Thursday, November 28, 2013

சிங்கள வாக்குகளை கவரும் வேலைத்திட்டத்தை ஐதேக முன்னெடுக்க வேண்டும் - மனோ

உட்கட்சி பிரச்சினைகளால் காலத்தை வீணடித்து உள்ளத்தையும் இழக்காமல், ஐக்கிய தேசிய கட்சி இந்நாட்டில் வாழும் சிங்கள பெளத்த மக்களின் வாக்குகளை கவரும் புதிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டும். கிராமங்களுக்கு சென்று சிங்கள மக்களுக்கு உண்மைகளை எடுத்துக்கூறும் திட்டம் ஒன்றை ஆரம்பித்து அதை இடை நடுவில் இந்த கட்சி கைவிட்டது. அதை விட்ட இடத்திலிருந்து ஐதேக தொடர வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கம் இன்று கொழும்பில் ஊடக மாநாடு நடத்தியது. சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்பி, விக்கிரமபாகு கருணாரத்ன, அசாத் சாலி ஆகியோர் கலந்து கொண்ட இம்மாநாட்டில் மனோ கணேசன் சிங்கள மொழியில் மேலும் கூறியதாவது,


தமிழ் வாக்குகளை வட கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், மேல்மாகாணத்தில் நமது கட்சியும் பாதுகாத்து பெற்று கொள்வோம். மலையகத்தில் தமிழ் வாக்குகளை கொண்டுள்ள கட்சிகள் உரிய நேரத்தில் நமது தரப்புக்கு வரும். ஆகவே நீங்கள் காலத்தை வீணடிக்காமல் சிங்கள வாக்குகளை பெற்றுக்கொள்ளும் முயற்சியை மேற்கொள்ளுங்கள். நமது சிறுபான்மை வாக்குகளுடன், சிங்கள வாக்குகளும் சேராமல் இந்த அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். இன்று ஐதேக விடம் எஞ்சியுள்ள சிங்கள வாக்குகளையும் சரத் பொன்சேகா கொண்டு போகும் அறிகுறி தோன்றி வருகிறது. இப்படியே போனால், தமிழ் வாக்கும் இல்லை, சிங்கள வாக்கும் இல்லை என்ற நிலைமை ஐதேகவுக்கு ஏற்படும்.

நீண்ட காலமாக நாங்கள் கூட்டு சேர்ந்து பணியாற்றும் கட்சி என்பதாலும், ஐதேக பலமடைய வேண்டும் என நான் விரும்புவதாலும், இந்த அரசாங்கத்தை வீழ்த்த வேண்டுமென்ற தேவை இருப்பதாலும் இதை நான் அக்கறையுடன் பகிரங்கமாக சொல்லுகிறேன்.

இன்று இந்நாட்டில் ஒன்பது மாகாணசபைகள் உள்ளன. இதில் வடக்கை தவிர அனைத்தும் அரசாங்க கட்சியிடம் உள்ளது. வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆட்சி நடக்கின்றது. ஆகவே இன்று நடைமுறையில் இந்நாட்டு எதிர்கட்சி தமிழ் தேசிய கூட்டமைப்புதான். இன்று இந்த அரசாங்கம் கூட்டமைப்புடன் அதிகம் மோதுவதற்கு இதுவும் பிரதான ஒரு காரணம். அன்று அமிர்தலிங்கம் தலைமையில் தமிழர் விடுதலை கூட்டணி எதிர்கட்சியாக நாடாளுமன்றத்தில் இருந்து அன்றைய ஐதேக அரசுடன் மோதியது. இன்றும் ஏறக்குறைய அதே நிலைமைதான். இன்று அரசாங்கத்துக்கு மோதுவதற்கு வேறு பிரதான எதிர்கட்சி நாட்டில் இல்லை. இந்த நிலைமைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் இயலாமை பிரதான காரணம். இன்று தெற்கில் ஒரு மாகாண சபைகூட ஐதேகவிடம் இல்லை. ஐதேக வசம் இருக்கும் ஒரேயொரு பிரதான சபை கொழும்பு மாநகரசபையாகும். இங்கேயும் இவர்களுக்கு வேண்டிய செயற்பாட்டு பெரும்பான்மையை, நமது ஜனநாயக மக்கள் முன்னணியே வழங்குகிறது. இந்த உண்மை இன்று ஐதேகவில் உள்ள சிலருக்கு மறந்து போய்விட்டது.

இந்த அரசாங்கம் மக்கள் விரோத அரசு. இதை வீழ்த்தியே ஆகவேண்டும். அதற்கான காலம் வந்து கொண்டிருக்கின்றது. இன்று அரசாங்கத்தை ஆதரிக்கும் சில தமிழ், முஸ்லிம் கட்சிகள் கூட நன்றாக நடிக்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் ஆதரிப்பது போல் நடிக்கிறார்கள். இந்த அரசாங்கத்தை ஆதரிக்க மனசாட்சியுள்ள எந்த ஒரு தமிழனுக்கும், முஸ்லிமுக்கும் முடியாது. இந்த நிலையை சிங்கள மக்கள் மத்தியிலும் ஏற்படுத்த வேண்டும். சிங்கள மக்களும் இந்த அரசாங்கத்தை திட்டி தீர்க்கும் அளவுக்கு வந்துவிட்டார்கள். ஆனால் அவர்கள் மத்தியில் சென்று அவர்களை அணிதிரட்டுவதை யார் செய்வது? அதை ஐக்கிய தேசிய கட்சிதான் செய்ய வேண்டும். இதை நாங்கள் செய்ய முடியாது. நாங்கள் எங்கள் வேலையை உருப்படியாக செய்து வருகிறோம். தமிழ் மக்களை, முஸ்லிம் மக்களை அணி திரட்டி வருகிறோம். ஐதேக சென்று சிங்கள மக்களை அணி திரட்ட வேண்டும். கடந்த காலத்தைபோல் கொழும்பில் வாழும் தமிழ் மக்கள் கண்ணை மூடிக்கொண்டு யானை சின்னத்துக்கு வாக்களிப்பார்கள் என ஐதேக நினைக்க கூடாது. அந்த காலம் இன்று இல்லை. அது கடந்த மாநகரசபை தேர்தலிலேயே தெரிந்துவிட்டது. இப்போது இருக்கும் சிங்கள வாக்குகளையாவது ஐதேக காப்பற்றிக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் சிங்கள வாக்குகளையும் சரத் பொன்சேகா கொண்டுபோய்விடுவார். இப்படியே போனால், தமிழ் வாக்கும் இல்லை, சிங்கள வாக்கும் இல்லை என்ற நிலைமை ஐதேகவுக்கு ஏற்படும்.

நாம் வாழும் கொழும்பில் அரசியல் ரீதியாக நமது இனம் பலம் வாய்ந்த இடத்தில் இருக்க வேண்டும் என நமது மக்கள் நினைக்கிறார்கள். இதை செய்யக்கூடிய ஆளுமையும், ஆற்றலும் நமது கட்சிக்கு உண்டு என்றும் நமது மக்கள் நினைக்கிறார்கள். எனவே ஒரு தமிழ் வாக்கையும் நாம் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம். இதை எழுதி வைத்து கொள்ளுங்கள். கொழும்பில் தமிழ் மக்களின் ஆதரவு வேண்டுமானால் எம்முடன் கலந்து பேசுங்கள். நமது மக்கள் மீதும், எங்கள் வரலாற்றின் மீதும் நம்பிக்கை வைத்து இதை நான் கூறுகிறேன். பெருந்தியாகங்களை செய்து மக்கள் மனதில் இந்த இடத்தை நான் பெற்றுள்ளேன்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com