கருணானந்தராஜா இன்னுமொரு மூன்றாம் தரப்பாக பொலிகண்டியைச் சேர்ந்த திருமதி.றோ.இராஜேஸ்வரி என்பவருக்கு வாடகைக்கு வழங்கி அவரிடம் இருந்தும் கீமணியாக 20ஆயிரம் ரூபாவைப் பெற்றுக் கொண்டு, அதற்கும் மேலதிகமாக வாடகையாக நாள் ஒன்றுக்கு 700.00 ரூபாவீதம் மாதமொன்றுக்கு 21ஆயிரம் ரூபாவை வாடகைப்பணமாக தனது சொந்தத் தேவைக்காகப் பெற்று வந்தார்.
இதன்படி வருடாந்த வருமானமாக அவர் 252,000.00 ரூபாவைப் பெற்றுக் கொள்வதற்கான எழுத்துமூல ஒப்பந்தத்தை இரண்டு சாட்சிகளின் முன்னிலையில் திருமதி.றோ.இராஜேஸ்வரியுடன் செய்து கொண்டுள்ளார். சிற்றுண்டிச் சாலை மூடப்பட்டிருந்த நாட்களிலும் கூட குறித்த நாள் வாடகையான 700.00 ரூபாவை அறவிட்டு வந்ததுடன், தினமும் காலை 10.00 மணிக்கு முன்னராகவே கடைக்கு வந்து, அன்றைய வாடகையையும் பெற்று தனது காலை உணவையும் எடுத்துச் சென்று விடுவதாகவும் சிற்றுண்டிச் சாலைக்கு வருகை தருபவர்களால் தெரிவிக்கப்பட்டது.
அதேவேளை 2014 ஆம் ஆண்டுக்கான பகிரங்கக் குத்தகை விளம்பரம் செய்யப்பட்டதும் இக் குத்தகைக்கான விண்ணப்பப் படிவத்தை நகர சபைக்குச் சென்று பெற்றுக் கொள்ளப் போவதாக கோ.கருணானந்தராஜாவிடம் கூறிய பொழுது, தான் நகர சபை உறுப்பினர் என்ற வகையில் தனக்கே 2015 ஆம் ஆண்டு வரை எழுதித் தந்துள்ளபடியால் வேறு எவரையும் அதற்குப் போடவிடமாட்டேன் என்றும் அவ்வாறு விண்ணப்பிக்க முயற்சித்தால், சிற்றுண்டிச் சாலையில் இருந்தும் வெளியேற்றிவிடப் போவதாகவும் மிரட்டியுள்ளார்.
அதே போன்று இவ்வாறான தவறான தகவல்கள் அவரால், பகிரங்கமாக பரப்பப்பட்டதாலும், அவருக்கு இருக்கும் அரசியல் பின்புலம் காரணமாகவும், அச்சத்தினால் எவரும் இதற்கு விண்ணப்பிக்கவில்லை. ஆனால் குத்தகை தொடர்பான உண்மை நிலை தெரிந்ததும் இந்த விடயம் பலரால் நகர சபைத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதால், இந்தக் குத்தகை மோசடியில் சம்பந்தப்பட்டதால், சனசமூக நிலையத்திடம் கையளிக்கப்படடிருந்த 2013 ஆம் ஆண்டுக்கான சிற்றுண்டிச் சாலைக்கான குத்தகையை இரத்துச் செய்ததுடன், 2014 ஆம் ஆண்டு சனசமூக நிலையத்தின் தலைவரினால் சமர்ப்பிக்ப்பட்ட குத்தகை விண்ணப்பப் படிவமும் இரத்துச் செய்யப்பட்டு மீண்டும் பொதுமக்களும் விண்ணப்பிக்க கூடிய வகையில், பகிரங்க அறிவித்தல் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாக நகர சபை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நகர சபை உறுப்பினர் கோ.கருணானந்தராசாவின் மோசடி குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்களின் கையொப்பத்துடன் கூடிய மகஜர் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வல்வெட்டித்துறை மக்களுக்கும், இந்த மண்ணுக்கும் கிடைக்கவேண்டிய வருமானம் நகர சபை உறுப்பினர் என்ற பதவியைப் பயன்படுத்தி தனி நபர்களால் கொள்ளையிடப்படுவதைத் தடுத்து நிறுத்துமாறு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடம் நடவடிக்கை வேண்டும் என்றும் நகர சபைத் தலைவர் ஊடாகக் கோரிக்கையும் விடுத்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக நகர சபைத் தலைவரால் சில அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்நது, 2014ஆம் ஆண்டுக்கான நகர சபையின் வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கச் செய்யும் நோக்கத்துடன் தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவரும் தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளருமான சூ.சே.குலநாயகம் தலைமையில், தனது நெருங்கிய சகாக்களான ஏற்கனவே மாட்டிறைச்சிக் குத்தகை ஊழலில் சம்பந்தப்பட்டு அரசியல் செல்வாக்கினால் காப்பாற்றப்பட்ட உப தலைவர் க.சதீஸ் மற்றும் இந்த மோசடியில் சம்பந்தப்பட்ட கோ.கருணானந்தராஜா ஆகிய மூன்று உறுப்பினர்களுடன் இணைந்து வரவு செலவுத் திட்டத்தைத் தோற்கடிக்கப்போவதாக தலைவரை மிரட்டி வருவதுடன் ஊடகங்களுக்கும் செய்திகளை அனுப்பி வருகின்றனர். அதே வேளை இத்தகைய மோசடிகள் எதிலும் சம்பந்தப்படாத இளைஞர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்றுள்ள உறுப்பினரான க.மயூரன் அவர்களையும் தமது பிரதேச அபிவிருத்திக்காக அரசியல் வேறுபாடுகள் இன்றி உழைத்து வரும் ஈபிடிபியின் இரு உறுப்பினர்களையும் தமது பதவியைக் குறி வைத்த சகதிக்குள் இழுத்துக் கொண்டிருப்பது வல்வெட்டித்துறை மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வல்வெட்டித்துறையின் பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வட மாகாண சபைத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட க.சிவாஜிலிங்கத்தின் பிரத்தியேக செயலாளர்களில் ஒருவராகவும் கோ.கருணானந்தராசா நியமிக்கப்படவுள்ளார் என்பதும் குறிப்பிடத் தக்கது.
1 comments :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள்.
இப்படி பட்ட கள்ளர் கூட்டத்தை அவர்களின் மூஞ்சியில் மட்டுமல்ல, பேச்சுக்கள், நடத்தைகள் மூலமும் தெளிவாக புரிந்து கொள்ளலாம். இப்படியான கள்ள நோக்கம் கொண்ட சாக்கடை ஊத்தை அரசியல்வாதிகளை தெரிவு செய்ததே மகாபெரும் தப்பு. அதுமட்டுமல்ல இதுகள் தான் தமிழர் மத்தியிலுள்ள கெட்ட பேய்கள்.
வோட்டு போட்ட மக்களை நினைக்க கவலையாக இருக்கிறது.
Post a Comment