Sunday, November 10, 2013

கூட்டமைப்பு பிரதேச சபை உறுப்பினர்களை விரட்டிய சண் மாஸ்ரர்!


வேடிக்கை பார்த்த கூட்டமைப்பு அமைச்சரும் எம்.பியும் துப்பு கெட்டவர்களா?

பொது நலவாய மாநாடு இலங்கையில் நடைபெறவுள்ள நிலையில் 54 நாடுகளினது பிரதிநிதிகள் இலங்கை வந்து கொண்டிருக்கின்றனர். இந் நிலையில் வட பகுதியில் உள்ள நிலமைகளை அவர்களை பார்க்கச் செய்யும் முகமாக பிரஜைகள் குழு என சொல்லிக் கொள்ளும் ஒரு எட்டுப் பேரால் ஆர்பாட்டம் ஒன்று எதிர்வரும் 15 ஆம் திகதி வவுனியாவில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அது தொடர்பாக கலந்தாலோசனை செய்வதற்காக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர்கள் ஆகியோரை பிரஜைகள் குழு வவுனியா தெற்கு பிரதேச சபை கேட்போர் கூடத்திற்கு அழைத்திருந்தது.

இவ் அழைப்பை ஏற்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், ம.தியாகராஜா, இ.இந்திரராஜா ஆகியோரும் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபைத் தலைவர் சிவலிங்கம் உட்பட ஏழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின் போது இவ் ஆர்பாட்டம் கூட்டமைப்பின் தலைமையில் இடம்பெறவேண்டும். ஏன் எனில் கூட்டமைப்பு தான் காணாமல் போதல், நில அபகரிப்பு என பரவலாக போராட்டங்களை நடத்துகிறது. எனவே கூட்டமைப்பு தலைமை தாங்க வேண்டும் என பிரதேச சபை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எட்டுப் பேரின் (பிரஜைகள் குழு) காப்பாளர் சண், தலைவர் தேவராசா ஆகியோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் இரு பகுதியினருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரமடைந்த சண்ணும் தேவராசாசாவும் பிரதேசசபை உறுப்பினர்களை வெளியேறுமாறு பேசியுள்ளனர்.

வாத பிரதி வாதங்களுக்கு மத்தியில் பிரதேச சபைத் தலைவர் உட்பட ஏழு உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். தம்மை மக்கள் தெரிவு செய்த போதும் தமது கட்டத்திலேயே தம்மால் இருக்க முடியவில்லை என கூறிக் கொண்டு வெளியேறினர். தமது பிரதேச சபைக் கட்டத்தில் இருந்து அவர்களை வெளியேற்றாது தாமே வெளியேறியமை தொடர்பில் கட்சி ஆதரவாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

இது ஒரு புறம் இருக்க வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் உட்பட வடமாகாணசபை உறுப்பினர்களும் வன்னி மாவட்ட எம்பியும் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களது கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளாகிய பிரதேசசபை உறுப்பினர்களை விரட்டும் போது இவர்கள் மௌனம் காத்தது ஏன் என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஒரு எட்டுப் பேர் சேர்ந்து அமைப்பொன்றை உருவாக்கி மக்கள் வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டவர்களை விரட்டும் போது அமைச்சர் உட்பட்ட உறுப்பினர்களும் எம்.பியும் வேடிக்கை பார்த்தது எவ் வகையில் நியாயம்? தமது கட்சி உறுப்பினர்களையே எட்டு பேரிடம் இருந்து காப்பாற்ற முடியாத இவர்களா தமிழ் மக்களைக் காப்பாற்றப் போவது?

உங்களுக்கு மக்கள் வாக்கு போட்டது எமக்காக நீங்கள் குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அதைவிடுத்து வவுனியாவில் வாக்குரிமையே இல்லாத சண் பின்னால் திரிந்து எமது பிரதிநிதிகளை அவமானப்படுத்துவதற்காக அல்ல. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழப்பங்களுக்கு காரணமான சண் கீதாஞ்சலி, ஆனந்த சங்கரி, சிவசக்தி ஆனந்தன், சித்தார்த்தன் ஆகியோரைத் தொடர்ந்து புதிதாக பிரஜைகள் குழுவை குழப்ப வெளிகிட்டு விட்டார். உண்மையான பிரஜைகள் குழு செபமாலை பாதர் ஆட்களின் கீழ் இயங்குகிறது. அதனை குழப்புவதற்காக எட்டு பேருடன் கிழம்பீட்டாங்க. அதைக் கண்டு நடுங்கும் மக்கள் பிரதிநிதிகள் துப்புக் கெட்டவர்களா?

No comments:

Post a Comment