Tuesday, December 10, 2013

ராஜீவ் கொலை வழக்கின் மரண தண்டனை கைதியின் மனுவை சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொட ர்பான தொடர் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டுமென்று கோரும் பேரறிவாளனின் மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக் கப்பட்டு தற்போது வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப் பட்டுள்ள பேரறிவாளன், சென்னையில் உள்ள தடா வழக் குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், 'ஜெயின் கமிஷன் விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து ராஜீவ் காந்தி கொலை சம்பவம் தொடர்பான சதித் திட்டத்தில் ஈடுபட்டு, இதுவரை விசாரணைக்கு உட்படுத்தப்படாத அத்தனை நபர்கள் குறித்தும் விசாரிப்பதற்காக பல்நோக்கு விசாரணை ஒழுங்கு முகமை அமைக்கப்பட்டது.

சி.பி.ஐ. அமைப்பின் கீழ் செயல்படும் இந்த முகமை தனது புலன் விசாரணையை சரிவர நடத்தவில்லை.இதனால் ராஜீவ்காந்தி கொலையில் தொடர்புடைய உண்மை யான குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. புலன் விசாரணை முறையாக நடத்தப்பட்டால் ராஜீவ்காந்தி கொலைக்கு காரணமான உண்மையான சதிகாரர்கள் கண்டறியப்படுவார்கள்.

ஆகவே, சதித் திட்டத்தில் ஈடுபட்டவர்கள் குறித்து முறையாக புலன் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுவதோடு, அந்த புலன் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும்' என்று அந்த மனுவில் பேரறிவாளன் கோரியிருந்தார்.

இந்த மனு தொடர்பான இரு தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த தடா வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி என்.தண்டபாணி, பேரறிவாளனின் மனுவை தள்ளுபடி உத்தரவிட்டார். முன்னதாக, பேரறிவாளனின் மனுவை எதிர்த்த சிபிஐ தரப்பு, இத்தகைய மனுவை தாக்கல் செய்ய அவரிடம் சரியான காரணங்கள் இல்லை என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com