தொழில் பயிற்சியில் இளைஞர்களை இணைத்துக்கொள்ள வீதியில் நாடகம்! (படங்கள்)
இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் இலங்கை தொழில்பயிற்சி அதிகார சபை, பயிலுனர்களைச் சேர்த்துக்கொள்ளல் விழிப் புணர்வுச் செயற்பாட்டிற்காக ';பாதைகள்' எனும் வீதி நாடகதை, 08,10,11,12,13-11-2013 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் பரவலாக ஆற்றுகை செய்யப்பட்டி ருந்தது.
இளைஞர்களைச் சேர்த்துக்கொள்ளும் பிரச்சாரச் செயற்பாட்டிற்கான நிதியுதவியை WUSC (வூஸ்க்) எனப்படும் 'உலக கனேடிய பல்கலைக்கழக சேவை' வழங்கி இருந்தது. இச் செயற்திட்டத்தை மட்டக்களப்பு சர்வோதயம் இணைப்பாக்கம் செய்து வழிநடத்தியது.
சர்வோதயச் செயற்பாட்டிற்காக 'நெய்தல் ஊடக தரிசனம்' இவ்வீதி நாடகத்தை மேற்கொண்டது. இவ் வீதி நாடகத்தை திரு.அ.விமலராஜ் அவர்கள் நெறிப்படுத்தி இருந்தார். கிழக்குப் பல்கலைக்கழக நாடகத்துறை மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
கடந்த ஐந்து நாட்களில் பதினைந்துக்கு மேற்பட்ட ஆற்றுகைகள் மட்டக்களப்பு முழுவதும் நிகழ்த்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள்: களுவாஞ்சிக்குடி, நீலாவணை, மகிழூர்முனை போன்ற இடங்களிலும்
இரண்டாம் நாள்: மண்டூர், வெல்லாவெளி, பழுகாமம்
மூன்றாம் நாள்: வவுனதீவு, கொக்கட்டிச்சோலை, முனைக்காடு
நான்காம்நாள்: வாகரை, பால்சேனை,புளியங்கண்டலடி, வட்டவான் போன்ற பகுதிகளிலும்
ஐந்தாம்நாள்: கிரான், கரடியனாறு, இலுப்படிச்சேனை போன்ற கிராமங்களிலும் என்று மட்டக்களப்பின் பல பாகங்களிலும் மக்களை நோக்கி இவ்வீதிநாடகச் செயற்பாட்டின் மூலமான இளைஞர்களுக்கான பிரச்சாரம் மிகவும் காத்திரமான முறையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் பெருமளவில் திரண்டு பார்வையிட்டதோடு பெரும் ஆதரவையும் வழங்கி இருந்தனர். வாகரைப் பிரதேசங்களிலே இதன் தாக்கத்தை அதிகளவில் காணக் கூடியதாக இருந்தது. சென்ற இடங்களில் எல்லாம் நாடகத்திற்கான ஆர்வம் அதிகளவில் இருந்ததோடு மிகவும் ரசித்ததோடு மட்டுமல்லாமல், நாடகத்துடன் ஒன்றித்தும் போனார்கள். நாடகத்தோடு பார்வையாளர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டதை அவர்களின் சிரிப்பின் மூலமும், அவர்களின் வார்த்தைகள் மூலமும் காணக் கூடியதாக இருந்தது. வெல்லாவெளியில் ஒரு பார்வையாளர் வீதியில் இருந்தவாறு அழத்தொடங்கி விட்டார். காரணம் நாடகப் பாத்திரம் தனது வாழ்க்கையை காட்டுவதாகவும் தானும் இப்படி நிர்கதியாக நிர்பதாகவும் கூறி தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார். இவ்வாறு சென்ற இடங்களில் எல்லாம் மக்களின் இரசனை என்பது மிகவும் நாடகத்தோடு ஒன்றிப்போய் இருந்தது என்பதைக் காணக் கூடியதாக இருந்தது.
இளைஞர்களை விட அதிகளவிலான பெண்கள் ஆர்வம் காட்டியதுடன் யுவதிகள் தொழில் வாய்ப்புக்காக ஏங்குவதையும் அதற்காக தொழில் கல்வியைக் கற்க விரும்புவதையும் நேரடியாகவே வெளிப்படுத்தினர். பெண்களே அதிகளவான விண்ணப்பங்களைப் பெற்றுக்கொண்டு சென்றதையும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக திருமணமான பெண்கள் பலர் தாங்களும் இணைந்து கொள்ள முடியுமா எனக் கேட்டனர். இவர்கள் சிறுவயதிலே கல்வியை இடை நிறுத்தி திருமணபந்தத்தில் இணைந்தவர்கள் என்பதையும் அறியக் கூடியதாக இருந்தது.
தெரிந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளில் மட்டுமே இச் செயற்பாடு நடைபெற்றிருந்தாலும் இச் செயற்பாட்டின் நோக்கம் மிகச் சிறப்பாகவே வெற்றியடைந்திருக்கின்றது என்றே கூறமுடியும்.
இந் நாடகச் செயற்பாட்டில் பங்குபற்றிய கலைஞர்களின் விபரங்கள் பின்வருமாறு:
ந.நந்தகுமார், வ.வினோதன், ந.நிருஷhந், ப.சிவனேஸ்வரன், க.ஜெகதா, கா.அற்புதன், செ.ஜெகதா, ச.பிரபா, பொ.சுரேந்திரன், மோ.பிரசன்னா, தே.கஜேந்தினி, வி.ஜெனிதா, ச.தெய்வக்குமார் போன்ற கலைஞர்கள் பங்கு பற்றி இருந்தனர்.
இந் நாடகத்தை நெறியாள்கை செய்திருந்தவர் அ.விமலராஜ் அவர்கள்.
சர்வோதயத்தின் இச் செயற்திட்ட இணைப்பாளராகக் கடமையாற்றியவர் குலேந்திரன் அவர்கள். இவர் இச் செயற்பாடு சிறப்புற நடைபெற தனது செயற்பாட்டை மிகச் சிறப்பாகச் செய்திருந்தார். அதே போல் தொழில் பயிற்சி அதிகார சபையின் உத்தியோகத்தர் விஜயேந்திரன் அவர்களும் இச் செயற்திட்டத்தில் இணைந்து தனது காத்திரமான செயற்பாட்டின் மூலம் தனது பங்களிப்பை வழங்கி இருந்தார். இவர்களின் திறமான செயற்பாடுகளும் வீதி நாடகத்தின் வீரியமானதும், காத்திரமானதும் ஆற்றுகையின் மூலமும் இளைஞர்களை தொழில் பயிற்சியில் சேர்த்துக்கொள்ளல் செயற் திட்டமானது மிகச் சிறப்பாக நடைபெற்று முடிவடைந்திருக்கின்றது.
0 comments :
Post a Comment