Sunday, November 10, 2013

முஸ்லிம் பாடசாலைகளுக்கான 2014 ஆம் ஆண்டுக்கான கால அட்டவணை

2014 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய பாடசாலை தவணைகள் தொடர்பான கால அட்டவணையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன் பிரகாரம் சகல பாடசாலைகளும் 200 நாட்கள் நடத்தப்பட வேண்டும் எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கிணங்க நாட்டின் அனைத்து முஸ்லிம் பாடசாலைகளும் முதலாம் தவணைக்காக 2014 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை வரையும் 02 ஆம் தவணை ஏப்ரல் மாதம் 16 ஆம் திகதி புதன்கிழமை தொடக்கம் ஜுன் மாதம் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 04 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரையும் நடைபெறும் என கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தமிழ், சிங்களப் பாடசாலைகள் 2014 ஜனவரி மாதம் 02 ஆம் திகதி வியாழக்கிழமை தொடக்கம் ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை முதலாம் தவணை எனவும் இரண்டாம் தவணை 2014 ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை எனவும் மூன்றாம் தவணை செப்டெம்பர் மாதம் 01 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை எனவும் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதேவேளை அந்தந்த மாகாண கல்வி அமைச்சுக்கள் தத்தமது மாகாணங்களுக்கே உரிய விஷேட தேவைகளுக்கு ஏற்புடையதாய் பாடசாலை தவணை அட்டவணையில் ஏதேனும் மாற்றங்கள் செய்ய வேண்டுமெனக் கருதினால் பின்வரும் நிபந்தனைகளுக்கு அமைய 1997 ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதிய 97 15 ஆம் இலக்க சுற்று நிரூபத்திற்கு அமைய மாற்றிக் கொள்ள முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டில் இடம்பெற்று அரசாங்க விடுமுறை தினங்களைக் கருத்திற் கொண்டு 200 நாட்கள் பாடசாலைகள் நடத்தப்பட வேண்டுமெனவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com