இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்க ஊடகங்களிலும் இன்று பரபரப்பாகப் பேசப்படும் செய்தி, அமெரிக்காவுக்கான இந்திய துணைத் தூதர் தேவயானி விவகாரம்தான். கடந்த பத்தாண்டுகளாகக் அமெரிக்காவின் எடுபிடிபோலச் செயல் பட்ட இந்திய அரசு, இந்தப் பிரச்னையில் சரமாரியாக எதிர் நடவடிக்கை எடுத்திருப்பது எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.
உலக நாடுகள் பலவற்றையும் அமெரிக்கா உளவு பார்த்த கதை சில மாதங்களுக்கு முன் ஸ்னோடென் மூலம் வெளியானபோதுகூட, இந்திய அரசு அடக்கியே வாசித் தது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் எல்லாம் அமெரிக்காவைக் கண்டித்தபோதும் இந்தியா, "உளவு எல்லாம் இல்லை. சும்மா கம்ப்யூட்டர் ஆய்வுதான்" என்று சொன்னபோது உலகமே நகைத்தது. இத்தனைக்கும் உளவுத் தகவல்கள் அதிகம் சேகரிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று.
ஆனால், இன்று இந்தியா எங்கும் உள்ள அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் அடையாள அட்டைகள் பறிக்கப்பட்டுள்ளன. விமான நிலைய அனுமதிச் சீட்டுகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகள் தொடங்கப் பட்டுள்ளன. மது வகைகள் உட்பட தேவையான சில பொருட்களை இறக்குமதி செய்துகொள்ளும் சலுகைகள் நிறுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கத் தூதரகங்களில் பணிபுரியும் இந்திய ஊழியர்களின் ஊதிய விவரங்களும் கோரப்பட்டுள்ளன. டில்லியில் உள்ள தூதரகத்தின் முன் போடப்பட்டிருந்த பாதுகாப்புத் தடுப்புகளும்கூட அகற்றப்பட்டுள்ளன. ஏதோ போர் சூழல்போல இருக்கிறது காட்சிகள்.
உலகளாவிய பங்காளிகள் எனக் கூறிக்கொண்டு அமெரிக்காவுடன் கைகோத்துத் திரிந்த மன்மோகன் அரசுக்கு இப்போது திடீரென ஏனிந்த ஆவேசம்? அமெரிக்க போர்க் கப்பலான நிமிட்சின் வருகை, இந்திய அரசின் இறையாண்மையையும்கூட விட்டுக்கொடுத்து இயற்றப்பட்ட 123 ஒப்பந்தம், நேரு காலத்திய அணிசேராக் கொள்கையில் இருந்து விலகி அயலுறவுக் கொள்கையில் அமெரிக்கச் சார்பு எடுத்தது... ஆகியவற்றுக்கு எழுந்த எதிர்ப்புகளை எல்லாம் கண்டுகொள்ளாமல் அமெரிக்காவை ஆதரித்து வந்தது காங்கிரஸ் அரசு. அப்படிப்பட்ட அரசு, திடீரென அமெரிக்காவை மிரட்டுவதைப்போல எடுக்கும் நடவடிக்கைகள் எல்லோருக்கும் வியப்புத்தான். தேர்தல் நெருங்குவது ஒரு காரணமாக இருக்கலாம். பி.ஜே.பி-யும் இந்தப் பிரச்னையில் முழுமையாக அரசை ஆதரிக்கிறது.
துணைத் தூதர் தேவயானி கோப்ரகடேக்கு நேர்ந்த அவமானம் எல்லோரையும் எரிச்சல்பட வைத்துள்ளது உண்மை. இந்தியாவில் இருந்து அழைத்துவரப்பட்ட வேலைக்காரப் பெண்ணுக்கு உரிய ஊதியம் வழங்காமல் அதிகம் வேலை வாங்கி யதாக அந்தப் பெண் கொடுத்த புகாரின் அடிப்படையிலும், அந்தப் பெண்ணுக்கு விசா பெறுவதற்காகப் பொய் ஆவணங்கள் சமர்ப்பித்ததற்காகவும் தேவயானி பொது இடத்தில் வைத்துக் கைதுசெய்யப்பட்டது, விலங்கிட்டு அழைத்து வரப்பட்டது, ஆடைகளைக் களைந்து சோதனையிடப்பட்டது ஆகியன அனைவருக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளன.
தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்பாடு (1961) தூதரக அதிகாரிகளுக்கு சட்ட நடவடிக்கைகளில் இருந்து சில காப்புரிமைகளை வழங்கியுள்ளது. எனினும், இந்தக் காப்புரிமைக்கு எல்லைகள் உண்டு. காப்புரிமை உள்ளது என்பதற்காக ஒரு தூதரக அதிகாரி உள்நாட்டுச் சட்டங்களை மீற இயலாது. மேலும், தூதரகப் பணிகள் தொடர்பான சட்ட மீறல்களுக்கு மட்டுமே இந்தக் காப்புரிமை உண்டு. இவற்றைச் சொல்லித்தான் இன்று அமெரிக்கா தன் செயலை நியாயப்படுத்துகிறது.
ஆனால், மேற்குறிப்பிட்ட நிபந்தனைகளை வலுவான நாடுகள் அப்படியே ஏற்றுக் கொள்வது இல்லை. தூதரக அதிகாரிகளுக்கு முழுமையான காப்புரிமைகள் உள்ளதாகவே அவை எடுத்துக்கொள்கின்றன. கடுங்குற்றச்சாட்டுகளில்கூட அவை தம் ஊழியர்களின் காப்புரிமையை விட்டுக்கொடுப்பது இல்லை.
2004 டிசம்பரில் ருமேனிய நாட்டின் புசாரெஸ்ட் நகரில் அமெரிக்கத் தூதரகத்தில் பணிபுரிந்த வான் கோதம் என்கிற கடற்படை ஊழியர் குடித்துவிட்டு காரோட்டிச் சென்றதோடு, சாலை விதிகளை மீறிச் சென்று மோதியதில் அந்த நாட்டு இசைக் கலைஞர் ஒருவர் கொல்லப்பட்டார். மூச்சுப் பரிசோதனையில் சாராயம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் ரத்தப் பரிசோதனைக்கு உடன்படாததோடு, ஜெர்மனிக்கு ஓடவும் செய்தார் வான் கோதம். அமெரிக்கா, தூதரகக் காப்புரிமையை விட்டுக்கொடுக்க மறுத்தது. அவரை ருமேனியாவுக்கு அனுப்பாமல், தானே ராணுவ விசாரணை ஒன்றை நடத்தி தண்டனை அளித்தது.
ஆனால், சிறிய நாடுகள் இப்படியான நிகழ்வுகளில் தம் அதிகாரிகளின் காப்புரி மையை விட்டுக்கொடுத்தன. 1997 ஜனவரியில் ஒரு சம்பவம். அமெரிக்காவுக்கான ஜார்ஜிய நாட்டுத் துணைத் தூதர் குயோர்கொ மகாரட்சே குடித்துவிட்டு காரோட்டி மோதியதில் நால்வர் காயமடைந்து ஒரு பெண் கொல்லப்பட்டார். ஜார்ஜியா தன் துணைத் தூதரின் காப்புரிமையை விட்டுக்கொடுத்தது. அமெரிக்க அரசு தன் நாட்டுச் சட்டப்படி அவரை விசாரித்துத் தண்டனை வழங்கியது.
தான் உலக மேலாண்மை வகிப்பதாகவே அமெரிக்கா இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறது. அமெரிக்கத் தூதர்கள் ஏதோ தங்கள் காலனிகளைக் கண்காணிக்க வந்த அதிகாரிகள் போலவே அந்தந்த நாடுகளில் நடந்துகொள்கின்றனர். பிப்ரவரி 2007-ல் அப்போதைய அயலுறவு அமைச்சரான பிரணாப் முகர்ஜி ஈரானுக்குச் சென்றார். அமெரிக்காவுடன் இந்தியா 123 ஒப்பந்தம் செய்திருந்த நேரம் அது. அப்போதைய அமெரிக்கத் தூதர் டேவிட் மல்ஃபோர்ட் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது, புதிய சட்டங் களின்பால் இந்திய அரசு கவனம் கொள்ள வேண்டும்' என்றார். அந்தச் சந்திப்பின்போது அவர் ரொம்பத் திமிராக நடந்து கொண்டார் என நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் எழுதியது.
சில மாதங்களுக்குப் பின் இங்கு வந்த அமெரிக்க ஆற்றல் துறைச் செயலர் ஈரானுடனான உறவு குறித்து இந்தியாவை எச்சரித்தார். எல்லாவிதமான அயலுறவு மரபுகளையும் அவர் மீறியதோடு, ஏதோ இந்தியாவுடன் சண்டைக்கு வந்ததுபோல' அவர் பேசியதாக நாளிதழ்கள் எழுதின.
இன்று காலம் வேகமாக மாறி வருகிறது. அமெரிக்காவின் உலக மேலாண்மை இன்று பலவீனமாகி உள்ளது. இந்தியா போன்ற நாடுகளின் பேர ஆற்றல் அதிகரித்து வருகிறது. ஐ.நா. அவையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராகிற கனவுடன் அது செயல்பட்டு வருகிறது. தனது பாரம்பரியமான அணி சேராக் கொள்கையில் இருந்து விலகி மேட்டிமைக் குழுக்களில் (நடவைந உடரடிள) இடம்பெயர்வதில் வெற்றி அடைந்துள்ளது.
இந்த நிலையின் ஒரு வெளிப்பாடாகவே இன்றைய மோதலை நாம் காண வேண்டி யுள்ளது. ஆனால், இந்த மோதல் எந்தப் பெரிய உறவு விரிசலுக்கும் இட்டுச் செல்லப்போவது இல்லை. ஏனென்றால் அது நல்லதல்ல என இருவருக்குமே தெரியும்.
இந்தியாவின் கண்டனத்தைக் கவனத்தில் கொண்டு கைது நிகழ்வை ஆராய்வதாக அமெரிக்கத் தரப்பில் இறங்கிவந்துள்ளனர்.
ஒன்றைச் சொல்லியாக வேண்டும். இந்தப் பிரச்னையில் இந்தியா, அமெரிக்கா என்ற இரு தரப்பையும் தாண்டி மூன்றாவது தரப்பும் உள்ளது. அது, அந்த வேலைக்காரப் பெண். தேவயானி மட்டுமல்ல் அவரும் ஒரு இந்தியக் குடிமகள்தான். தூதரக அதிகாரிகளுக்கு ஏகப்பட்ட சலுகைகள், ஊதியம் மற்றும் வசதிகள் அளிக்கப்படுகின்றன. ஒரு ஏழை வேலைக்காரப் பெண்ணை, குறைந்தபட்ச ஊதியமும் கொடுக்காமல் கொடுமையாக வேலை வாங்கியது உண்மையானால், அது அவ்வளவு எளிதாக விட்டுவிடக் கூடியதல்ல. அமெரிக்கா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்பது மட்டுமல்ல... தேவயானி உரிய முறையில் சட்டத்தின் முன் நிறுத்தப்படவும் வேண்டும்!
in case,If she is the cause of the poor servant's plight she is answerable.America has to go on with
ReplyDeletethe legal procedure.Diplomatic career or diplomatic ties cannot overrule the legal system of any country.