Friday, November 1, 2013

மறைந்த அதிபரின் முகம் சுரங்கப்பாதையில் தெரிந்தது - வெனிசுலா அதிபர்

வெனிசுலாவின் அதிபராக கடந்த 1999 ஆம் ஆண்டிலிருந்து 2013 ஆம் ஆண்டு ஜனவரி வரை பதவி வகித்தவர் ஹியுகோ சாவேஸ் ஆவார்.

அவர் நான்காவது முறையாக அதிபர் பதவிக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கேன்சர் நோயினால் பாதிக்கப்பட்டு கியூபா நாட்டில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்ததால் அவரது பதவி ஏற்பு விழா நடைபெறவில்லை. கடந்த மார்ச் மாதம் சாவேஸ் இறந்தபின் அவருக்குப் பதிலாக துணை அதிபராக இருந்த நிக்கோலஸ் மதுரோ, அதிபர் பதவியில் ஆட்சியைத் தொடர்ந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் அந்நாட்டின் சுரங்கப் பாதை ஒன்றில், இறந்த சாவேசின் முகம் தெரிந்ததாக மதுரோ கூறியுள்ளார். வெனிசுலாவின் தலைநகர் காரகாசில் நேற்று நடந்த பேரணி ஒன்றில் சுரங்கப்பாதையில் தொழிலாளர்கள் எடுத்த புகைப்படம் ஒன்றினை மதுரோ காட்டினார். அதில் சாவேசின் முகம் தெரிவதுபோல் இருந்தது. இந்தப் படம் சுரங்கத் தொழிலாளர்களால் எடுக்கப்பட்டது என்று சிரித்துக் கொண்டே கூறிய மதுரோ, சாவேஸ் எங்கும் நிறைந்திருக்கின்றார் என்றும் தெரிவித்தார்.

சாவேசினால் ஆட்சிப் பொறுப்பிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட மதுரோ, கடந்த ஏப்ரலில் தான் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின்போது ஒரு சிறிய பறவை வடிவத்தில் தான் சாவேசைப் பார்ப்பதாகக் கூறினார். அதன்பின்னர் தன்னுடைய பல உரைகளிலும் முன்னாள் அதிபரைப் பற்றி அவர் இவ்வாறே குறிப்பிட்டு வந்தார். அரசியல் விமர்சகர்கள் அவரைக் கேலி செய்தபோதிலும் அனைத்தையும் அவர் ஓரம் கட்டினார். தான் மேற்பார்வையிடும் அரசாங்கத்தில் சிறிய பறவைகளாக இருக்கும்படி அவர் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

பின்னர் கடந்த ஜூன் மாதம் தலைநகர் காரகாசை நோக்கியுள்ள மலையின் மீது சாவேஸ் தோன்றுவதாகக் கூறினார். ஒவ்வொரு முறையும் அந்த மலைப்பகுதியைத் தான் பார்க்கும்போது தன் முன்னால் சாவேஸ் தோன்றுவதாக நிக்கோலஸ் மதுரோ கூறி வருகின்றார்.

No comments:

Post a Comment