த.தே.கூ வை எச்சரிக்கின்றார் ஆனந்த சங்கரி!! சம்பந்தனுக்கு சங்கரி முழுவிளக்கத்துடன் கடிதம்!
நான் நடிப்பவனுமல்ல. புளுடாக்காரனுமல்ல. ஆனால் ஒரு உண்மையென்ன வெனில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தந்தை செல்வாவால் உருவாக்கிய இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினருமா வேன். மிக அக்கறையுடன் முன்னதாகவே பரிசீலித்திருக்க வேண்டிய சில விடயங்களை மிக ஆதங்கத்துடன் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகின்றேன்.
இப்போதே சில விடயங்களைக் கட்டுப்படுத்த தவறுவீர்களேயானால் அவை தமிழர் களினதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினது ஒற்றுமைக்கும் பெரும் பங்கத்தை ஏற்படுத்துவது மட்டுமன்றி, பெரும் தேசிய அனர்த்தத்துக்கும் வழிகோலும் என எச்சரிக்க விரும்புகிறேன்' என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
'நாம் இருவரும் வாழ்வின் எல்லையை கிட்டியுள்ள வேளையில், மிக மூத்த அரசியல் தலைவர்கள் என்ற கோதாவில் சந்தர்ப்பமும் சூழ்நிலையும் எம்மீது சுமத்தியிருக்கும் பொறுப்பைத் தட்டிக்கழிக்காது நாளுக்குநாள் நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் எமது அப்பாவி மக்களை கைவிட முடியாது. எம்மிருவரின் இலக்கும் ஒன்றாகவே இருந்தும் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாடு வெள்வேறாக இருப்பது துரதிர்ஸ்டமே! இக்கட்டத்தில் எந்த விடயம் பற்றியும் நான் விபரிக்க விரும்பவில்லை. கடந்த கால நிகழ்வுகளைக் கிண்டிக் கிளறவும் விரும்ப வில்லை.
இற்றைக்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன் அதாவது 1972ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி திருகோணமலையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய முன்னணியின் அங்குரார்ப்பண நிகழ்வில் அதன் ஆரம்பகால உறுப்பினர்களாக இணைந்து கொண்டது உங்களுக்கு ஞாபகமிருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும்.
அன்றைய தினம்தான் இருபெரும் தமிழ் அரசியல் கட்சிகளான இலங்கைத் தமிழரசுக் கட்சி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் தலைவர்களாகிய கௌரவ சா.ஜே.வே.செல்வநாயகம் அவர்களும், கௌரவ. ஜீ.ஜீ.பொன்னம்பலம் அவர்களும் தமிழ் மக்களின் மிக இக்கட்டான நிலைமையை உணர்ந்து தமது நீண்ட கால பகைமையை மறந்து தமது கட்சிப் பிரமுகர்கள் தொண்டர்களோடு இருசாராரும் ஒன்று கலந்து தமிழர் ஐக்கிய முன்னணியில் சேர்ந்தனர்.
அதன்பின் 1976இல் வட்டுக்கோட்டை மகாநாட்டில் கட்சியின் பெயர் தமிழர் விடுதலைக் கூட்டணி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு கட்சியை வலுப்படுத் தவும் தமிழர்களின் ஒற்றுமையை வளர்க்கவும், கௌரவ. சௌ. தொண்டமான், கௌரவ சா.ஜே.வே. செல்வநாயகம், கௌரவ ஜீ.ஜீ. பொன்னம்பலம் ஆகியோர் கட்சியின் முக்கூட்டுத் தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1977ஆம் ஆண்டு மாசி மாதத்திலும், சித்திரை மாதத்திலும் அதிர்ஷ்டமற்ற தமிழ் மக்கள் அடுத்தடுத்து முறையே தலைவர்களான கௌரவ ஜீ.ஜீ.பொன்னம்பலம், கௌரவ. சா.ஜே.வே. செல்வநாயகம் ஆகியோரை இழந்ததோடு கட்சியின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக கௌரவ. சௌ. தொண்டமான் சிறிது ஒதுங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து மு.சிவசிதம்பரம், அ.அமிர்தலிங்கம் ஆகியோர் முறையே தலைவரா கவும், செயலாளர் நாயகமாகவும் செயற்பட்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் மறைவைத் தொடர்ந்து ஜுன் மாதத்தில் நடந்தேறிய நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி போட்டியிட்டு தமிழர் பெரும்பான்மையினராக உள்ள 19 தேர்தல் தொகுதிகளில் 18 ஸ்தானங்களைத் தனதாக்கிக் கொண்டது.
தமிழ் இஸ்லாமிய பிரதிநிதித்துவத்துக்காக இரட்டை அங்கத்தவர் தொகுதியாக இருந்த மட்டக்களப்பில் கூட்டணி இருவரை நியமித்ததன் விளைவு கல்குடாவில் ஐ.தே.கட்சியிடம் தோல்வியடைய ஏற்பட்டது. ஒரு தனிநபரைத் திருப்தி செய்ய கட்சி தவறான முடிவை எடுக்காதிருந்தால் சகல தொகுதிகளையும் வென்றிருக்க முடியும்.
கூட்டணி ஆரம்பித்த காலத்திலிருந்து கட்சியின் நடவடிக்கைகள் பற்றி நீங்கள் அறியாததல்ல. வடக்கிலும் கிழக்கிலும் பல பிரச்சாரக் கூட்டங்களை நடத்தினோம். அச்சந்தர்ப்பங்களின் போதெல்லாம் எமக்கேற்பட்ட கஷ்டமான நிலைகள், அவமானங்கள், மன உளைச்சல்கள், தலைவர்கள் பட்ட கஷ்டங்கள் அதிலும் பல்மடங்கு மேலாக அன்றைய இளைஞர்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லில் அடங்காது என்பது மட்டுமல்லாமல் எமது நினைவுகளிலுமிருந்து அகலா. எமது இளைஞர்கள் எத்தனைபேரை இழந்தோம்.
சிலரின் தலைகள் சிதறடிக்கப்பட்டன. இத்துர்ப்பாக்கியவான்களைப் பற்றி இன்று யார் நினைத்துப் பார்க்கிறார்கள்? நம்நாட்டிலும் சரி பிறநாட்டிலும் சரி கைது செய்யப்பட்டு - தப்பி வந்து நாட்டைவிட்டு ஓடிப்போன சிலர் சொற்ப அதிர்ஷ்ட சாலிகளே. உங்களுக்கு ஞாபகம் இருக்குமென நம்புகிறேன். இரு தலைவர்கள் மு.சிவசிதம்பரம் தா.சிவசிதம்பரம் இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக கட்சிப் பணிகளில் ஈடுபடவில்லை. ஒருவர் நீண்ட காலம் சுகவீனமாகவும், மற்றயவர் வவுனியா நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த செல்லத்தம்பு அவர்களுடன் ஏற்பட்ட அபிப்பிராய பேதம் காரணமாகவும் ஒதுங்கியிருந்தனர்.
அந்தக் காலத்தில் அவர்களின் பங்களிப்பை நானே மேற்கொண்டேன். எமது கட்சி செயல்வீரர்கள், சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மிக்க மிருகத்தனமாக கொலை செய்யப்பட்டனர். அவர்களின் பெயர்களைக் கூட இப்போ யாரும் உச்சரிப்பதில்லை. இன்றைய தலைமுறையினருக்கு இந்த வரலாறு தெரியாது – தலைவர்கள் உட்பட இக்காரணங்களினாலேயே உங்களுக்கும், எனக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தர் களும், வாகனமும் கொடுக்கப்பட்டிருந்தது.
அண்மையில் நடைபெற்ற மாகாண சபைத் தேர்தலின்போது இவ்விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டது. சில சமயம் எமது நண்பர்களில் சிலர் நான் மரணிப்பதை விரும்பினார்கள் அல்லது எதிர்பார்த்தார்கள். வி.தர்மலிங்கம், ஆலாலசுந்தரம் போன்றோருக்கு ஏற்பட்டது போன்று நடக்குமென. தர்மலிங்கம் அவர்களின் தொண்டைக்குள் சிக்கி நின்ற அவரின் பற்களை அவர் விழுங்க முன்போ அல்லது விழுங்க வைக்க முன்போ அவர் உயிர் பிரிந்துவிட்டது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் எத்தனை சந்தர்ப்பங்களில் அவமானப்படுத்தப்பட்டு மனக்கஷ்டம் கொடுக்கப்பட்டது மட்டுமன்றி அடியும் வாங்கியுள்ளார். அதிகாரிகளிடமென்பது நீங்கள் அறியாததல்ல. நிச்சயமாக இன்று உங்களுடன் இருந்து செயலாற்றும் கட்சி உறுப்பினர் அதுபற்றி நன்கறிவர். ஓர் சந்தர்ப்பத்தில் சட்டமறுப்புச் செய்த என்னை கொழும்பிலும், என்னுடன் தண்டிக்கப்பட்ட ஐந்து கட்சித் தொண்டர்களை யாழ்ப்பாண சிறைச்சாலையில் வைத்தும் ஒரே நாளில் விடுதலை செய்யப்பட்டோம்.
யாழ்ப்பாணத்தில் இளைஞர்களை வரவேற்கச் சென்ற அமரர் அமிர் அவமானப்படுத்தப்பட்டு பிடரியில் அடிவாங்கியதோடு, அவரின் மனைவி சகோதரி மங்கையற்கரசி ஜீப்பினுள் இருக்கத்தக்கதாக பொனற்றின் மீதேறி சிங்களப் பொலிஸார் கெட்ட வார்த்தைகளால் பேசி பைலா ஆடிய சம்பவம் - இதுமட்டுமல்ல இதுபோன்ற மோசமான பலசம்பவங்கள் எமது தலைவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஏற்பட்டது.
கடந்தகாலம் பற்றி எதுவுமே தெரியாத இன்றைய இளம் சமூகத்திற்கு இப்பேற்ப்பட்ட சம்பவங்கள் பற்றித் தெரிய வைக்க வேண்டும். பல தலைவர்கள் - இளைஞர்கள் செய்த தியாகங்கள் பற்றிய எமது இயக்கத்தின் சரித்திரத்தையும் மக்கள் அறிந்திருக்க வேண்டும். எதுவித பங்களிப்பும் செய்யாமல் இன்று பல புதுப்புதுத் தலைவர்கள் தினமும் உருவாவதைக் காண்கிறோம்.
கடந்த காலத்தை கிளறுவது எனது நோக்கமுமல்ல. அதற்கு இது நேரமுமல்ல. தமது மக்களின் விடுதலைக்காக பல தியாகங்களைச் செய்த தலைவர்களையும், இளைஞர்களையும் பற்றிய வரலாறை இன்றைய தலைமுறையினருக்குத் தெரியப்படுத்தினால் எனக்கு மிகவும் திருப்தியைத் தரும். இவைகள் எல்லாம் மறக்கப்பட்டு பெரிதாக எத்தியாகத்தையும் செய்யாதவர்களும், எமது பக்கம் தலைவைத்துப் படுக்காதவர்களும் பெரும் தியாகம் செய்தவர்களைப் போல தம்பட்டம் அடிக்கின்றனர்.
நான் நடிப்பவனுமல்ல. புளுடாக்காரனுமல்ல. ஆனால் ஒரு உண்மையென்ன வெனில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும், அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணைந்து தந்தை செல்வாவால் உருவாக்கிய இன்றைய தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஆரம்பகால உறுப்பினருமாவேன். பல்வேறு குழுக்களுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டவே தந்தை செல்வா அவர்கள் முக்கூட்டுத் தலைவர்களுள் ஒருவராகச் செயற்பட்டார். 1977ஆம் ஆண்டு அவர் இறந்தபோது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவராகவே கூட்டணியின் கொடியாகிய உதயசூரியன் கொடியால் போர்க்கப்பட்டே இறுதியாத்திரை நடைபெற்றது.
நாமெல்லாரும் இப்போது அறிய வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் தமிழர் விடுதலைக் கூட்டணி எந்தச் சந்தர்ப்ப சூழ்நிலையில் ஏற்படுத்தப்பட்டது என்பதே. மிகப்பகைமை கொண்ட தனித்தனி கட்சிகளுக்குத் தலைமை தாங்கிய இரு கட்சிகளின் தலைவர்கள் தாம் பிரதிநிதத்துவப்படுத்தும் தமிழினத்தின் நன்மை கருதி தமக்குள் இருந்த அத்தனை குரோதங்களையும் மறந்து ஒன்றிணைய சம்மதித்தமையே. இந்த அணி அமைக்கப்பட்ட நாளிலிருந்து இரு அணியைச் சேர்ந்த தொண்டர்களும் தலைவர்களும் தமக்குள் இருந்த அபிப்பிராய பேதங்களை மறந்து ஒன்றாகச் செயற்பட ஆரம்பித்தனர். துரதிர்ஷ்ட வசமாக வெளிச்சக்திகளின் தலையீட்டால் 2003ஆண்டு வரை இருந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. மிகத் துன்பமான பல சம்பவங்கள் அதன்பின் ஏற்பட்டன.
2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நியமனம் கோரப்பட்ட வேளையில் என்னால் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கை 27.12.2009ஆம் திகதி வெளியாகிய ஆங்கிலத் தினசரியான த ஐலண்ட் பத்திரிகையில் 'ஆனந்தசங்கரி யாரையும் ஆதரிக்கவில்லை சமாதான முயற்சிக்காக 15 அம்சத் திட்டத்தை முன்வைக்கிறார்' என்ற தலைப்போடு முழுமையாகப் பிரசுரிக்கப்பட்டது. எனது வேண்டுகோளை நீங்கள் கவனத்தில் கொள்ளாது ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறு மக்களுக்கு கோரிக்கை விடுத்து அவருக்கு யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் 113,000 வாக்குகளைப் பெற்றுக் கொடுத்தீர்கள். அதன்பின் 2010 ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்பு போட்டியிட்டு யாழ் தேர்தல் மாவட்டத்தில் 63,000 வாக்குகளைப் பெற்று 9 ஆசனங்களில் 5ஐ கைப்பற்றினீர்கள்.
தேர்தலின் பின் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயற்பட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தீர்கள். ஆரம்பத்தில் அக்கோரிக்கையை நான் எதிர்த்தேன். பின் மறுபரிசீலனை செய்து கள நிலைமையை அறிந்து சத்திரசிகிச்சைக்காக இந்தியா சென்றிருந்த உங்களை அங்கு வந்து பார்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எமது ஆதரவை தருவதாகத் தெரிவித்தேன். அதன்பின் கொழும்பிலிருக்கும் உங்கள் காரியாலயத்திற்கு நானும் சித்தார்த்தனும் வந்து சேனாதிராசா போன்றோரிடம் எமது முடிவைத் தெரிவித்தோம். அதன்பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை வட கிழக்கில் நடந்த பிரதேச சபைத் தேர்தல்கள் கிழக்கு மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றில் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்டு முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம்.
அண்மையில் நடைபெற்ற வடமாகாண சபைத் தேர்தலில் அழைப்பு விடுக்கப்பட்ட பெரும்பாலான பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்ட போதும் பல கூட்டங்களுக்கு எனக்கு அழைப்புக் கிடைக்கவில்லை. நடந்த மாகாண சபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான வேட்பாளனாக போட்டியிட்டதை நீங்கள் அறிவீர்கள். அங்கே இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் மூவரும் ஈ.பி.ஆர்.எல்.எப் சார்பில் ஒருவரும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் நானுட்பட மூவரும் போட்டியிட்டோம். நியமன தினத்தின்பின் சில பத்திரங்களைக் கையளிப்பதற்காகவும் பல தடவைகள் அழைப்பு விடுத்தும் இக்கடிதம் எழுதும்வரை தமிழரசுக் கட்சியின் 3 வேட்பாளர்களில் ஒருவரும் என்னைச் சந்திக்கவில்லை.
இம்மூவரையும் நான் ஏறத்தாள 40, 45 ஆண்டுகளாக நன்கு அறிவேன். வாக்குறுதி அளிக்கப்பட்டபடி சகல கட்சிகளையும் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற முக்கிய கூட்டம் நடப்பதற்கு முன்பே 5 கட்சித் தலைவர்களில் இருவர் கிளிநொச்சிக்கு வந்து எனக்கு அழைப்பு விடுக்காமல் எமது அணியினரைச் சேர்த்துக் கொள்ளாமல் தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் மூவரை மட்டும் ஆதரித்து பிரச்சாரம் செய்தார்கள். 5 தலைவர்கள் அடங்கிய கூட்டம் கடைசிவரை நடைபெறவில்லை. இது ஒரு மிகத்தப்பான முன்மாதிரியாகும். இதைத் தொடர்ந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த இரு மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் வந்து தொடர்ந்து பல கூட்டங்களில் அந்த 3 வேட்பாளர்களை மட்டும் ஆதரித்துப் பேசினர். எம்முடன் எதுவித தொடர்பும் கொள்ளவில்லை. மிகப் பொறுப்புள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அதே 3 வேட்பாளர்களை ஆதரித்து அநேகமாக எல்லாக் கூட்டங்களிலும் பேசியது மட்டுமன்றி அவர்களை ஆதரித்து நகர்ப்பகுதியில் துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தார்.
மிகமோசமான செயல் யாதெனில் முதலமைச்சர் வேட்பாளருக்குத் தெரியாமலே அவரைக் கொண்டு துண்டுப் பிரசுரங்கள் மேற்படி மூவருக்கு ஆதரவாக வழங்கப்பட்டது. எனது காரியாலயத்திற்கு நீங்களும் முதன்மை வேட்பாளரும் வந்தபோது இது தொடர்பாக முறையிட்டேன். கடைசிவரை ஒரு கூட்டத்திலேனும் நீங்கள் கலந்துகொள்ளவில்லை. நீங்கள் கிளிநொச்சிக் கூட்டங்களில் கலந்து கொள்ளாதது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் இந்த நாட்டில் எந்தக் காலத்திலும் எந்தத் தேர்தலிலும் நடக்காத மிக அருவருக்கத்தக்க முறையில் என்னைத் திட்டமிட்டுத் தோற்கடிக்க உதவியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. பல சிரமங்கள் மத்தியில் எற்படுத்தப்பட்ட இந்த ஒற்றுமையை குலைக்க சதி செய்யப்பட்டுள்ளது. இந்தக் கீழ்த்தரமான செயலில் ஈடுபட்டவர்கள் எமது மக்களை மீட்டெடுப்பார்கள் என்ற நம்பிக்கையை நான் உண்மையில் இழந்துவிட்டேன்.
பைபிள் கதையில் வருவதுபோல கோலியாத் என்ற இராட்சசனை ஒரு சிறு பையன் வீழ்த்திவிட்டான் என்று சிலர் பெருமைப்படலாம். ஆனால் துரதிர்ஷ்ட வசமாக எனது கருத்து என்ன வெனில் ஜனநாயகத்தின் படுகொலையெனக் கூறுவேன். நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக 50 ஆண்டுகளுக்கு மேல் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ஒரு சாதாரண மனிதன் நான். மிக்க வேதனை தருகின்ற விடயம் என்னவெனில் கட்சியின் செயற்பாடுகளை பொருத்தமற்ற சிலர் கையாளுவதே. இந்தக் கூட்டமைப்பிலுள்ள 5 கட்சிகளின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடமை உங்களுக்கு உண்டு. ஒரு தனிமனிதனாக சரியானதை மக்களுக்கு வேண்டியதையுமே நான் செய்கிறேன். திட்டமிடும் சதிகாரரிடமிருந்து கட்சியைப் பாதுகாக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். எனக்கு எதிராக போடப்படும் தடைகளை எதிர்த்து தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்காக உழைப்பேன்.
அரசியல் கத்துக்குட்டிகளின் தலைமையை ஏற்று பின்தொடருவதா? அல்லது பல ஆண்டுகாலமாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தும் மீளும் வாய்ப்பின்றி தொடர்ந்து அதே நிலையிலுள்ள மக்களை விடுவிக்கும் பணியில் உங்களுடன் சேர்ந்து செயற்படுவதா என்பதை அறியத்தரவும்' என்று அவர் அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment