ஐநா விசேட பிரதிநிதி இன்று இலங்கை வருகை! நாளை வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சந்திக்கிறார்!
ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதியான சலோகா பெயானி இன்று திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரும் இவர் வடக்கிற்கு பயணம் செய்வதுடன், வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய பிரதிநிதிகளையும் சந்தித்துப் பேச்சு நடத்தவிருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
இலங்கை வரும் சலோகா பெயானி நாளை செவ்வாய்கிழமை யாழ். வலிகாமம் வடக்கு, கோணப்புலம் நலன்புரி நிலையத்துக்குச் செல்வாரென நிகழ்ச்சி நிரலில் உள்வாங்கப்பட்டுள்ளதெனவும் உயரதிகாரி ஒருவர் கூறினார்.
அங்கு செல்லும் அவர், நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களின் குறை நிறைகளைக் கேட்டறியவுள்ளார்.
அதன்பின்னர் வட மாகாண முதலமைச்சர் சீ. வி. விக்கினேஸ்வரனையும் அவர் சந்தித்து பேச்சு நடத்துவார்.
புதன்கிழமையன்று இறுதிக்கட்ட மோதல் நடைபெற்ற முல்லைத்தீவு மாவட்டத்துக்குச் செல்லும் அவர் மாவட்ட அரச அதிபர் நா. வேதநாயகம் மற்றும் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் மார்க் ஆகியோருடனும் பேச்சு நடத்துவார்.
மேலும் இவர் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறியையும் சந்தித்து கலந்துரையாடலாமெனவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment