'மடை' பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும் பாரம்பரிய கலைஞர்களின் கொண்டாட்டமும்
மக்கள் தமது வாழ்வில் மகிழ்வுடனும் சுதந்திரத்துடனும் வாழ்வதற்கு தங்களுக்கென ஒரு திட்ட மிடலைக் கொண்டு வருடா வருடம் சமூக இணைப்பிற்கான நிகழ்வுகளை தமது மண் சார்ந்ததாக வடிவமைத்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த வேளையில் காலனிய ஆதிக்க வெளிப்பாட்டால் தமது கல்வி பண்பாடு வாழ்கை முறைகளில் மக்கள் மத்தியில் பரப்புவதற்கு பல பிரயர்த்தனங்களை மேற்கொண்டு மக்களைத் திணர வைக்கின்றமையும் நிலவுகின்றது.
அதன் தொடர்ச்சியாக நவீன கல்விப் புலம் பல வழிகளில் கட்டமைத்து உருவாக்கிய எம்மவர்களில் சிலர் அதனை முன்னெடுக்கும் தூதுவர்களாக தம்மை முன்னிறுத்தியுள்ளமையும் நிலவுகின்றது. உலகமயமாக்கலின் தீவிர போக்கினால் உலகப் பொதுவான பண்பாட்டை உருவாக்கும் நிலையில் கங்கனம் கட்டிக் கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் மக்களைத் தனியன்களாக்கி பிரித்து உறவை வலுப்படுத்தும் சூழல் இல்லாத இந்த 21ம் நூற்றாண்டில் மக்கள் அதனைக் கடந்து தம்மை இணைப்பதற்காக வடிவமைத்து வைத்திருந்த பாரம்பரிய கலைகளை மேலும் வலுவாக சுய திட்டமிடலுடன் கிராமப்புறங்களில் முன்னெடுத்துக் கொண்டாடுகின்றமை மகிழ்வைத் தருகின்றது.
பொதுவாக பாரம்பரிய கலை விழாக்கள், ஆய்வரங்குகள், மக்கள் சார்ந்த நிகழ்வுகள் மக்களிடம் தகவல்களை எடுத்துக் கொண்டு தனி ஒருவரினால் அடைக்கப்பட்ட மண்டபத்தினுள் படித்து விட்டு அல்லது சமர்ப்பித்து விட்டுச் செல்லும் போக்கிலிருந்து முற்றாக விடுவித்து செல்லும் புதிய போக்காக பாரம்பரியக் கலைகளின் திருவிழாவும் கலைஞர்களின் கொண்டாட்டமும் எனும் நிகழ்வு இடம்பெறுகின்றது.
'மடை' எனும் பெயரில் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில் பாரம்பரிய கொண்டாட்டங்களையும், ஆற்றுகைகளையும், காட்சிப்படுத்தல்களையும், கலந்துரையாடல்களையும் இது கொண்டுள்ளது. மடை எனும் சொற்பதம் சமூகத்தில் வழிவழியாக பெரியோர் முதல் சிறியோர் வரை பரீட்சயமானது. மடை எனும் பெயரில் சுட்டி நிற்கும் இந்த விழா வேறுபட்ட எண்ணக்கருவுடன் கலாநிதி சி. ஜெயசங்கரின் தலைமையில் இந்து கலாசார அமைச்சின் அனுசரணையுடன் ஓழுங்கமைப்புக் குழு ஒன்று உருவாக்கப்பட்டு தொடர் செயற்பாட்டுடன் பல வழிகளில் திட்டமிட்டு நடைபெறுகின்றது.
கலைகளை அடிப்படையாகக் கொண்ட செவ்வியல் கலை விழாக்கள் அல்லது கிராமியக் கலை விழாக்கள் முன்னெடுக்கப்படுவது போன்று இவை இல்லை. நவீன கல்வியின் அதிகார கட்டமைப்பில் அவை முன்னெடுக்கப்படும் விழாவாகவே அமைந்தது. மடையின் தொனிப் பொருள் மிகவும் வித்தியாசமானது. பன்முக சமூகத்தை உள்வாங்கி அதிகாரத் தாக்கம் இல்லாத மக்கள் மைய நிகழ்வாக திகழ்கின்றது. இது திருகோணமலையில் சிவானந்த தபோவன சிறுவர் இல்லத்தில் 25.10.2013 தொடக்கம் 27.10.2013 வரை ஈழத்துத் தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பாரம்பரிய கலைச் செயற்பாட்டாளர்களையும் இணைத்த கொண்டாட்டப் பெரு விழாவாகும்.
மடை என்பது சமூகத்தில் பொதுவாக பண்பாட்டுத் தளத்தில் இரண்டறக் கலந்த 'பல்பொருட்களையும் ஒன்றிணைத்ததாக' விளங்குகின்றது. மடை வைத்தலானது ஒரு மடையில் தொடங்கி மூன்று, ஏழு என தொடர்ந்து செல்வதும் உண்டு. வீடு கட்டுவது முதல் புது மனை புகுதல் வரையும் மடை வைத்தே அதனை ஆரம்பிப்போம். சடங்கு சம்பிரதாயங்கள், வாழ்கை முறைகள், இன்ப துன்ப நிகழ்வுகள் போன்றவற்றில் எல்லாம் மடைக்கென தனி இடம் உண்டு. அவை வைப்பதற்கான தனியான முறைமையும் உண்டு. எனினும் இரு பாலாரும் தமது விருப்பிற்கேற்ப இதனை வைப்பர். பொதுவாக மடைக்கென பாக்கு, பழம், வெற்றிலை, தேங்காய், ஊதுபத்தி, வேப்பிலை, கமுகம் பூ போன்ற பொருட்களை இணைத்து வைக்கப்படும். இந்த பல் பொருட்களையும் ஒன்று சேர்த்து வீரியத்தை ஏற்படுத்துவது பன்முகத்தன்மை வெளிப்பாட்டை புலப்படுத்துகின்றது.
கசப்பு, புளிப்பு, இனிப்பு, உவர்ப்பு முதலான சுவையும் இதில் உண்டு. இவ்வாறே அனைத்துக் கருத்து வெளிப்பாடுகளையும் இந்த மடை தாங்கி தமிழர் பண்பாட்டில் வலம் வருகின்றது. உலகமயமாக்கல் சூழலிலும் மடை மடையாகவே திகழ்கின்றது.
மடை எனும் கலை விழாக் கொண்டாட்டமும் இலங்கையில் பல பாகங்களிலும் பாரம்பரியத்தில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் கலைஞர்களையும் அதனூடாக வெளிப்படும் கலைகளையும் ஒன்றிணைக்கும் பன்மைத்தன்மை சார்ந்தவையாகும். கிராமப்புற நிகழ்த்து கலைஞர்கள் தமது சமூகத்தினரை இணைத்துக் கொண்டு தாமாகவே தமக்குரிய மகிழ்விற்கான தமது திட்டமிடலுடனும் சுய செயற்பாட்டினுடனும் எந்த விதமான பெரும் செலவும் இன்றி தமக்குள் சிறிய அளவு பணத்தைச் சேர்த்துக் கொண்டு பாரம்பரிய கலை நிகழ்துகைகளை பருவகாலங்களில் உட்சாகத்துடன் முன்னெடுக்கின்றனர். அப்போது கிராமத்தவர் மகிழ்வுடன் கலந்து கொள்வர். இவ்வாறு முன்னெடுக்கும் போது சில பிரச்சினைகள், சவால்கள் போன்றவற்றையும் எதிர்நோக்க வேண்டிய சந்தர்ப்பமும் நிலவும்.
இதனை மிகவும் திட்டமிட்டு தாமாகவே தீர்த்துக்கொள்ளும் திறன் கொண்ட கலைஞர்களின் கொண்டாட்டமே இங்கு பிரஸ்தாபிக்கப்படுகின்றது.
இலங்கையின் பல்வகை சார்ந்த சுமார் 200 கலைஞர்கள் சங்கமமாகும் நிகழ்வே இதுவாகும். தாம் தேர்ச்சி பெற்ற இந்த பாரம்பரிய கலைச் செயற்பாட்டில் தாமாகவே தமது அறிவு, திறன் போன்றவற்றோடு குறித்த கலையில் தமக்கிருக்கும் ஆழ்ந்த புலமைத்துவம் போன்றவற்றையும் தாமாகவே எடுத்துக் கூறுவதாகவே அமைவது இந்த மடையாகும். மக்கள் தாங்களே தமது ஆற்றல்களைப் படைப்பது இந்த மடையில் நிகழும்.
தமது ஆற்றல்களைத் தாங்களே ஒன்று சேர்ந்து பரிமாறுவதற்குரிய சந்தர்ப்பமானது வேறு எந்தச் சந்தர்ப்பத்திலும் கிடையாது. கிராமப் புறத்திலே குறிப்பிட்ட அண்ணாவியார் அல்லது கலைஞர் இருப்பாராயின் அவர்கள் பற்றிய பெயரோ, திறனோ அவரது முகத்தையோ பார்க்கும் வாய்ப்பு சிலருக்குக் கிடைக்காது ஆனால் இந்த நிகழ்வில் சிறப்புற தமது திறனைக் கொண்டுள்ள எழில் மிகு பாரம்பரியக் கலைஞர்கள் அனைவரையும் ஒன்றுசேர பார்ப்பதோடு அவர்களது உணர்வை உணரச் செய்வதற்கான இடமாகவும் இவை அமைகின்றது.
இத்திருவிழாவில் மக்கள் கலைஞர்கள் அனைவரும் தனியாகவும் கூட்டாகவும் தமக்கு வாலாயமான கலை ஆற்றல்களை பல சந்தர்ப்பங்களில் மற்றய கலைஞர்களுக்கு வெளிப்படுத்துவர். அதனை மற்றய கலைஞர்களுக்கு பகிர்ந்து மகிழ்வதோடு இதில் பரீட்சயமாகி அது தொடர்பான உரையாடலில் ஈடுபடும் வாய்ப்புண்டு.
பல்வகைமைகளை முன்னிலைப்படுத்தும் இந்த மடையில், இலங்கைக் கலைஞர்களின் கலை வெள்ளம் பாய்வதையும் காணலாம். யாழ்ப்பாணத்தில் இருந்து 16 பேருடன் பப்பரவாகன் வடமோடிக்கூத்து, காத்தவராயன் கூத்து நிகழ்த்துகையும், அந்தக்கலைஞர்களின் உரையாடல்களும், முல்லைத்தீவில் இருந்து கோவலன் கூத்தும், சிலம்பு கூறல் நிகழ்வும் பகிர்வுகளும், மன்னாரில் வாசாப்பு, வடபாங்கு, தென்பாங்கு எனும் பாரம்பரிய ஆற்றுகைகளை இணைத்த மன்னார் மாலையும், உணர்வுப் பகிர்வும் உடப்பின் அதன் தனித்துவ ஆற்றுகைகளும், திருகோணமலை துரோணர் போர் வடமோடிக் கூத்து, சிலம்பாட்டம், கும்பத்துச் சடங்கும், அந்தக் கலைஞர்களின் அடிமன வெளிக்கொணர்கையும், மட்டக்களப்பில் 56 பாரம்பரியக் கலைஞர்களை உள்ளடக்கிய வேடச் சமூகத்தினரின் வேடச் சடங்கு இசை நிகழ்வுகளும், பறங்கியர் சமூகத்தினரின் கபறிஞ்சா அதனுடன் தொடர்பான அவர்களின் பாரம்பரிய இசை நிகழ்வும், மட்டக்களப்பில் வருடா வருடம் சமூகத்தை இணைத்து நடைபெறும் கூத்துக்களில் ஒன்றான மகிடிக் கூத்தும், முஸ்லீம்களின் தனித்துவத்தினை வெளிப்படுத்தும் பக்கீர்பைத், பொல்லடி, வாள்வீச்சு போன்ற நிகழ்வும், அருந்ததியரின் தப்பு எனும் வாத்தியக் கருவி மூலம் மிகவும் காத்திரமாக இசைக்கப்படும் இசை நிகழ்வும், பாரம்பரிய இசைக் கருவிகளான பறை, மத்தளம், தாளம், சவணிக்கை, உடுக்கை, சொர்ணாளி போன்றவற்றினுடனான இசைக் கோர்வையும் என ஒன்று திரண்ட நிகழ்வாக இவை அமையும்.
கலைஞர்கள் அவர்களாகவே தமது ஆளுமைகளைச் செய்து காட்டியும், உரையாடல் மூலமும் தம்மை அடையாளப்படுத்தும் அற்புத நிகழ்வு இங்கு செவ்வனே இடம்பெறும். பாரம்பரிய கலைஞர்களிடம் தமக்கென தனித்துவமான திறன் உண்டு. அவர்கள் தமது பண்பாட்டுச் சூழலில் தாமாகவும், செய்து கற்றல் மூலமும் பெற்றுக் கொண்ட அனுபவக்கருத்துக்களை வெளிப்படுத்துவர். குறிப்பாக கூத்துத்துக் கலைஞர் தமது ஆட்டப் பின்புலம், வரவுத் தாளம், பாடல் எடுக்கும் முறை, தாம் பழகிய பாரம்பரிய அண்ணாவியாரின் பழக்குதல் பற்றிய தெளிவுகள் போன்றவை பற்றிக் குறிப்பிடுவர். அவ்வாறே பக்கீர்பைத்தில் தேர்ச்சி பெற்ற கலைஞர் அது பற்றிப் பாடிக் காட்டி உரையாடுவர், கோவலன் கூத்துக் கலைஞர்களும் தமது ஆட்ட அனுபவங்களை முன்னிலைப்படுத்துவர். வேட சமூகத்தைச் சேர்ந்தவர் அத் தெய்வ அழைப்பு, பாடுதல், பறை அடித்தல் முதலான ஆழமான புலமைத்துவத்தினை முன்மொழிவர். இவ்வாறே ஏனைய கலைஞர்களும் தமது அனுபவங்களையும் அதில் தாம் கொண்டுள்ள நிபுணத்துவத்தையும் தாமாகக் கருத்துரைக்கும்போது வரும் மனங்களின் மகிழ்வே இங்கு முக்கிய கொண்டாட்டங்களாகும். அந்தச் சந்தர்ப்பத்தில் உரையாடும் போதே பாடக் கூடியவர்கள் பாடுவர், ஆடக்கூடியவர்கள் ஆடியே தமது விளக்கத்தை முன்மொழிவர் இது பாரம்பரியக்கலை ஆளுமைகளிடம் நிலவும் முக்கிய பண்பாகும்.
பாரம்பரியக் கலைஞர்களின் கொண்டாட்டங்களில் மிகமுக்கியமாக வெளிப்படுத்தப்படுவது பல பிரதேச பண்பாட்டுத் தளங்களில் இருந்து வரும் கலைஞர்களின் பிரச்சினைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றை உரையாடும் சந்தர்ப்பம் இதில் கொடுத்தமையாகும். இன்றைய நவீன தொழிநுட்ப யுகத்தில் பாரம்பரியக் கலைகள் அரிகிப்போயுள்ளது. அழகற்றது என கட்டமைக்கப்பட்டுள்ள நிலைமை ஏற்படுகின்றது. அத்தோடு தொடர்ச்சியாக கலைச் செயற்பாட்டை முன்னெடுத்துவரும் பாரம்பரியக் கலைஞர்களுக்கு உள்ளார்ந்த, புறவயமாக நிலவுகின்ற பிரச்சினைகளை அவர்களே கலந்துரையாடுவர். அப்போது அவர்களுக்குள்ளே பிரச்சினைக்குரிய தீர்வை அறிந்து கொள்வதற்கான சுய சிந்தனை வெளிப்பாடும் இந்த சந்தர்ப்பத்தில் வலுப்பெறும். அவ்வாறே தொடர்பு சாதனங்களின் தாக்கம், புத்திஜீவிகளின் கருத்தியல் ரீதியான கட்டமைப்பு, உலகமயமாக்கலின் மூலமான முதலாலித்துவ ஆதிக்கம், கற்றல் சூழலில் இதற்கென விதிக்கப்படும் கூற்றுக்கள் போன்ற பல சவால்கள் பற்றி பேசப்படும். இந்த சந்தர்ப்பத்தில் ஏனைய கலைஞர்களுக்கும் அவை படிப்பினையைத் தரக் கூடியதாக அமையும்.
பாரம்பரியக் கலைகளின் முக்கியத்துவம் உணரப்பட்டு இந்த உலகமயமாக்கல் சூழலில் மகிழ்வைக் கொடுத்து கொண்டாடுவதற்கு கிராமப்புறங்களில் பல ஆற்றுகைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மட்டக்களப்பில் இந்தப் போக்கு அதிகம் உண்டு. தனியன்களாக வாழ்ந்து தொழிலில் ஈடுபடும் ஆற்றுகையாளர்கள் தாம் சமூகத்தை இணைப்பதற்கும், மனித உறவுகளைப் பரிமாறுவதற்கும் கூத்துக்களைத் தொடர் களரி அடித்தல் மூலம் முன்னெடுத்து அரங்கேற்றும் செயற்பாடு நிலவுகின்றது. வழமையாக ஆடி வரும் கிராமங்கள் தவிர்ந்த ஏனைய கிராமங்களில் சிறப்பாக இதனைக் காணலாம். குறிப்பாக தன்னாமுனையில் சுமார் 42 வருடங்களுக்குப் பிறகு ஞானபுத்திரன் எனும் வடமோடி கிறிஸ்தவக் கூத்து குறிப்பாக இளம் சமூகத்தினர் ஒன்றுசேர ஆடப்பட்டது. களுவண்கேணியில் 13ம்போர் வடமோடிக் கூத்து மக்கள் திரலாக ஒன்றிணைய அரங்கேற்றிக் கொண்டாடினர்.
காயங்கேணியில் மிக நீண்ட காலத்திற்குப் பிறகு 14ம் போர் வடமோடிக் கூத்து நிகழ்த்தப்பட்டது. கரவெட்டியில் பூதத்தம்பி விலாசம் கூத்து ஆடப்பட்டது. இதற்குக் காரணம் இதன் தேவையும் இருப்பும் மிகவும் அவசியமானது என உணர்தமையே ஆகும். ஆனாலும் அவற்றை முன்னெடுப்பதில் புலப்படும் சவால்களையும் இங்கு அவர்களாலே வெளிக் கொணர வைப்பதும் முக்கிய நிகழ்வாக இடம்பெறும்.
மடை வேர்களினதும் மனங்களினதும் கொண்டாட்டம் எனும் நிகழ்வில் பல்பண்பாட்டிற்குரிய கட்டமைப்பு நிலவுகின்றது. பல்வேறு பிரதேசங்களிலும் வாழும் மண்சார்ந்த கலைஞர்கள் நிலத்தடி நீரைப்போல் தாமாக வளர்ந்து வரும் அந்த ஆளுமைகளின் ஒன்றிணைவும் ஊடாட்டமும் காத்திரமாக இங்கு நிகழும். குறிப்பாக பல்வகைமை ஒன்றிணைவை மட்டக்களப்பில் இருந்துவரும் 56 கலைஞர்களிடம் அதிகம் காணலாம்.
வேடர் சமூகத்தினர், பறங்கியர் சமூகத்தினர், அருந்தியர் சமூகத்தினர், பறையர் சமூகத்தினர், வனக்குறவர் சமூகத்தினர், முஸ்லீம் சமூகத்தினர் போன்றோர் ஒன்னிணைந்து தமது இடையூடாட்டங்களை மேற்கொள்வதும் அவர்களுக்கு மதிப்பளித்தலும் இடம்பெறும். சாதி, மதம், இனம் என்ற வேறுபாடு இன்றி தமது ஆற்றல்களை வெளிப்படுத்துவது முன்னிலைப் படுத்தப்படுகின்றது.
சம கால சமூகத்தின் தேவையான பால், சாதி ரீதியான ஒடுக்குமுறை நீக்கல் தொடர்பான கலந்துரையாடல்களும் பிரக்ஞைபூர்வமாக முன்னெடுக்கப்படும். பாரம்பரியக் கலைகளில் பெண், ஆண் தொடர்பான பால் நிலை அசமத்துவம், சாதி ரீதியான ஒடுக்குதல் போன்றவை பல கோணங்களில் இடம் பெறுகின்றது. ஆற்றுகையின் போது பால், சாதி போன்றவை உதாரணத்திற்காகவும், விரசமான பேச்சுக்காகவும் தமக்கேற்ப கையாளப்படுவது வழக்கமாக உள்ளது. இதன் கட்டமைப்பையும், இதனுள் நிலவும் அதிகாரத்தையும் கேள்விக்குட்படுத்தி உரையாடல் மூலம் கொண்டுவருவதோடு பாரம்பரியக் கலைஞர்களை அதில் உணர வைத்தலும் ஒடுக்கு முறையினை நீக்குவது தொடர்பான தெளிவையும் கொடுக்கும் ஆரம்ப முயற்சியாகவும் இவை அமையும்.
இந்தக் கொண்டாட்ட நிகழ்வில் திருகோணமலையில் பிரதேச ரீதியான ஆற்றுகைகள் ஆச்சரியம் ஊட்டக்கூடிய வகையில் 5 இடங்களில் நடைபெறும். கடற்கரை ஓரத்தில் பாரம்பரிய வாத்திய இசை நிகழ்வு இடம்பெறும். குளக்கோட்டன் தோப்பு முன்றலில் பறங்கியர் இசை நிகழ்வு, முஸ்லீம்களின் பொல்லடி(களிகம்பு), வாள் வீச்சு, பறைமேளக் கூத்து போற்றவையும் இடம்பெறும். சிவானந்த தபோவனத்தில் அமைக்கப்படும் களரியில் பிரதேச தனித்துவ வெளிக் கொணர்கையை முன்னிலைப்படுத்தும் கூத்துக்கள் நிகழ்த்தப்படும். சடங்குப் பந்தல் மற்றும் காட்சிக் கூடத்திற்கு முன்பாக சில ஆற்றுகைகள் முன்னிலைப்படுத்தப்படும். இவ்வாறே இந்து கலாசார வளாக மண்டபத்தில் மகிடிக் கூத்தும், காமன் கூத்தும் நிகழ்த்தப்படும்.
இந்தக் கொண்டாட்டத்தில் காட்சிப்படுத்தல்களும் முக்கிய இடம் வகிக்கின்றது. வேடர் சமூக சடங்குப் பந்தல்கள், தமிழரின் தனித்துவ கட்டிட அமைப்புக்கள், களரி, தோரணம், பாரம்பரிய பொருட்கள் கொண்ட காட்சிக் கூடம் போன்றவைகளும் சிறப்புற அமைக்கப்பட்டிருக்கும்.
இந்த விழா தொடர்பான ஒழுங்கமைப்புக்கள் கலாநிதி சி .ஜெயசங்கரின் தலைமையில் 11 பேர் கொண்ட ஒழுங்கமைப்புக் குழு ஒரு மாதத்திற்கு முன்பிருந்து ஆரம்பிக்கப்பட்டு தொடர் கலந்துரையாடல், சந்திப்பு மற்றும் செயற்பாடுகளுடன் முன்னெடுக்கப்பட்டது. குறிப்பிட்ட இடத்திற்குச் சென்று பார்த்தல், கலைஞர்களைச் சந்தித்து தயார்படுத்தல், ஏனைய முகாமைத்துவ வேலைப்பாடுகள் போன்றவை முன்னெடுக்கப்பட்டன. வெறுமனே ஒரு இடத்தில் இருந்து கொண்டே இவை முன்னெடுக்கப்பட்டவை அல்ல. ஒவ்வொரு விடயமாக மிகவும் திட்டமிட்டு இடம்பெற்றது. இதன் மூலமான 'செய்து கற்றல்' மிகவும் பயன் தரக் கூடியதாக அமைந்தமையானது எமது ஆளுமை விருத்திக்கு உரமூட்டியது.
திரு சு.சந்திரகுமார்.
0 comments :
Post a Comment