Thursday, November 7, 2013

கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்ததால் பிறந்த குழந்தையை கொன்று புதைத்த தாய் விளக்கமறியலில்

கணவன் மத்திய கிழக்கு நாட்டில் இருக்கும் போது கள்ளக் காதலனுடன் கொண்ட தொடர்பினால் பிறந்த ஆண் சிசுவை கழுத்து நெரித்து கொலை செய்து வீட்டு வளவில் புதைத்த தாய் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் வவுனியா பூம்புகார் பகுதியில் இன்று (07) இடம்பெற்றுள்ளது. பூம்புகார் பிரதேசத்தைச் சேர்ந்த சிவகுமார் வேலாங்கன்னி (வயது 25) என்ற பெண்ணே மேற்படி சிசுவை பிரசவித்துள்ளார். அப்பெண், தனது தாயாரான தங்கவேலு காளியம்மா (வயது 63) என்பவருடன் இணைந்தே சிசுவை கொன்று புதைத்துள்ளார்.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான சிவகுமார் வேலாங்கன்னி, இன்று அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டு மலசலகூடத்துக்கு அருகில் வைத்து சிசுவை பிரசவித்துள்ளார். பின்னர் அவரே தான் பிரசவித்த சிசுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அது தொடர்பில் தனது தாயாரான காளியம்மாவிடம் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து இருவரும் இணைந்து தங்களது வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்கருகில் சுமார் ஒன்றரை அடி ஆழத்தில் குழியொன்றை வெட்டி அதில் சிசுவின் சடலத்தை போட்டு புதைத்துள்ளனர்.

குழந்தையைப் பிரசவித்த வேலாங்கன்னிக்கு அதிகளவில் இரத்தோட்டம் ஏற்பட்டதால் அவர் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரில் ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து வைத்தியசாலை அதிகாரிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். இதனையடுத்து பொலிஸார் அவரை விசாரித்ததில் உண்மைத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து சிசுவைப் பிரசவித்த பெண் மற்றும் அவரது தாய் ஆகிய இருவரும் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டதை அடுத்து சிசுவின் தாய் பொலிஸ் பாதுகாப்புடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிசுவின் தாயான வேலாங்கன்னியின் கணவர் எம்.சிவகுமார் வெளிநாடொன்றில் பணிபுரிந்து வருகின்றார். இவர்களுக்கு 8 வயதில் மகனும் 5 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையிலேயே கள்ளக் காதலனுடன் தொடர்பு கொண்ட இவர் மற்றுமொரு சிசுவைப் பிரசவித்து அதனைக் கொலை செய்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த வவுனியா பொலிஸார், வவுனியா மஜிஸ்திரேட் வி.ராமகமலன் மற்றும் வவுனியா வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி ரீ.பார்திபன் ஆகியோர் சிசுவின் சடலத்தை தோண்டி எடுத்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா அம்மிவைத்தான் பகுதியிலும் இதேமாதிரியான சம்பவம் இடம்பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

1 comments :

Anonymous ,  November 7, 2013 at 11:45 PM  

This is a Vavunia situaton due to th widows.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com