Tuesday, December 3, 2013

சிறீ பரதாலயாவின் ஆண்டு விழா!

'கல்விக்கு உயிர் கொடுத்தோர் மரணிப்பதில்லை' என்பது ஆன்றோர் வாக்கு. நம் நாட்டில் பிறந்து வெளிநாடுகளில் இன்று வசிப்போரில் பல்லாயிரக் கணக்கானோர் கல்விக்கு உயிர் கொடுத்துக் கொண்டேயிருக்கிறார்கள். அந்த வகையில் ஐக்கிய இராச்சியத்தின் கவன்ரி மாநகரில் இயங்கும் சிறீ பரதாலயா அக்கடமி என்ற நிறுவனத்தை நடாத்துபவர்கள், உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் கல்வி என்ற கொடையை அள்ளி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பல வருடங்களாக இயங்கும் இந்த நிறுவனத்தை சேவை மனப்பான்மையுடனும் வெற்றிகரமானதாகவும் நடத்துபவர்களில் மிகப் பெரும்பான்மையானோர் நமது நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள் என்பது நாமெல்லோரும் பெருமைப்படத்தக்க விடயம்.

கணிதம், விஞ்ஞானம்,ஆங்கிலம் உட்பட்ட பாடங்களுடன் இன்பத் தமிழ் மொழியும் இந்த நிறுவனத்தினால் கற்பிக்கப்படுகின்றது. புலம் பெயர்ந்து கவன்ரியில் வாழும் பல நூறு மாணவர்கள் இந்த நிறுவனத்தில் ஆர்வத்துடன் தமிழ் மொழியைப் பயின்று பலனடைந்து கொண்டிருக்கின்றனர்.

பரத நாட்டியம், இசை போன்ற நுண்கலை வகுப்புக்களையும் சிறீ பரதாலயா நடாத்தி வருகின்றமை சிறப்பம்சமாகும். இந்த வகுப்புக்களில் உலகின் பல நாடுகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பங்குபற்றி வருகின்றனர்.

இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் சிறீ பரதாலயாவின் ஆண்டு விழாவை வெகு விமரிசையாகக் கொண்டாடத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன.

நல்ல விடயங்கள் எங்கு நடந்தாலும் அவை ஊக்குவிக்கப்பட வேண்டும். அந்த வகையில் சிறீ பரதாலயாவின் நற்பணிகளையும் ஊக்குவித்துப் பாராட்ட வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com