Tuesday, December 31, 2013

புலமைப்பரிசில் பரீ்ட்சையை இரத்துச் செய்ய பரிந்துரைக்கவில்லை! - தேசிய கல்வி ஆணைக்குழு

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வது தொடர்பில் தாம் எந்தவொரு பரிந்துரையையும் முன்வைக்கவில்லை என தேசிய கல்வி ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

ஐந்தாம்தர புலமைப்பரிசில் பரீட்சைக் கட்டமைப்பில் மாணவர்களுக்கு உளரீதியான பாதிப்புக்கள் ஏற்படாத வண்ணம் சில மாற்றங்களை மேற்கொள்வது தொடர்பான பரிந்துரைகளை தாம் முன்வைத்ததாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் லக்ஸ்மன் ஜயதிலக்க குறிப்பிட்டார்.

இதற்கமைய, 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் புலமைப் பரிசில் பரீட்சை என்ற பெயரில் பரீட்சையை நடத்தாமல் அதற்கு ஈடான இன்னுமொரு பரீட்சையை ஆகஸ்ட்டில் அல்லது வருட இறுதியில் நடத்துமாறு பரிந்துரை செய்ததாக அவர் தெரிவித்தார்.

வருட இறுதியில் ஒரு மணித்தியால வினாப்பத்திரமொன்றை மாணவர்களுக்ககு வழங்குமாறும் தேசிய கல்வி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போது நடைமுறையிலுள்ள கடினமான பரீட்சைக்குப் பதிலாக, பொது விடயங்கள் மற்றும் சுற்றாடலுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து மாணவர்கள் இடையே காணப்படும் அறிவை மதிப்பிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பேராசிரியர் லக்ஸ்மன் ஜயதிலக்க தெரிவித்தார். 2016 ஆம் ஆண்டு பல்வேறு மாற்றங்களுடன் புலமைப் பரிசிலை ஒத்த பரீட்சையொன்றை நடத்துவது தொடர்பில் மீண்டும் ஆராயவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் வறிய மற்றும் நடுத்தர வருமான வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் திறமைக்கு அமைய, பிரபல பாடசாலைகளை பெற்றுக்கொள்ளும் வகையிலான புலமைப் பரிசில் பரீட்சையை இரத்துச் செய்வது தேசிய கல்வி ஆணைக்குழுவின் நிலைப்பாடு அல்லவெனவும் அவர் தெரிவிக்கின்றார்.

(NF)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com