Saturday, November 23, 2013

சிறீதர பக்தி' vs குருகுலராஜா! வடபுலத்தான்

பக்தி யைப் பற்றி உங்களுக்குக் கொஞ்சம் சொல்ல வேணும். சிலருக்கு இருந்தாற்போல சில குணங்கள் பிறக்கும். நல்லாத் தண்ணி அடிச்சுக் கொண்டு பம்பலடிச்சுத் திரிஞ்ச ஆட்கள் அதையெல்லாம் விட்டுப்போட்டு, நாள் கிழமை தவறாமல் கோயில், குளம், சமூகத்தொண்டு என்று புதுஜென்மம் எடுத்ததைப்போல மாறியிருப்பார்கள்.

வெள்ளி செவ்வாய் என்று பாராமல் மாமிச பட்சணியாக அனைத்தும் உண்ணிகளாக இருந்தவர்கள் பரம்பரைச் சைவக்காரர்களாகியிருப்பார்கள்.

வாழ்க்கை முழுக்க பொய்யும் புரட்டும் சுத்துமாத்துமாக இருந்தவர்கள் தொண்டு நிறுவனத்தின் பிரதிநிதிகளாகவோ பொது அமைப்பின் முக்கியஸ்தராகவோ மாறி வெள்ளையும் சுள்ளையுமாக இருப்பார்கள்.

காலம் முழுக்க பெண்களின் பின்னால் அலைந்தவர்கள், ஏகதர்மினி விரதனாக காட்சியளிப்பார்கள்.

இப்படி மாற்றங்களும் மாறிய காட்சிகளும் மாறும் மனிதர்களும் என ஆயிரம் வகையுண்டு.

அரசியலிலும் அதிரடி மாற்றங்கள் ஆயிரம் நடப்பதுண்டு. ஒரு காலம் அகிம்சை என்றால் பிறகொரு காலம் ஆயுதம். ஒரு காலம் ஆயுதம் என்றால் பிறகொரு காலம் அகிம்சை. ஆயுதமும் அகிம்சையுமாக இருக்கும் காலமும் உண்டு. அரசியலே வேண்டாம் என்றும் அது ஒரு காஞ்சுரங்காய் என்றும் இருந்தவர்கள் அரசியலில் குதித்து அதிரடி செய்வதும் உண்டு. அதுதான் இப்போது நடந்து கொண்டிருப்பது.

முன்னர் பள்ளிக் கூட வாத்தியாராக இருந்து, பிறகு அதிபராகி, பிறகு உதவிக் கல்விப் பணிப்பாளராகி, ஓய்வை அண்மித்த காலத்தில் கல்விப் பணிப்பாளராகப் பதவி வகித்து ஓய்வைப்பெற்றவர் குருகுலராஜா.

ஓய்வுக்குப்பிறகு, சும்மா இருக்க அலுப்பாக இருக்குதென்று உள்ளுர்த்தொண்டு நிறுவனங்களில் சில பொறுப்புகளைப் பார்த்தார்.

அப்படிப் பார்த்தவரை மெல்ல மெல்ல அரசியலுக்கு இழுத்திருக்கிறார் சிறிதரன் எம்.பி. கல்விப் பணிப்பாளர் காலத்தில் குருகுலராஜா சிறிதரனுக்கு அதிகாரி. சீனியர். அரசியலிலோ குருகுலராஜாவுக்கு சிறிதரன் வழிகாட்டி. சீனியர். இப்ப குருகுலராஜா கல்வி அதிகாரி அல்ல. அரசியல்வாதி. ஆகவே இங்கே சிறிதரன்தான் வழிகாட்டியும் சீனியரும் ஜீனியசும். அப்படியென்றால், சிறிதரனை விட குருகுலராஜா பத்தடி கூடுதலாகப் பாய வேணும். மாவையை விடச் சிறிதரன் பத்தடி பாய்ந்து கொண்டிருக்கிறார். அப்படிப் பாய்ந்தால்தான் அவருக்கு அரசியலில் எதிர்காலம்.

அதைப்போல சிறிதரனை விடப் பத்தடியோ பதினாறடியோ பாய்ந்தால்தான் குருகுலராஜாவுக்கு எதிர்காலம். மந்திரிப் பதவியின் பாதுகாப்பும்.

எனவேதான் அவர் இப்பொழுது எங்கே சென்றாலும் முன்வரிசைப் போராட்டக்காரராக (விரைவில் ஒரு அதிரடிப் போராளியாகினாலும் ஆச்சரியமில்லை) சம்மணமிடுகிறார்.

எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் அங்கே இன உரிமையைப் பற்றியும் அரசியல் விடுதலையைப் பற்றியும் எடுத்த எடுப்பிலேயே முழங்குகிறார்.

அண்மையில் ஒரு முன்பள்ளியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டவர் அங்குள்ள ஐந்து வயதுப்பிள்ளைகளுக்கே அரசியற் பாடம் நடத்தியிருக்கிறார்.

இதெல்லாம் சும்மா அல்ல. காரியத்தோடுதான்.

மிகக் குறுகிய கால (மூன்றுமாதகாலத்தில்) அரசியற் பிரவேசத்தில் ஒரு மாகாண அமைச்சர் பதவி கிடைத்திருக்கிறது என்றால் அதற்காக எத்தனை தியாகங்களைச் செய்ய வேணும்!?

தியாகங்களைச் செய்து பழக்கமில்லாதவர் இப்படி 'சிறிதர பக்தி'யைப் பாடியோ அல்லது சிறிதரனைப்போல அதிரடியாக அரசியல் அறிக்கைகளையும் பிரகடனங்களையும் (மூளைக்கும் வாய்க்கும் சம்மந்தமில்லாத கதைகள்) விட்டோதான் அரசியல் செய்ய வேணும். பதவியைக் காப்பாற்ற வேணும்.

ஆனால் குருகுலராஜாவிடம் மக்கள் எதிர்பார்ப்பது அரசியலை அல்ல. அவர் தேர்வு செய்யப்பட்டதும் அவருக்குக் கல்வி அமைச்சர் பதவி கிடைத்ததும் அவர் ஒரு கல்வியாளர் என்ற காரணத்தினால்தான்.
வடபுலத்தான்

No comments:

Post a Comment