Monday, December 16, 2013

நேசிக்கும் மக்களுக்கு டக்ளஸ் ஏதோ சொல்ல விரும்புறாராம்!

நேசிக்கும் மக்களுக்கு கூற விரும்புவது என்னவென்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக் கான அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில்,....

தவறுகள் யார் புரிந்தாலும் திருத்தப்பட வேண்டிய வையே. அந்த தவறுகள் எமது மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை, அவலங்களை அல்லது கலாசார சீரழி வுகளை உருவாக்குவதாக இருந்தால், தவறு செய்பவர்கள் எமது கட்சி உறுப்பினர்களாக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டியவர்களே.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியானது (ஈ.பி.டி.பி) எனது அரசியல் வரலாற்று பயணத்தின் இடை வழியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஒன்றே.

தமிழ் பேசும் மக்களுக்கான உரிமைப் போராட்டத்தின் நீண்ட வரலாற்றில் ஆரம்பகால (1974) விடுதலை அமைப்புகளின் ஸ்தாபகர்களில் நானும் ஒருவன் என்ற வகையில்,...

எமது உரிமை போராட்டம் திசை மாறிச் செல்ல ஆரம்பித்த போது, எமது மக்கள் அடைந்து வந்த துயர்களை துடைத்திட, அரசியல் தீர்வின்றி வாழும் எம் மக்களின் அவலங்களைப் போக்கிட, சரிநிகர் சமமாக வாழ்வதற்காக சக தோழர்களோடு இணைந்து தொலை தூர நோக்குடன் 1987 இல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) நாம் ஆரம்பித்திருந்தோம்.

ஏற்கனவே பல்வேறு தமிழ் தலைமைகள் இருந்த போதிலும், பத்தோடு பதினொன்றாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை நாம் ஆரம்பிக்கவில்லை.

தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமையை வென்றெடுப்பதற்காக, அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு, நடை முறை சார்த்தியமான யதார்த்த வழிமுறையோடுதான் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) நாம் ஆரம்பித்திருந்தோம்.

ஆனாலும், நான் கூறிய நடை முறை சாத்தியமான வழிமுறைகள் திட்டமிட்ட வகையில் சக சுயலாப தமிழ் தலைமைகளால் தவறானவை என்று தூற்றப்பட்டன. அதற்கு சில ஊடகங்களும் துணை போயிருந்தன.

உண்மையை மறுப்பவர்கள், எமது உண்மையுள்ள வழிமுறை மீது அவதூறுகளைப் பரப்பினார்கள். எம் மீது வசை பாடினார்கள். எங்காவது ஒரு வன்முறை நடந்தால் எமது அரசியல் எதிரிகள் அதன் பழியை எம்மீது சுமத்தியதன் மூலம் உண்மையாகவே வன்முறையில் சம்பந்தப்பட்டவர்களைத் தப்பவிட்டிருக்கிறார்கள். தீர்க்கதரிசனம் மிக்க அரசியல் யாதார்த்த வழிமுறைகளை நாம் கொண்டிருந்ததன் காரணமாகவே எமக்கு எதிரான அவதூறு பிரச்சாரங்களை நடத்த ஆரம்பித்தார்கள்.

ஆனாலும், அன்று நான் தீர்க்கதரிசனத்துடன் சொன்னவைகளே இங்கு நடந்து முடிந்திருக்கின்றன. இன்று நடந்து கொண்டிருப்பவைகளும் நான் சொன்னவைகளே. மக்கள் எமது திசை வழி நோக்கி இன்னமும் அதிகமாக அணிதிரளும் போது, இனி இங்கு நல்லபடி நடக்கப்போவதும் நான் சொன்னவைகளே.

நான் சொல்லி வந்த எமது நடமுறை யதார்த்த வழிமுறையை, சுயலாப அரசியலுக்காக அன்று திட்டமிட்டு நிராகரித்தவர்கள், எத்தனையோ உயிரிழப்புக்கள், சொத்திழப்புக்கள், இடப்பெயர்வுகள் என தொடர்ந்த பேரவலங்களுக்கு பின்னர் இன்று எமது வழிமுறைக்கே வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகை உண்மையுள்ளதாக இருக்க வேண்டும் என்பதையும் நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் உண்மையாக இருக்குமா என்பது சந்தேகமே.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியை (ஈ.பி.டி.பி) நாம் ஆரம்பித்த போது எமது கட்சிக்கான கட்டாயக் கட்டளைகளையும் எமது கட்சி உறுப்பினர்களுக்கு பிறப்பித்திருந்தோம்.

மக்களை எவ்வகையிலும் துன்புறுத்தாதே,.. மக்களின் எஜமானர்கள் போல் நடக்க விரும்பாதே,... மக்களை பலாத்காரப்படுத்தி செயல்களில் ஈடுபடுத்தாதே,... ஒரு ஊசி நூலையேனும் மக்களிடம் இருந்து அபகரிக்காதே,.. ஆற்றும் பணிகளுக்காக மக்களிடம் இருந்து பணமோ, சொத்தோ பிரதியுபகாரமாக பெற்றுவிடாதே,.. மக்களுடனோ அன்றி சக உறுப்பினர்களுடனோ உருவாகும் முரண்பாடுகளைத் தீர்க்க வன்முறைகளை கையாளாதே,.. சக கட்சிகளுடனான அரசியல் முரண்பாட்டை பகை முரண்பாடாக பார்க்காதே,.. மக்கள் என்ற சமுத்திரத்தை விட்டு விலகி விடாதே,.. அரசியல் அதிகாரங்களை மக்களுக்காகவே பயன்படுத்த தவறிவிடாதே,.. மக்களே எமது ஆசான்கள் என்பதை நொடிப்பொழுதிலும் மறந்து விடாதே,..

இது போன்ற கட்சியின் கட்டாயக் கட்டளைகளையே நான் எமது கட்சியின் உறுப்பினர்களுக்கு பிறப்பித்திருந்தேன். நாம் வகுத்த கட்சியின் கட்டாயக் கட்டளைகள் சகலதையும், எமது மக்கள் அப்போது பட்ட அவலங்களை அனுபவங்களாக வைத்தே தீர்மானித்திருந்தோம்.

வன்முறைகளில் ஈடுபடுவதையோ அன்றி, மக்களுக்கு அச்சம் தரும் வகையில் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுபதையோ எமது கட்சிக் கொள்கையாக நாம் ஒரு போதும் ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.

எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறும் உறுப்பினர்களை நாம் கட்சியில் இருந்து வெளியேற்றுவதோடு, அவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் ஒரு போதும் தயங்கியதில்லை. நீதி மன்ற விசாரணையின் தீர்ப்பில் இருந்து யாரும் யாரையும் பாதுக்க முடியாது. பாதுகாக்க எண்ணவும் கூடாது.


கட்சி உறுப்பினர்களை விடவும் மக்களே பிரதானமாக வேண்டியவர்கள். மக்களுக்காக கட்சியே அன்றி, கட்சிக்காக மக்கள் அல்ல. எமது கட்சி உறுப்பினர்கள் மக்களின் துயர் துடைத்தவர்கள், மக்களின் துன்ப, துயரங்களில் பங்கெடுத்தவர்கள். நடை முறை யதார்த்த வழி நின்று அரசியலுரிமைக்காக உழைப்பவர்கள். மக்களுடன் வாழ்ந்து, மக்களுக்காக உழைத்தவர்கள் என்பதற்காக எமது கட்சி உறுப்பினர்கள் தவறு செய்ய நேரிட்டால் அவர்கள் மன்னிக்கப்பட வேண்டியவர்கள் என்று அர்த்தம் அல்ல.

இது எமக்கு மட்டுமல்ல சகலருக்குமே பொருந்தும். எமது மக்களுக்கு எதிராக சக தமிழ் தலைமைகள் நடத்தி வந்த வன்முறை சம்பவங்களை நாம் வன்மையாகக் கண்டித்தே வந்திருக்கிறோம். தங்கத்தினால் செய்யப்பட்ட கத்தி என்பதற்காக அதை எமது மக்கள் தமது வயிற்றிலேயே குத்திப்பார்க்க அனுமதிக்க முடியாது.

தவறு செய்யாதவர்கள் எவருமில்லை. பிறக்காத குழந்தைகளும் இறந்த மனிதர்களுமே தவறு செய்யாதவர்கள். ஆனாலும், மக்களை வழி நடத்தி செல்ல வேண்டியவர்கள் தவறு செய்தால் அது மன்னிக்கப்பட முடியாத மாபெரும் குற்றம்.

உங்களில் குற்றமற்றவர்கள் குற்றவாளிக்கு கல்லால் எறிக என்று எமது உறுப்பினர் சிலரின் தனிப்பட்ட தவறுகளை அரசியலாக்குவோரை பார்த்து நான் கேட்க முடியும். அதற்காக, எமது உறுப்பினர்கள் தவறுவிட நேரிடும் போது அதை ஒரு பொழுதும் நான் நியாயப்படுத்தப் போவதில்லை.

ஆகவே,... எமது கட்சி உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் எமது கட்சியின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயற்பட்டால் அதை நேரடியாகவே எனது கவனத்திற்கு எமது மக்கள் அறியத் தரவேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன்.

கட்சி உறுப்பினர்களோ, கட்சி ஆதரவாளர்களோ, அன்றி கட்சியின் பெயரால் வெளியாரோ தவறான செயல்களில் ஈடுபட்டால் அது குறித்து பொலிஸாரிடம் மக்கள் முறைப்பாடு செய்வதோடு, எனது கவனத்திற்கும் அதை கொண்டுவரவேண்டும் எனவும் நான் விரும்புகின்றேன்.

எனது அரசியல் இலக்கின் மீதும், அதற்கான எனது வழிமுறை மீதும் நம்பிக்கை கொண்டு, கடந்த இருபது வருடங்களாக எமக்கு அங்கீகாரம் வழங்கி வரும் மக்களின் கனவுகளை நிறைவேற்றும் திசையில் நான் தொடர்ந்தும் நடக்க வேண்டியுள்ளது.

அதே போல் என் மீது நம்பிக்கை வைத்திருந்தும், எனது அரசியல் வழிமுறை மீது விமர்சனம் கொண்டிருக்கும் அந்த மக்களுக்கும் நான் நம்பிக்கையுடன் நடக்கவே விரும்புகின்றேன்.

வரலாறு என் மீது சுமத்தியுள்ள கடமைகளை ஏற்று, எமது மக்களுக்கான
சகல உரிமைகளையும் பெற்றிட, நடைமுறை யதார்த்த வழியில் செல்லும்
தலைமை என்ற வகையில், எமது நீண்ட கால விருப்பத்தின் படி கட்சியை புனரமைக்க விரும்புகிறேன்.

ஒளிவு மறைவற்ற வெளிப்படையான எமது யதார்த்த வழிமுறையின் ஊடாக, ஒட்டு மொத்த தமிழ் பேசும் மக்களுக்கும் ஒளிமயமான எதிர்காலத்தை நான் காட்ட விரும்புகின்றேன்.

எமது மக்களுக்கான எனது அரசியல் பயணத்தில் நான் இதுவரை பட்ட வலிகளோடு, இன்னும் சில வலிகளையும் சூழ்நிலைகள் என் மீது தொடர்ந்தும் சுமத்தி வருகின்றன.

நான் சுமக்கும் பாரம் அதிகம். எமது இலக்கை எட்டிவிட, இனி நடக்கும் தூரம் அதிகமில்லை.

இவ்வாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 comments :

Arya ,  December 16, 2013 at 1:25 AM  

புலி கூட்டத்தை காசு வாங்கி கொண்டு விடுவித்த நீ நல்லா அனு பவிக்க வேண்டும், உன் மங்கு காலம் ஆரம்பித்து விட்டது, பிரபாகரனை விட மோசமானவன் நீ , தம் உயிரை துச்சம் என மதித்து உன் உயிரை காத்த , ராணுவத்தினரை கொன்ற புலிகளை சில ஆயிரம் ஐரோக்களை பிரான்சில் பெற்று கொண்டு நீ விடுவித்தது ஒன்றும் ரகசியம் அல்ல.

Anonymous ,  December 16, 2013 at 5:08 AM  

உண்மையாக சொல்லபோனால், எந்த ஒரு தமிழ் இயக்கமோ, கட்சியோ தவறுகள் செய்யாதவர் என்று இதுவரைக்கும் ஒன்றுமில்லை, ஒருவருமில்லை.

எனவே, நடந்தது நடந்து முடிந்தது போக நடப்பது, நடக்க வேண்டியதை கவனிக்க வேண்டியதே இன்றைய தேவை. அதிலும், மிக முக்கியமாக, பழைய தவறுகளை படிப்பினையாக கற்றுக்கொண்டு, இனிவரும் காலங்களிலாவது கொலைகாரர், ரவுடிகள், கொசப்புகள் கள்ளர், காடையர், தெருசண்டியர், வியாபாரிகள் போன்ற சுயநலவாத பண்பு, படிப்பறிவில்லாத அங்கத்தவர்களை வைத்து அரசியல் நடத்துவதை விட்டு,

நேர்மை, நீதி, நியாயமான வழிகளில் மக்களுக்கு சேவை செய்வதை கொள்கையாக கொண்டு நல்ல பண்பான, பகுத்தறிவுள்ள, பொதுநலம் கொண்ட மனிதர்களை கொண்டு அரசியல் நடத்துவதையே இன்றைய காலகட்டத்தில் தமிழ் மக்கள் மட்டுமல்ல முழு உலக மக்களும் எதிர்பார்கிறார்கள்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com