Monday, November 18, 2013

வங்கிக் கடனட்டை மோசடியுடன் தொடர்புடைய ஐவர் வெள்ளவத்தையில் கைது!

போலி கடனட்டைகளைப் பயன்படுத்தி வங்கிகளில் தன்னியக்க பணம் பெறும் இயந்திரங்களினூடாக இலட்சக்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட ஐவரை வெள்ளவத்தை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் தெஹிவளை அபொன்ஸ மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தேக நபர்களை கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

வெள்ளவத்தை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் சமரகோன் பண்டா மற்றும் குற்றவியல் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன நாககந்த உள்ளிட்ட விஷேட பொலிஸ் குழு மேற்கொண்ட நடவடிக்கை மூலம் இந்த ஐவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்,திருகோணமலை, ராஜகிரிய மர்றும் கொழும்பு - 13 ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்களிடமிருந்து 16 இலட்சத்து 87 ஆயிரம் ரூபா வரையிலான பணமும் 300 இற்கும் மேற்பட்ட கடனட்டைகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 24 வயதுக்கும் 40 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கும் பொலிஸார் அவர்களில் தமிழர்கள் நால்வரும் முஸ்லிம் ஒருவரும் உள்ளடங்குவதாக குறிப்பிட்டதுடன் அவர்களில் இருவர் அடிக்கடி கனடா மற்றும் மலேஷியா ஆகிய நாடுகளுக்கு சென்றுவருவதும் விசாரணைகளினூடாக தெரியவந்துள்ளதுடன் அவர்களே இதன் பிரதான சூத்திரதாரிகள் எனவும் சந்தேகிக்கப்படுவதுடன் வெளிநாட்டு கணக்குகளிலிருந்தே இவர்கள் அதிகம் மோசடி செய்துள்ளதாகவும் சந்தேகிக்கப்படுகிறது.

தெஹிவளை அபொன்ஸ மாவத்தையில் உள்ள வீடொன்றிலிருந்து சந்தேகந்பர்களைக் கைது செய்யும் போது போலி கடனட்டைகளை அச்சடிக்க உதவும் இயந்திரம், வெற்று கடனட்டைகள் 300, தற்போதும் பாவனையிலுள்ள கடனட்டைகள் 80 மற்றும் மடிக்கணினிகள் 2, போலி கடனட்டை தயாரிப்புக்கான தகவல்கள் மற்றும் மென்பொருள்கள் என்பனவற்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com