ஆனந்தசங்கரி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வெளியேற்றம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி வெளியேற்றப்பட்டுவிட்டதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட போது தமிழரசுக் கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈபிஆர்எல்எப் ஆகிய கட்சிகளும் கட்சி சாரா உறுப்பினர்களும் உள்வாங்கப்பட்டிருந்தனர். 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட குத்து வெட்டுக்களால் கட்சி சாராத வகையில் உள்வாங்கப்பட்டிருந்த உறுப்பினர்களும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும் கூட்டமைப்பில் இருந்து வெளியேறியிருந்தது.
இந் நிலையில் இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களுக்கு பின்னர் கூட்டமைப்புக்கு எதிராக செயற்பட்ட தமிழர் விடுதலைக் கூட்டனி, புளொட் ஆகிய கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டு ஐந்து கட்சிகளின் கூட்டாக கூட்டமைப்பு செயற்பட்டது.
நடைபெற்று முடிந்த வடமாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்ட தமிழ் மக்களால் தூக்கியெறியப்பட்டு படுதோல்வியடைந்த தமிழர் விடுதலைக் கூட்டனி கூட்டமைப்பில் இருந்து வெளியேற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கையில், ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டனி நடைபெற்று முடிந்த மாகாணசபைத் தேர்தலில் அனைத்து இடங்களிலும் தோல்வியடைந்துள்ளது. அத்துடன் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் இருந்து மாறுபட்ட கருத்துக்களை கொண்டதாக அக் கட்சித் தலைவர் ஆனந்தசங்கரி காணப்படுகின்றார். இதனால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணித்துள்ளனர். தேர்தலின் பின் இன்று(10) ஜப்பான் விசேட தூதுவரை சந்திக்கும் வரை ஆறு தடவைகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர் மட்டத் தலைவர்களின் கூட்டங்கள் இடம்பெற்றன. அவற்றுக்கு நாம் ஆனந்தசங்கரியை அழைக்கவில்லை. அவர் எமது கட்சியில் இருந்து தற்போது வெளியேற்றப்பட்டு விட்டார். எனத் தெரிவித்தனர்.
1 comments :
மதியாதோர் வாசல் மிதியாதே, இது இவ்வளவு வயதான சங்கரியாருக்கு தெரியாதோ ? எப்ப இவர் அரசை எதிர்த்து கருத்து கூற தொடங்கினாரோ அன்றே , ( இவர் உயிரை பாது காத்த , அரசை நன்றி மறந்து ) இவர் அவமான படத்தொடங்கி விட்டார். பதவி ஆசை யாரைத்தான் எந்த வயசிலும் விட்டது, மானம் , ரோசம் என்றால் என்ன ?
Post a Comment