200ஆவது போட்டியுடன் இன்று ஓய்வு பெற்ற சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு!
கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகளை ஏற்படுத்தி நாட்டிற்கு பெருமை தேடி கொடுத்துக் கொண்டிருந்த சச்சின் டெண்டுல்கர் 24 ஆண்டுகாலம் இந்திய அணிக்காக விளையாடிய அவர் தனது 200 ஆவது டெஸ்ட் போட்டி முடிந்ததும் இன்று ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், விளையாட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை கவுரவிக்கும் வகையில் அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க பிரதமர் மன்மோகன்சிங் பரிந்துரை செய்து, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் அனுப்பியிருந்ததை தொடர்ந்து பரிசீலனை செய்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, சச்சினுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதாக இன்று அறிவித்தார்.
ஓய்வு பெற்ற நாளிலேயே சச்சினுக்கு இந்த விருது அறிவிப்பு வெளியானது குறிப்படத்தக்கது.
இதேபோல் வேதியியல் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி மாளிகை அறிவித்துள்ளது.
கிரிக்கெட் உலகின் கதாநாயகனாகத் திகழ்ந்த சச்சின் இதுவரை 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 51 சதம் 68 அரை சதங்களுடன் 15921 ரன்கள் அடித்துள்ளதுடன் 463 ஒருநாள் பேட்டிகளில் 49 சதம், 96 அரை சதங்களுடன் 18426 ரன்கள் விளாசி விடைபெற்றுள்ளார்.
இவரது சாதனையைப் பாராட்டி பத்மவிபூஷன், ராஜீவ் காந்தி கேல் ரத்னா உள்ளிட்ட விருதுகள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளதுடன் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment