பாடசாலை மாணவர் கொலை விவகாரம் : மடிகே மிதியாலயில் மக்கள் ஆர்ப்பாட்டம்
சுமார் மூன்று மாதங்களுக்கு முன்னால் குருநாகல் மாவட்டம் வாரியபொலைக்கு அருகாமையில் அமைந்துள்ள மடிகே மிதியாலை எனும் கிராமத்தில் உள்ள மடிகே மிதியால மத்திய கல்லூரியில் 18 வயதான முஹம்மத் ரிபாத் யூசுப் என்ற மாணவனின் உடல் தூக்கில் தொங்கி, உயிரிழந்த நிலையில் ஊர் மக்களால் கண்டு பிடிக்கப் பட்டது.
இந்த நிகழ்வு ஒரு திட்டமிடப்பட்ட கொலையே என பாதிக்கப்பட்டவரின் குடும்பமும், ஊர் மக்களும் உரிய அதிகாரிகளிடம் கூறிய போதும், மரணப் பரிசோதகர் இது தற்கொலைதான் என அறிக்கை கொடுத்திருந்தார். மேலும் மடிகே மிதியாலைக்கு பொறுப்பான வாரியபொல போலிஸ் தரப்பும் அதையே தனது முடிவாகவும் அறிவித்திருந்தது.
இருந்தும் பாதிக்கப்பட்டோரின் முயற்சியால் இந்த விடயம் மேலிடத்திற்கு அறியப்படுத்தப்பட்டு, பின்னர் இந்த மரண விசாரணையை குளியாப்பிட்டிய போலிஸ் பிரிவு ஒன்றிற்கு ஒப்படைக்கப்பட்டிருந்தது .
இதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட விசாரணையில் இது திட்டமிடப்பட்ட கொலைதான் என உறுதியானதுடன், அதனுடன் சம்பந்தப் பட்ட நான்கு பேர் சென்ற 28 ஆம் 29 ஆம் திகதிகளில் குளியாப்பிட்டிய போலிஸ் பிரிவால் கைதுசெய்யப்பட்டனர் .
இந்த கொலைச் சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் 2013.12.03 அன்று மடிகே மிதியாலையில் ஒரு பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வாரியபொல போலிஸ் நேர்மையாக நடக்கவில்லை என்றும், இன்னும் இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய இன்னும் சிலர் கைது செய்யப் படவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோசம்களை எழுப்பினர்.
0 comments :
Post a Comment