Wednesday, December 25, 2013

குடும்பக் கட்டுப்பாடு ஊசி ஏற்ற சென்ற இளம் பெண்ணிற்கு நடந்தது என்ன? எவ்வாறு கோமா நிலைக்கு சென்று உயிரிழந்தார்?

கற்பிட்டி-வன்னிமுந்தலம் பகுதியில் வசிக்கும் மரிய சரோஜினி கோமஸ் (24 வயது) என்ற ஒரு பிள்ளையின் தாய் கற்பிட்டி வைத்திய அதிகாரியின் கற்பிட்டி அல் அக்ஷா சந்தியில் உள்ள தனியார் மருத்துவ நிலையத்தில் குடும்பக் கட்டுப்பாடு ஊசி ஏற்றியதன் பின் கோமா நிலைக்குச் சென்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குறித்து உயிரி ழந்த பெண்ணின் தாயான ரீடா செல்வராணி தெரிவிக் கையில்,

நான் எனது மகள் மற்றும் பேரப்பிள்ளையுடன் கற்பிட்டியிலுள்ள அரச வைத்தியருடைய தனியார் வைத்தியசாலைக்கு சென்றோம். மகளுக்கு கருத்தடை ஊசி ஏற்றிக் கொள்வதற்காகச் சென்றோம். அங்கு சென்ற பின்னர் எனது மகள் கைக்குழந்தையை என்னிடம் தந்துவிட்டு வைத்தியரின் அறைக்குள் சென்றார்.

சிறிது நேரத்தில் அறையைவிட்டு வெளியேவந்த மகள் ஊசி போடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சிறிதுநேரம் அவ்விடத்தில் இருந்தோம். அப்போது தனக்கு மயக்கம் வருவதாகக் கூறி மகள் கீழே விழுந்து விட்டாள். இதன் பின்னர் நான் குறித்த வைத்தியரைச் சப்தமிட்டு அழைத்து மகளுக்கு கடுமையாக உள்ளது. என்ன நடந்தது எனக் கத்தினேன். வெளியில் வந்த வைத்தியர் தனது காரில் மகளை ஏற்றிக்கொண்டு வைத்தியசாலைக்குச் சென்றார்.

கற்பிட்டி வைத்தியசாலையில் வைத்தியர்கள் பலர் மகளுக்குச் சிகிச்சை வழங்கிய அதன் பின்னர் மகளை அம்புலன்ஸ் மூலம் புத்தளம் வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று சிகிச்சை வழங்கினார்கள். பின்னர் எனது மகள் உயிரிழந்து விட்டதை நான் அறிந்து கொண்டேன் என்றும் அத்தாய் மேலும் தெரிவித்தார்.

இவ்வருடம் ஜனவரியில் திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தாயான தனது மனைவி குழந்தையுடன் முதலாவது நத்தாரை கொண்டாடுவதற்கான ஏற்பாடு களை செய்திருந்ததாக அவளது கணவரான தினேஸ் குமார அல்மேதா (வயது 26) தெரிவித்தார்.

உயிரிழந்தவரின் நீதவான் விசாரணை இன்று பகல் புத்தளம் பதில் நீதவான் முஹம்மட் இக்பால் முன்னிலையில் புத்தளம் வைத்தியசாலையில் இடம்பெற்ற போது பிரேத பரிசோதனை அறிக்கை பெறுவதற்காக சிலாபம் சட்ட வைத்திய அதிகாரியிடம் பிரேதத்தை ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு அந்த தனியார் வைத்தியசாலையில் குறித்த கருத்தடை ஊசி பாவனையானது விசாரணை முடியும் வரை விற்பனை செய்வதற்கும் மற்றும் பாவிப்பதற்கும் நீதவானால் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com