Saturday, November 2, 2013

டேவிட் கெமரூன் யாழ் செல்வதை வரவேற்கின்றோம்! ஆனால் அவரின் யாழ் விஜயத்தை புலி பினாமிகள் தவறாக பயன்படுத்தலாம்

பிரிட்டிஷ் பிரதமர் யாழ் செல்வதை வரவேற்கின்றோம் எனவும், இலங்கைக்கு எதிரான யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச நீதிவிசாரணை ஒன்றை நடத்த வேண்டும் என்று சர்வதேச அரங்கில் பிரசாரங்களைச் செய்து வருபவர்கள் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் தமது இலங்கை விஜயத்தின் போது யாழ் குடாநாட்டிற்கு செல்லும் சந்தர்ப்பத்தில் தங்களின் இந்த பிரசாரத்தை மீண்டும் வலியுறுத்தக்கூடிய வகையில் போலியான ஆதாரமற்ற தகவல்களை அவருக்கு எடுத்துரைக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருப்பதாக பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் பிரதமர் மட்டும் அல்ல எந்தவொரு வெளிநாட்டுத் தலைவரும் யாழ்குடாநாட்டுக்குச் செல்லவிரும்பினால், அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்காமல் அனுமதி வழங்கப்படும் என்றும் 30 ஆண்டுகால யுத்தத்தின் போது இடம்பெற்ற நிகழ்வுகளைப் பயன்படுத்தி எல்.ரி.ரி.ஈ. ஆதரவாளர்கள் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்தும் பிரிட்டிஷ் பிரதமருக்கு ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் என கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரசாங்க தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு தொடர்பாக வெளிநாடுகளில் இருந்து எவரும் எவ்வித தடையும் இன்றி இங்கு வரலாம். அவர்களுக்கு இதற்கான பூரண சுதந்திரத்தை அரசாங்கம் வழங்குகிறது. இந்த வெளிநாட்டு விருந்தினர்கள் எங்கள் நாட்டின் சட்டத்தையும், விதிமுறைகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டும் என்று பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை சந்தித்து இலங்கையில் நிலவி வரும் மனித உரிமை மீறல்கள், யுத்தக் குற்றச்சாட்டுக்கள் போன்ற பலதரப்பட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முறைப்பாடு செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது.

இத்தகைய சந்தர்ப்பத்தில் வடமாகாணத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களால் தற்போது அரசாங்கக் கட்சியைச் சார்ந்தவர்களுக்கு இழைக்கப்படும் துன்புறுத்தல்கள் குறித்தும் பாதிக்கப்பட்டவர்கள் வெளிநாட்டுத் தலைவர்களுக்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்வது அவசியம் என்று பாதுகாப்பு செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

No comments:

Post a Comment