சஹாரா பாலைவனத்தைக் கடக்க முயன்றபோது தண்ணீர்த் தாகத்தால் பெருமளவானோர் பலியான சம்பவத்திலிருந்து உயிர் தப்பிய சிறுமி ஒருத்தி , தங்களின் கொடூரமான பாலைவனப் பயணத்தைப் பற்றி பிபிசியிடம் விபரித்துள்ளார்.
தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் அவள் பாலைவனத்துக்குப் பலி கொடுத்துள்ளாள்.
இவர்கள் செப்டெம்பரின் கடைசி அல்லது அக்டோபரின் முற்பகுதியில் நைஜரின் ஆர்லீட் நகரிலிருந்து பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.
நைஜர் ஊடாக சஹாரா பாலைவனத்தைக் கடந்து அல்ஜீரியாவை அடைய முயன்ற 90க்கும் மேற்பட்டவர்கள், இடைநடுவில் தங்களின் வாகனம் பழுதடைந்ததால், பயணத்தைத் தொடரமுடியாமல் பல நாட்களாக தண்ணீர் தாகத்தால் தவித்து உயிரிழந்தனர்.
தொழில் தேடிப் புறப்பட்டவர்களும் அவர்களின் குடும்பத்தினருமாக 52 சிறார்களும் 33 பெண்களும் இந்தப் பாலைவனப் பயணத்தில் உயிரிழந்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது.
வெப்பத்தால் தகிக்கும் பாலைவனத்தில், வாகனம் பழுதடைந்த இடத்திலிருந்து இரண்டு நாட்களாக நடந்து சென்ற தமக்கு, அந்த வழியால் வந்த ஒரு வாகனம் கூட உதவவில்லை என்று உயிர்தப்பிய 14 வயதுச் சிறுமி ஷாஃபா பிபிசியிடம் கூறினாள்.
வரும்வழியில் உயிரிழந்த தாயையும் இரண்டு சகோதரிகளையும் தானே புதைத்துவிட்டு வந்ததாக அந்தச் சிறுமி மேலும் தெரிவித்தாள்.
தேடுதல் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப் பணியாளர்கள், மக்கள் கூட்டம் கூட்டமாக உயிரிழந்து காணப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment