Monday, November 4, 2013

அரசுக்கு எதிராக போராடத் தயாராகிறது ஜாதிக ஹெல உறுமய

சர்ச்சைக்குரிய கஸினோ சூதாட்டத்தை ஊக்குவிக்கும் சட் டவரைவை திருத்தங்களுடன் மீளக் கொண்டுவருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துவரும் இந்நிலையில், அதற்கெதி ராகப் போராடுவதற்கு அரசின் பங்காளியான ஜாதிக ஹெல உறுமய தீர்மானித்துள்ளது.

அரசின் இந்த முயற்சியை முறியடிப்பதற்காக அனைத்து அமைச்சர்களுடனும் பேச்சு நடாத்தப் போவதாகவும் அக்கட்சியின் தலைவர் ஓமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.

“கஸினோ சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தினால் நிச்சயமாக நாட்டில் பாதாள உலகம் உருவாகும்“ எனவும் அவர் எதிர்வு கூறியுள்ளார்.

அரசினால் பாராளுமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்ட கஸினோ சட்ட வரைவுக்கு பௌத்த மதத் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தமையால் அரசாங்கம் இத்திட்டத்தைப் பிற்போட்டது.

ஆனால், கஸினோ சூதாட்ட மன்னனான ஜேம்ஸ் பாக்கர், “கஸினோவை அமைக்கும் யோசனையை அரசு இன்னும் கைவிடவில்லை. இது கொழும்பில் மிக விரைவில் அமைக்கப்படும்“ என உறுதியாகத் தெரிவித்திருக்கின்ற கருத்திற்கே ஓமால்பே சோபித்த தேரர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது -

“கஸினோ சூதாட்ட நிலையம் என்பது நாட்டிற்கே சாபக்கேடான ஒன்றாகும். கஸினோவை நிறுவிவிட்டால் சூது, போதைப் பொருட்கள் மற்றும் விபச்சாரம் என்பன வெளிப்படையாகவும், தைரியமாகவும் இனி நடைபெற ஆரம்பித்துவிடும்.

அதுமட்டுமல்லாது, பாதாள உலகமும் உருவாகக் கூடிய அபாயம் காணப்படு கின்றதோடு ஆயுதங்களைக் கையாளுகின்ற பழக்கமும் அதிகரித்து விடும். இதனால், இனி மக்களுக்கு நிம்மதியே கிடையாது. மக்கள் மகிந்த சிந்தனைக் குத்தான் ஆதரவு அளித்தார்களே தவிர, நாட்டை அடியோடு அழிக்கும் கஸினோவுக்கு அல்ல.

மக்கள் இன்று அவல நிலையில் இருக்கின்றபோது, இப்படிப்பட்ட ஒன்றிற்கு அரசு வரிவிலக்கு கொடுப்பதன் மூலம் என்ன லாபம் கிடைக்கப் போகின்றது? இப்படிப்பட்ட அரசின் திட்டத்தை முறியடிப்பதற்காக நாம் அனைத்து அமைச்சர்களுடனும் பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளதோடு, பாராளுமன்றத்திலும் இதற்கெதிராகக் குரல் கொடுப்போம். எப்படியான சூழ் நிலை ஏற்பட்டாலும் இந்தக் கஸினோவை ஜாதிக ஹெல உறுமய ஒருபோதும் ஆதரிக்க மாட்டாது என உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்“ என்றிருக்கின்றார் தேரர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com