நெல்சன் மண்டேலாவின் மிகப் பெரிய வெண்கலத்திலான உருவச் சிலை திறந்து வைப்பு !!
தென் ஆப்பிரிக்கா முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு பல மாதங்களாக அவதி ப்பட்ட நிலையில், கடந்த ஐந்தாம் திகதி ஜோகனஸ்பர்க் நகரில் மரணம் அடைந்தார். அவரது மறைவையடுத்து தென் ஆப்பிரிக்க அரசு சார்பில் 10 நாள் துக்கம் அனுஷ்டிக்கப்பட்டது. அவரது உட லுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 10ம் திகதி ஜோகன ஸ்பர்க் மைதானத்தில் நடந்தது. அதில் நூற்றுக்கு மேற்பட்ட உல கநாட்டுத் தலைவர்கள் பங்கேற்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
அதை தொடர்ந்து பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் 3 நாட்கள் தலைநகர் பிரிட்டோரியாவில் உள்ள அரசு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான மக்கள் வரிசையில் காத்திருந்து அந்த மாபெரும் தலைவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
மண்டேலாவின் உடல் இளம் வயதில் அவர் வாழ்ந்த சேப் மாகாணத்தின் பூர்வீக குனு கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ராணுவ விமானத்தில் கொண்டு வரப்பட்ட அவரது உடல் முதாதா நகரில் இருந்து சாலை வழியாக 31 கி.மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரவு முழுவதும் அவரது உடல் இங்கு வைக்கப்பட்டிருந்தது. ஏராளமான பொதுமக்கள் விடியவிடிய நீண்ட வரிசையில் காத்திருந்து மண்டேலாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்தனர்.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் சுமார் 5 ஆயிரம் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர். இறுதி ஊர்வல பாதையில் ஆயிரக்கணக்கான மக்கள் மனித சங்கிலி அமைத்து அந்த ஒப்பற்ற தலைவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்து வழியனுப்பி வைத்தனர்.
மண்டேலாவின் உடலை சுமந்த வாகனம் ஊர்வலமாக புறப்படதும் 21 பீரங்கி குண்டுகள் முழங்க முழு ராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவின் தேசிய கொடியை சுமந்த விமானப்படை ஹெலிகாப்டர்கள் மண்டேலாவின் உடலை சுமந்து சென்ற வாகனத்தின் மீது தாழ்வாக பறந்து மலரஞ்சலி செலுத்தின.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ், ஈரான் துணை ஜனாதிபதி முஹம்மது ஷரியத் மதாரி உள்பட பல நாடுகளை சேர்ந்த ஏராளமான தலைவர்கள் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
கல்லறை அருகே அவரது சவப்பெட்டி வைக்கப் பட்டிருந்த தற்காலிக கூடாரத்தில் மண்டேலா இந்த பூமியில் வாழ்ந்த ஆண்டுகளை குறிப்பிடும் வகையில் 95 மெழுகுவர்த்திகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.
மனைவி, உறவினர் மற்றும் அவர் மீது உயிரையே வைத்திருந்த பல்லாயிர க்கணக்கான மக்களின் கண்ணீருக்கிடையே அந்த மாபெரும் தலைவரின் உடல் ஞாயிறு மாலை கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டது. அவர் மறைந்து 10 நாட்களே ஆன நிலையில், உலகிலேயே அவருக்கான மிகப் பெரிய சிலை, தென் ஆப்ரிக்கத் தலைநகர் பிரிட்டோரியாவில் திறந்து வைக்கப்பட்டு நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டுள்ளது.
வெண்கலத்திலான மண்டேலாவின் அந்த உருவச் சிலை, ஒன்பது மீட்டர்கள் உயரமும் நான்கரை டன் எடையும் கொண்டது. பிரிட்டோரியாவில் அரசு தலைமையகமான யூனியன் கட்டிடத்துக்கு எதிரேயுள்ள புல்வெளியில் இந்தச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டினை நெல்சன் மண்டேலா முன்னெடுத்து சென்றார் என்பதை குறிக்கும் வகையில் இரண்டு கைகளையும் நீட்டி விரித்த வண்னம் அவரது சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரந்து விரிந்த மண்டேலாவின் கைகள் அனைவரையும் அணைத்து செல்ல அவர் முற்பட்டதை சுட்டிக்காட்டுகிறது என்று சிலையை திறந்து வைத்த தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் ஜூமா புகழாரம் சூட்டினார். தென் ஆப்ரிக்காவின் இன மோதல்கள் முடிவுக்கு வந்த தினமாக டிசம்பர் 16ம் தேதி மண்டேலாவின் உருவச் சிலை, திறந்து வைக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment