தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் அந்நாட்டு பிரதமர் யின்லக் ஷினவட்ரா பாராளுமன்றத்திலான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பொன்றில் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்படி நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு தொடர்பான பிரேரணை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
ஆனால், பாராளுமன்றத்தில் செல்வாக்கு செலுத்தும் யின்லக்கின் கட்சி அந்த வாக்கெடுப்பை தோற்கடித்துள்ளது.
தாய்லாந்தில் 2010 ஆம் ஆண்டிற்கு பின்னரான மிகப் பெரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை யின்லக் ஷினவட்ராவின் அரசாங்கம் எதிர்கொண்டுள்ளது.
அந்நாட்டில் நிலவும் பதற்றநிலை குறித்து கவலை தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு வலியுறுத்தியுள்ளார்.
யின்லக்கின் அரசாங்கம் அவரது சகோதரரும் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் தலைவருமான தாக்ஸின் ஷினவட்ராவால் கட்டுப்படுத்தப்படுவதாக மேற்படி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கிவரும் முன்னாள் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினரான சுதெப் தயுக்சுபன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் யின்லக் ஊரடங்கு சட்டங்கள், வீதிகளை மூடுதல் என்பவற்றுக்கான விசேட அதிகாரங்களைப் பெற்றுள்ள அதேசமயம், ஆர்ப்பாட்டத் தலைவரை கைது செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும் சுதெப் தயுக்சுபனை கைது செய்வதற்கு இதுவரை எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் யின்லக்கிற்கு ஆதரவாக 297 வாக்குகளும் எதிராக 134 வாக்குகளும் அளிக்கப்பட்டிருந்தன.
No comments:
Post a Comment