பஸ்களிலிருந்து கப்பம் எடுப்போருக்கு எதிராக சவால் விடுகிறார் தயாசிரி!
“வட மேல் மாகாண சபையின் பஸ்களிலிருந்து இனி எவரும் கப்பம் எடுக்க முடியாது. நாங்கள் போக்குவரத்து அமைச்சருடன் கதைத்து ஒரு முடிவு எடுத்துள்ளோம்“ என வட மேல் மாகாண சபையின் முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர புத்தளம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது தெரிவித்துள்ளார்.
கப்பம் எடுப்பது பற்றித் பொலிஸாருக்குத் தெரியவந்தால் அவர்கள், உடனடியாக அவர்கள் குறித்த நபர்களைக் கைதுசெய்வார்கள் என்றும் குறிப்பிட்டார்.
தயாசிரி ஜயசேக்கர தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இதற்கு முன்னர் வட மேல் மாகாணம் கப்பம் எடுப்பவர்களின் சொர்க்க பூமியாக இருந்தது. அவ்வாறு தொடர்ந்து இருக்கவிட முடியாது. பஸ் தொழிற்றுறையையும், பஸ் உரிமையாளர்களையும் அதனது பணியாளர்களையும் நாங்கள் பாதுகாக்க வேண்டும். அதேபோல, பஸ்களில் பயணிக்கின்ற பயணிகளுக்கு சிறந்த சேவையையும் நாம் வழங்க வேண்டும்.
சட்டரீதியற்ற அநுமதிப்பத்திரமற்ற பஸ்கள் பற்றி நாங்கள் ஆராய்வோம். சென்ற சில நாட்களுக்கு முன்னர் தனியார் பஸ்கள் பற்றி ஆய்வு மேற்கொண்டதில் அநுமதிப்பத்திரம் வைத்திருக்காமை தொடர்பில் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் பயணம் சென்ற அரச ஊழியர்கள் பெரும் இன்னல்களைச் சந்தித்தனர். விசேடமாக ஒன்றைச் சொல்லியாக வேண்டும். அரச ஊழியர்களை இன்னலுக்குட்படுத்துவது எமது நோக்கமல்ல. பஸ்ஸின் அநுமதிப்பத்திரத்தை சட்ட ரீதியாக வைத்திருக்காமை தொடர்பிலேயே இந்தப் பிரச்சினை எழுந்தது. அதனால், சட்டரீதியாக அநுமதிப்பத்திரத்துடனான பஸ்களை வழங்கி குருணாகலிலிருந்து புத்தளம் வரை அரச ஊழியர்களுக்கான போக்குவரத்துச் சேவையை வழங்க ஏற்பாடு செய்யப்படும்“ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment