பொது அறிவில்லாத பொதுபலசேனா- கண்டிக்கிறது யாழ்.தமிழ் பௌத்த சங்கம்!
இலங்கையில் உள்ள இனங்களிற்கு இடையில் மீண்டும் ஒரு இனவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.
எமது நாட்டில் நடைபெற்று முடிந்த யுத்தத்திற்கு பின் அதிமேதகு ஜனாதிபதி எமது நாட்டில் இன, மத வேறுபாடற்ற ஒரு சமுகத்தை உருவாக்குவதற்காக தன்னை அர்ப்பணித்து செயலாற்றிக் கொண்டிருக்கும் இந்தச்சமயத்தில் எமது ஐனாதிபதிக்கும், நாட்டிற்கும் களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் இனவாத கருத்தை தெரிவித்துள்ள பொதுபலசேனாவின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறோம்.
எமது இலங்கை நாட்டை பொறுத்தவரை பல இனத்தவர்கள் இருந்தாலும் முக்கிய இனத்தவர்களாக சிங்களவரும், தமிழரும் காணப்படுவதுடன் இவர்கள் ஒவ்வொருவரும் தங்களின் மொழி மற்றும் சகோதர மொழியையும் கலாசாரத்தையும், பண்புகளையும் அறிந்திருக்க வேண்டியது மிக மிக அவசியமாகும்.
இதிலும் மிகமுக்கியமாக பௌத்தர்களும் இந்துக்களும் ஒற்றுமையாகவும் சகோதரத்தன்மையுடன் ஒன்றுபட்டு நின்றால் எமது இந்த நாட்டுக்குள் அன்னிய நாடுகள் தலையிடவேமுடியாது.
பௌத்தம் என்பது ஒரு மதம் அல்ல அது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் மனிதன் ஒருவன் எப்படி வாழவேண்டும் என்பதையும் உலகிற்கு மாபெரும் கொடையாக கொடுத்த ஞானியான கௌதம புத்தரால் கொடுக்கப்பட்ட ஒரு கொடையே ஆகும்.
பௌத்தத்தின் அடிப்படை தத்துவம் என்பது தன்னை உணர்தலும் ஒழுக்கத்தை பேணுதலுமே ஆகும்.
ஒரு பௌத்த துறவியை தலைவராக கொண்ட பொதுபலசேனா இனவாதம் பேசுவது கண்டிக்கதக்கதும் வருத்தத்திற்கும் உரியதுமாகும்.
(03.12.2013) நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய பொதுபல சேனா அமைப்பின் துறவி பொது அறிவு இல்லாமல் இலங்கையில் மட்டுமே இரண்டு அரசகரும மொழிகள் (தமிழ்,சிங்களம்) இருக்கிறது ஏனைய நாடுகளில் இல்லை என்று கூறியதை பார்க்கும் போது அவரின் பொது அறிவு என்பது எமக்கு வேதனையாக இருக்கிறது.
சிங்கப்பூர், கனடா போன்ற உலகில் உள்ள சுமார் 43 நாடுக்கு மேற்பட்ட நாடுகளில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மொழிகள் அரசகரும மொழியாக காணப்படுகிறது.
ஒரு வேளை இனம், மதம், யாதி எல்லாவற்றையும் துறந்தவர் தான் துறவி என்பதால் அவர் பொது அறிவுகளையே அல்லது அது சம்மந்தப்பட்ட புத்தகங்களையோ படிக்காமல் இருந்திருக்கலாம்.
ஆகவே ஒரு அமைப்பை நடாத்தும் துறவிகள் இனிமேலாவது இன, மத கருத்துகளை கூறாது கௌதம புத்தர் அருளிய (‘தம்ம பதம்’ வசனம் 09,10,11) கூறியது போல் ஒரு துறவிக்குரிய பண்புடன் தன்னுடைய அமைப்பை நடாத்தமாறு தமிழ் பௌத்த சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது.
பொதுபலசேனாவினால் தெரிவிக்கப்பட்ட மதமாற்ற தடைச்சட்டம், பசு வதைச்சட்டம் போன்ற கோரிக்கைகளை நாமும் முழு மனதுடன் ஏற்றுக்கொள்வதுடன் இவற்றுக்காக பொதுபலசேனாவுடன் இணைந்து போராடவும் தயாராகவும் இருக்கிறோம்.
ஆனால் எமது நாட்டு மக்களிற்கு இடையே இனவாதம் மற்றும் மதவாதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட வேண்டாம் என தமிழ் பௌத்த சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
0 comments :
Post a Comment