இலங்கையில் PRH மொழிக் கல்விச் சிந்தனையை மேம்படுத்த ஆவன செய்வேன்! -பிரசாத் ஆர். ஹேரத் (படங்கள் இணைப்பு)
“எனது பெயரின் முன்னெழுத்துக்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள பீ.ஆர்.எச். எனும் நவீன மொழி கற்பித்தல் செயற்றிட்டத்தின் மூலம் இன்று நாடளாவிய ரீதியில் 2500 இற்கும் அதிகமான வளவாளவர்களை நாம் உருவாக்கியுள்ளோம். அவர்களுக்கு கற்பித்தலின் புதிய அணுகுமுறையைக் அறிமுகப்படுத்தினோம். அரச அலுவலர்களுக்கு மொழிகற்பித்தலோடு, சாதாரண பொதுமக்களுக்கும் மொழி போய்ச் சேரவேண்டும் என்னும் நன்நோக்கில் பாஷா சங்கங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்தினோம்.
2008 நவம்பர் மாதம் 16 ஆம் திகதியின் பின்னர் நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சத்துப் பத்தாயிரத்திற்கும் அதிகமான அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு இந்நிறுவனம் மொழிப்பயிற்சி வழங்கி போசித்துள்ளது. இந்த நவீன மொழிக் கற்பித்தல் முறைக்கு இலங்கையில் அதிக கேள்வி இருப்பது போலவே, இன்று வெளிநாடுகளிலும் இந்தக் கல்வி முறையைத் தங்கள் நாட்டுக்கும் அறிமுகப்படுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.”
தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஐந்து வருட வளர்ச்சி மற்றும் நிறுவனத்தின் கடமைகளை முறையாக வெளியிடல் எனும் தொனிப் பொருளில், நேற்று (20) பிற்பகல் 2.30 மணிக்கு அகலவத்தையில் அமைந்துள்ள தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஒன்றுகூடலின் போது, அந்நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ஆர். ஹேரத் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தேசிய மொழிகள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பணிப்பாளர் சேனாத்திலக்க, நாடளாவிய ரீதியில் இரண்டாம் மொழி கற்பிக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட வளவாளர்கள், மொழிப் பயிற்சி வல்லுநர்கள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பணிப்பாளர் நாயகம் தொடர்ந்து உரையாற்றுகையில் -
“இன்று எனது பெரிய சொத்தாகவுள்ள இந்த வளவார்களை மும்மொழித் தேர்ச்சிமிக்க வளவாளர்களாகக் காணவே நான் ஆசைப்படுகின்றேன். அதற்காக விசேட ஆங்கில மொழிப் பயிற்சியையும் வழங்க உத்தேசித்துள்ளேன். எதிர்வரும் டிசம்பர் மாதம் இரண்டாம் மொழி கற்பிக்கும் வளவாளர்கள் அழைக்கப்பட்டு, வதிவிடப் பயிற்சி அவர்களுக்கு வழங்கப்படும். “இந்நிறுவனத்தின் செல்வம் இந்நிறுவனத்தின் ஆசிரியர்கள்... ஏண்ட சக்தி உங்கட சக்தி....” (தமிழில்)
இந்தக் கற்பித்தல் முறையானது வெளிநாடுகளிலும் பிரபல்யமாகியுள்ளது. ஜப்பான், கனடா, இந்தியா போன்ற நாடுகளில் இந்தக் கற்பித்தல் முறைக்கு கேள்வி நிலவுகின்றது. இலக்கண முறைமையிலிருந்து விலகி, செயற்பாடு ரீதியான புதிய கற்பித்தல் முறையை நாம் மேற்கொண்டு அரச ஊழியர்களுக்கு இந்தக் கற்கை நெறியைப் பயிற்றுவித்து பெரும் வரவேற்பினைப் பெற்றோம். அதற்கு பெரும் பங்களியாக இருந்தவர்கள் இங்கே வீற்றிருக்கின்ற மொழிவளவாளர்கள் என்றால் மிகையாகாது. அவர்களை நான் நன்றியுணர்வுடன் இவ்விடத்தல் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நிறுவனமும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.
மொழி கற்பித்தல் என்பது இலகுவான விடயமல்ல. அதனை கற்றுக் கொடுப்பதன் மூலம் ஒருவரை சக்திமிக்க ஒருவராக மாற்றியமைக்கலாம். இது பெரிய அற்புதம். (தமிழில்) இன்று இலக்கணத்தை விற்பனை செய்கின்றவர்கள் இருக்கின்றார்கள். தமிழ் மொழியை விற்கின்றவர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் மொழியை விற்பவர்கள் அல்ல. நாங்கள் மொழியைக் கடத்துபவர்கள்... கடந்து வந்த ஐந்தாண்டிலும் நான் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கிறேன். என்றாலும் முன்னே வைத்த காலை பின்னே வைக்காது கடமையில் கண்ணாயிருந்தேன். அதன் பிரதிபலிப்பும், எனக்குத் தோள் கொடுத்த வளவார்களின் அளப்பரிய பங்களிப்பும் இன்று இந்நிறுவனம் பெரு விருட்சமாய் மாறுவதற்கும், தேசிய மொழிக்கல்வி நாடளாவிய ரீதியில் பரவுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
நான் கடமையை ஏற்கும் போது, நான் நினைக்கின்றேன் நிச்சயமாக சிங்களவர்களில் நூற்றுக்கு ஒருவரே தமிழ் தெரிந்தவராக இருந்திருப்பார். இப்போது அந்நிலை மாறி சந்தோசிக்கும் அளவில் உள்ளது. சிங்களவர்களாகிய பெரும்பான்மையினருக்கு இப்போது தமிழின் தேவை நூற்றுக்கு இருநூறாகவுள்ளது. இதன் தேவைப்பாடு கருதி நாம் பீஆர்எச் (PRH) P - Participatory, R - Reflective H - Hart Holding. முறையை அறிமுகப்படுத்தினோம். மொழி என்பது தலைக்குச் செல்லக் கூடாது. அது இதயத்தைத் தொட வேண்டும். அப்போதுதான் அது சமூகத்திற்கு சிறந்த பயனை வழங்கும். நான் இதயத்தைத் தொடும் மொழித் திட்டத்தையே அறிமுகப்படுத்தியுள்ளேன். இது யாரினதும் வழிகாட்டலில் உருவானதல்ல. பிரசாத் ஆர். ஹேரத்தாகிய எனது முயற்சியினால் தோன்றியது.
நாங்கள் கற்பிப்பது மொழிபற்றி அல்ல...நாங்கள் கற்பிப்பது மொழி... நாங்கள் மொழியின் அடிப்படையையே கற்றுக் கொடுக்கிறோம். தமிழ் தெரியாதவர்களுக்குத்தான் தமிழ் கற்றுக் கொடுக்கிறோம். சிங்களம் தெரியாதவர்களுக்குத்தான் சிங்களம் கற்றுக் கொடுக்கிறோம். எனவே, நாங்கள் சிறுவயதில் மொழி கற்றவாறே அவர்களுக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும். அவ்வழிச் செல்ல வேண்டும். இதனைச் செயல் ரீதியாகக் கொண்டுவரும் போது சவால்களைச் சந்திக்க நேரிடுகின்றது. என்றாலும், நாங்கள் தொடர்ந்து பயணிக்கிறோம்.
இவ்வளவாளர்களை மும்மொழிப் பாண்டித்தியம் மிக்கவர்களாக மாற்றுவதே எனது தேவைப்பாடாக இருக்கின்றது. அவ்வாறு உங்களை மாற்றிய அன்றைய நாளில்தான் நான் ஒரு பாரிய சமூக சேவையாளனாகப் பேசப்படுவேன். விருதுகளும் கிடைக்கும்...
இதனைக் கட்டியெழுப்புவதற்காக ஒத்தாசை புரிகின்ற எனது வளவாளர்களை நான் பெருமனதுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.” என்று நீண்ட உரை நிகழ்த்தினார் பணிப்பாளர் நாயகம் பிரசார் ஆர். ஹேரத்.
பணிப்பாளரின் உரையின் பின்னர், வளவாளர்களினால் ஒழுங்குசெய்யப்பட்ட கலை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. அவை அனைத்தும் பாரிய வரவேற்பைப் பெற்றன.
இந்நிகழ்வின் ஈற்றில் பணிப்பாளர் நாயகம் உட்பட பலர், வளவாளர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment