Saturday, December 28, 2013

வடபகுதி தனியார் போக்குவரத்துச் சேவையில் குழப்பத்தை ஏற்படுத்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் டெனிஸ் முயற்சி

வடபகுதியின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களின் தனியார் பேரூந்து போக்குவரத்துச் சேவையில் கடந்த சில நாட்களாக ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களே காரணம் என பலராலும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குறித்த மாவட்டங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியான பேரூந்து போக்குவரத்துச் சங்கங்களை கொண்டுள்ள போதும் வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து போக்குவரத்துச் சங்கம் தவிர்ந்த ஏனைய சங்கங்கள் வடமாகாண தனியார் பேரூந்து போக்குவரத்துச் சங்கமாக பதியப்பட்டுள்ளது. இந் நிலையில் வடமாகாணசபைத் தேர்தலின் பின் போக்குவரத்து அமைச்சராக பொறுப்பேற்ற பா.டெனிஸ்வரன் அனைத்து தனியார் பேரூந்துச் சங்கங்களையும் ஒன்றாக பதியும் முயற்சியில் ஈடுபட்டார். இதற்கு வவுனியா தனியார் பேரூந்து போக்குவரத்துச் சங்கம் இணங்காமையால் ஏனைய சங்கங்களை வைத்து கூட்டங்களின் போது வவுனியா தனியார் பேரூந்து சங்கத்தினரை அவமதித்துள்ளதுடன் போக்குவரத்துச் சேவையிலும் குழப்பத்தை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக நேற்றைய தினம் வவுனியா தனியார் பேரூந்து சங்கத்திற்கு எதிராக வடமாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் தனியார் போக்குவரத்து சேவை பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் வவுனியாவில் இருந்து விஸ்வமடு, முல்லைத்தீவு நோக்கிச் சென்ற வவுனியா தனியார் பஸ் சங்கத்திற்குச் சொந்தமான இரண்டு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சாரதி ஒருவரும் காயமடைந்துள்ளார். தாக்குதலினால் சேதமடைந்த பஸ்சினை திருத்துவதற்கும் தற்போதைய நிலையில் அதிக பணம் செலவாகும் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பஸ் சாரதிகள்.

இவ்வாறு நேற்று இடம்பெற்ற முரண்பாடு பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் அவர்களின் முயற்சியால் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதும் இன்று காலை வவுனியாவில் இருந்து விஸ்வமடு சென்ற வவுனியா தனியார் பஸ் சங்கத்திற்கு சொந்தமான இரண்டு பஸ்கள் பரந்தன் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டு தொடர்ந்து செல்ல அனுமதி வழங்கப்படவில்லை. பொலிசாரும், கிளிநொச்சி மாவட்ட தனியார் பஸ் சங்கமும் இணைந்து குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இதனையடுத்து வவுனியாவில் இருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய பகுதிக்கான தனியார் பஸ் சேவை இன்று பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டது. இதனால் போக்குவரத்துப் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியதுடன் வருட இறுதி நாட்கள், பெருநாள் நாட்கள் என்பதால் பலரும் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு இரண்டு நாட்களாக குழப்பம் இடம்பெறுகின்ற போதும் வடமாகாண போக்குவரத்து அமைச்சர் சம்மந்தப்பட்ட தனியார் பஸ்சங்கங்களை சந்திக்கவும் இல்லை. போக்குவரத்து பயணிகள் தொடர்பாக கரிசனை செலுத்தவும் இல்லை. அவர் நினைத்திருந்தால் நேற்றையதினமே கலலந்துரையாடி பிரச்சனையை தீர்த்திருக்க முடியும் ஆனால் அதை அவர் விரும்பவில்லை. கடந்த வருடங்களில் எந்த பிரச்சனையும் இல்லாமல் 5 மாவட்டங்களின் தனியார் பஸ் சேவை இடம்பெற்ற போதும் தற்போது அமைச்சரின் செயற்பாடு காரணமாக தமக்குள்ளேயே முரண்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com