போலி ஆணுறுப்புடனேயே குத்துச் சண்டைகளில் பங்குபற்றினேன்! -தன் குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் மைக் டைசன்
முக்கிய குத்துச்சண்டைப் போட்டிகளின்போது போதைப் பொருட்களை பயன்படுத்திய நிலையில் காணப்பட்டதாக உலகின் முன்னாள் அதிபார குத்துச்சண்டை சம்பியனான மைக் டைசன் முதல் தடவையாக ஒப்புக்கொண்டுள்ளார்.
அத்துடன் தான் போதைப் பொருட்களை பயன்படுத்தியமை கண்டுபிடிக்கப்படாமல் இருப்பதற்காக சிறுநீர் பரிசோதனைகளின் போது வேறு நபர்களின் சிறுநீர் நிரப்பப்பட்ட போலி ஆணுறுப்பை தான் பயன்படுத்திய அதிர்ச்சித் தகவலையும் மைக் டைசன் வெளியிட்டுள்ளார்.
47 வயதான மைக் டைசன், புதிய நூலொன்றிலேயே முதல் தடவையாக இத்தகவல்களை வெளியிட்டுள்ளார். Undisputed Truth எனும் இந்நூல் அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது. எனினும் இந்நூலின் சில பகுதிகள் ஏற்கெனவே வெளியாகியுள்ளன.
1986 ஆம் ஆண்டு தனது 22 ஆவது வயதில் உலக குத்துச்சண்டைக் கவுன்ஸிலின் சம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம், மிக இளம்வயதில் உலக அதிபார சம்பியன் பட்டத்தை வென்றவர் எனும் சாதனையை படைத்தவர் மைக் டைசன். உலக குத்துச்சண்டை சங்கம், சர்வதேச குத்துச்சண்டை சம்மேளனம் ஆகியவற்றின் அதிபார சம்பியன் பட்டங்களை வென்ற மிக இளம் வீரரும் மைக் டைசன்தான்.
எனினும் குத்துச்சண்டைக் களத்திலும் அதற்கு வெளியிலும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குபவராக அவர் காணப்பட்டார்.
அமெரிக்க கறுப்பின அழகுராணியொருவரை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கியதால் 3 வருடங்களை டைசன் சிறையில் கழித்தமை குறிப்பிடத்தக்கது.
1997 ஆம் ஆண்டு நடைபெற்ற குத்துச் சண்டை போட்டியின்போது தன்னுடன் மோதிய இவாண்டர் ஹொலிபீல்ட்டின் காதை கடித்து துண்டாக்கியமை குத்துச்சண்டை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால், போட்டிகளின்போது அவர் போதைப் பொருட்களை பயன்படுத்தியதை மறைப்பதற்கு மோசடிகளில் ஈடுபட்டதை தனது புதிய நூல் மூலம் முதல்தடவையாக ஒப்புக்கொண்டுள்ளார் டைசன்.
மது மற்றும் கஞ்சா முதலான போதைப் பொருட்களை தான் அடிக்கடி பயன்படுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.
2000 ஆம் ஆண்டு டெட்ரோய்ட் நகரில் நடைபெற்ற அன்ட்ரூ கலோட்டாவுடனான போட்டியின்போது, மைக் டைசன் கஞ்சா பயன்படுத்தியிருந்தமை சிறுநீர் பரிசோதனையின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் மைக் டைசனுக்கு 2 இலட்சம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டது.
அதன்பின் இத்தகைய சோதனைகளிலிருந்து தப்புவதற்காக அதிரடியான உபாயத்தை கடைபிடித்ததாக மைக் டைசன் கூறியுள்ளார்.
மற்றொரு நபரின் சிறுநீர் நிரப்பப்பட்ட ஆணுறுப்பு போன்ற குழாயொன்றை போட்டி நடத்தும் ஒவ்வொரு இடத்துக்கும் தனது குழுவினர் கொண்டு சென்றதாக டைசன் தெரிவித்துள்ளார். சிறுநீர் பரிசோதனைக்கு சிறுநீர் வழங்குமாறு கோரப்பட்டால் தனது சிறுநீருக்குப் பதிலாக மேற்படி குழாயிலுள்ள சிறுநீரை அதிகாரிகளிடம் சமர்ப்பிப்பதை அவர் வழக்கமாக கொண்டிருந்தாராம்.
2002 ஆம் ஆண்டு லெனொக்ஸ் லூயிஸுடனான போட்டி தொடர்பான செய்தியாளர் மாநாட்டின்போது தான் கொக்கேயின் போதை தலைக்கேறிய நிலையில் காணப்பட்டதாகவும் மைக் டைசன் ஒப்புக்கொண்டுள்ளார். அச்செய்தியாளர் மாநாட்டில் இருவரும் அருகருகே நின்று போஸ்கொடுத்தபோது “நான் எனது மனக்கட்டுப்பாட்டை இழந்திருந்தேன்.
லூயிஸை நான் பார்த்தபோது அவரை தாக்க வேண்டும்போல் தோன்றியது” எனவும் மைக் டைசன் அச்சம்பவத்தை நினைவுகூருகையில் தெரிவித்துள்ளார்.
நகைகள் வாங்கியமைக்கான 8 இலட்சம் டொலர் கட்டணத்தை செலுத்தாமைக்காக குத்துச்சண்டை போட்டி ஊக்குவிப்பாளரான, பிராங் வொரனை லண்டன் ஹோட்டலொன்றில் வைத்து தான் தாக்கியதையும் டைசன் நினைவுகூர்ந்துள்ளார்.
ஓரு தடவை ஒரு இலட்சம் டொலர் பெறுமதியான நாணய நோட்டுகளைக் கொண்ட சூட்கேஸ் ஒன்றை தான் போதையில் தொலைத்துவிட்டதாகவும் ஒரு வாரத்தின் பின்னர் தனது உதவியாளர் ஒருவரால் அது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் டைசன் கூறியுள்ளார்.
போதையால் தனது குத்துச்சண்டை வாழ்க்கையிலும் சொந்த வாழ்க்கையிலும் பல பின்னடைவுகளை எதிர்கொண்ட மைக் டைசன், பின்னர் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபடுவதற்காக பல வருடங்கள் புனர்வாழ்வுப் பயிற்சிகளுக்குள்ளானார். அதன்பின் “ஹேங் ஓவர்” எனும் திரைப்படத்தில் தோன்றியதுடன் ஓரங்க நாடகமொன்றிலும் நடித்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment