Saturday, November 9, 2013

வெலிகம அறபா வரலாற்றில் முதற்தடவையாக வைத்தியத்துறைக்கு ஒரு மாணவி தெரிவு!

வெலிகம அறபா மத்திய கல்லூரியிலிருந்து வரலாற்றில் முதற்றடவையாக மாணவியொருத்தி பல்கலைக்கழக வைத்தியத் துறைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். வெலிகம, கோட்டகொடையைச் சேர்ந்த செல்வி பாத்திமா ஸப்ரா இல்யாஸ் என்ற மாணவியே பல்கலைக்கழக வைத்தியத் துறைக்குத் தெரிவாகியுள்ளார். 1.98 இஸட் புள்ளிகளையும், 1.77 வெட்டுப்புள்ளிகளையும் பெற்றுள் ளார்.

ஏற்கனவே, பல கல்விசார் போட்டி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு செல்வி ஸப்ரா பரிசில்கள் பலவற்றைத் தட்டிக் கொண்டுள்ளார்.

ஸப்ரா இல்யாஸ் பல்கலைக் கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டமை தொடர்பில், பாடசாலை அதிபர் அஸ்ஸெய்யித் வாரிஸ் அலி மௌலானாவைத் தொடர்புகொண்டு இதுவிடயமாக கேட்டபோது,

“ஏற்கனவே, கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், அறபாவின் அதிபராகவும் இருந்த ஹுஸைன் அதிபரின் காலத்தில் முஹமட் இப்ளால் வைத்தியத் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். இருந்தபோதும், அவர் முதல் தடவை அறபாவிலிருந்து பரீட்சைக்குத் தோற்றினார். பின்னர், அவர் கொழும்பு நகருக்குச் சென்று அங்கு பிரத்தியேக வகுப்புக்களில் கற்று, பரீட்சை எழுதியதன் பின்னரேயே அவர் , பல்கலைக்கழக மருத்துவத் துறைக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆனால், ஸப்ரா இல்யாஸ், அறபாவைத் தவிர வேறு எங்கும் சென்று கற்கவில்லை. முழுக்க முழுக்க அறபாவில் மாத்திரமே கற்றார். ஸப்ரா இல்யாஸ் எமது பாடசாலையின் வெளிப்பாடாகும்.

அன்று அறபாவுக்கு (வைத்தியர்) இப்ளால் புகழ்சேர்த்தார். இன்று ஸப்ரா புகழ் சேர்த்திருக்கிறார்.

நாம் விஞ்ஞான, கணித திட்டமிடல் அடிப்படையிலேயே தற்போது வகுப்புக்களை வழிநடாத்திச் செல்கின்றோம். விஞ்ஞான மற்றும் கணித ஆசிரியர் வெற்றிடம் எமது பாடசாலையில் உள்ளபோதும், மாணவர்களை சலிப்படையச் செய்யாமல் அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, தட்டிக் கொடுத்து வெற்றி இலக்கை அடைவதற்காக நாம் ஆவன செய்து கொண்டிருக்கிறோம்.

இந்த வெற்றியின் பின்னணியில் எமது ஆசிரிய குழாம் இருப்பது போலவே, அயராது பாடுபட்டுழைக்கும் கிரிஸ்டல் குழுவினரும் இருக்கின்றனர். கிரிஸ்டல் குழுவினர் எமது பாடசாலை பழைய மாணவர்கள் குழுவினராகும். அவர்களை மீண்டும் இவ்வெற்றி தொடர்பில் நினைத்துப் பார்க்கின்றேன்.

கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக அதிக வெட்டிப்புள்ளிகள் தேவையான மாவட்டம் மாத்தறை மாவட்டமாகும். எனவேதான், திறமையான எமது மாவட்ட மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளியுடைய மாவட்டங்களைத் தெரிவு செய்து அங்குள்ள பாடசாலைகளில் கல்வி கற்கின்றனர்.“

இன்று எம்மில் நம்பிக்கை ஒளிக்கீற்று துளிர்விட்டுள்ளது. இனி ஸப்ரா இல்யாஸ்கள் பல பேரை எமது பாடசாலையிலிருந்து வெளிக்கொணர நிச்சயம் ஆவன செய்வோம்“ என்றும் குறிப்பிட்டார்.

(கலைமகன் பைரூஸ்)

No comments:

Post a Comment