இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து 4 விக்கட்டுக்களினால் வெற்றி!
இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வேர்த் லுயிஸ் முறைப்படி 4 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்றது. ஹம்பாந்தோட்டை சூரியவௌ சர்வதேச மைதானத்தில் இடம்பெற்ற இப்போட் டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி, 20.4 ஓவரில் ஒரு விக்கட்டை இழந்து 117 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை, மழை குறுக்கிட்டது.
இதனால் சுமார் ஐந்தரை மணித்தியாலங்கள் போட்டி தடைப்பட்டது. இதனை யடுத்து, 23 ஓவர்களாக குறைக்கப்பட்டு போட்டி மீண்டும் ஆரம்பமானது. இலங்கை அணிக்கு, 23 ஓவர்களில், ஒரு விக்கட்டை மாத்திரம் இழந்து 138 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் திமுத் கருணாரட்ன 4 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, 2வது விக்கட்டுக்காக குமார சங்க்ககார மற்றும் திலகரட்ன டில்சான் ஜோடி 126 ஓட்டங்களை பகிர்ந்து, தொடர்ச்சியாக 100 க்கும் மேற்பட்ட ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தது.
திலகரட்ன டில்சான் 55 ஓட்டங்களையும், குமார சங்கக்கார 71 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றனர். டக்வேர்த் லுயிஸ் முறைப்படி 23 ஓவர்களில் 198 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 6 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. அவ்வணியின் தொடக்க வீரரான டொம் லெத்தம் 86 ஓட்டங்களையும், லூக் ரோன்சி 49 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றனர்.
நியூசிலாந்து அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 20 ஓட்டங்கள் அவசியப்பட்ட நிலையில், ரங்கன ஹேரத் வீசிய அந்த ஓவரில் நேதன் மெக்கலம் 3 சிக்சர்கள் மற்றும் ஒரு பவுன்டரி அடங்கலாக அவ்வணியின் வெற்றியை உறுதிப்படுத்தினார்.
இலங்கை சார்பில் நுவன் குலசேகர 4 விக்கட்டுக்களையும் சச்சித்ர சேனாநாயக 2 விக்கட்டுக்களையும் வீழ்த்தினர். சிறப்பாட்டக்காராக லெத்தம் தெரிவானார்.
0 comments :
Post a Comment