Monday, December 2, 2013

மட்டக்களப்பில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் அதிகரிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் எயிட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம் ஏற்பாடுசெய்த மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வு நேற்று சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற்றது.

இந்த பேரணி மட்டக்களப்பு நகரின் ஊடாக வெள்ளப்பாலம் பஸ்நிலையம் வரை சென்று திருமலை–மட்டக்களப்பு பிரதான வீதியூடாக இலங்கை போக்குவரத்துசபை நிலையம் வரை சென்று மீண்டும் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினை வந்தடைந்தது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெண் சாரணிய கிழக்கு மாகாண ஆணையாளர் திருமதி டிலாந்தினி மோகனகுமார் மற்றும் பொதுச்சுகாதார பரிசோதகர்கள், பெண் சாரணிய மாணவர்கள், லியோ கழக உறுப்பினர்கள், தேசிய கல்விக் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு நினைவுச் சின்னம் அணிவிக்கப்பட்டதுடன் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

ஊர்வலத்தில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் மற்றும் அதன் தடுக்கும் வழிமுறைகளைக் கொண்ட பதாகைகளை ஏந்தியவாறு வாகனங்களும் பேரணியாக சென்றன. அதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com