Tuesday, December 3, 2013

சந்திரனுக்கு தனது முதலாவது விண்கலத்தை ஏவியது சீனா!

சந்திரனில் சென்று தரையிறங்கும் விண்வண்டி அடங்கிய தனது முதலாவது விண்கலத்தை சீனா விண்ணுக்குச் செலுத்தியதன் மூலம் உலகில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவை அடுத்து சந்திரனில் தரையிறங்கி ஆய்வு செய்யும் ஆளில்லா விண்கலத்தை விண்ணில் செலுத்திய 3 ஆவது நாடாக சீனா வானியல் துறையில் தனது பெயரைப் பதிவு செய்துள்ளது.

திங்கள் அதிகாலை இந்த ஆளில்லா விண்கலமான சாங்கே-3 (Chang'e) லோங் மார்ச் 3B எனும் ராக்கெட் மூலம் சிச்சுவான் மாகாணத்திலுள்ள ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டுள்ளது இந்தவிண்கலத்திலிருந்து டிசம்பர் மத்தியில் சூரிய சக்தியால் இயங்கும் ஜேட் ரேபிட் எனும் விண்வண்டி (rover) சாங்கே-3 இல் இருந்து பிரிந்து சந்திரனில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனா பூமிக்கு வெளியே தனது முதலாவது விண்வெளி வீரரைச் செலுத்தி சரியாக 10 வருடங்களில் இந்த சந்திர ஆய்வு கலம் செலுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாங்கே-3 விண்கலம் அமெரிக்க ரஷ்ய விண்கலங்களைப் போல் அல்லாது சந்திரத் தரையை ஆய்வு செய்து ஜேட் ரேபிட் இறங்கக் கூடிய பாதுகாப்பான இடத்தை முதலில் கண்டு பிடிக்கும் திறமை வாய்ந்தது என்றும் இந்த இடம் அநேகமாக சைனஸ் இரிடும் (Sinus Iridum) என்ற குழிக்கு அண்மையில் அமைந்திருக்கும் எனவும் சீனா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

சீன மொழியில் Yutu என அழைக்கப் படும் ஜேட் ரேபிட் (Jade Rabbit) விண்வண்டி 6 சில்லுகளும் 4 கமெராக்களும் சந்திரத் தரையைத் துளையிட்டு ஆய்வு செய்யக் கூடிய இரு தானியங்கிக் கால்களும் கொண்டதாகும் என்பதுடன் ஜேட் ரேபிட்டின் ஆய்வுகள் அமெரிக்க விண்வெளிக் கழகமான நாசாவின் சந்திரத் தூசுகள் குறித்த ஆராய்ச்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment