Monday, October 7, 2013

விசேட அதிரடிப் படையினரால் அதிரடியான பாணியல் அல் கொய்தா தலைவர் கைது! இஸ்லாமிய ஆயுததாரிகளுக்கு இலக்கு!

இஸ்லாமிய ஆயுததாரிகளை இலக்குவைத்து அமெரிக்க விசேட அதிரடிப் படை ஆபிரிக்காவில் இரு வேறு இரா ணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதில் 1998 ஆம் ஆண்டு கென்யா மற்றும் தன்சானியாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்படும் அல் கொய்தா தலைவரை அமெரிக்க அதிரடிப் படையினர் கைதுசெய்துள்ளனர். அனஸ் அல் லிபி என்ற அல் கொய்தா தலைவர் லிபிய தலைநகர் திரிபோலியில் வைத்து சிக்கியுள்ளார்.

அதேபோன்று அல் ஷபாப் ஆயுதக் குழுவை இலக்குவைத்து தெற்கு சோமாலி யாவிலும் அமெரிக்கப் படை இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதனை அமெரிக்க பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடகச் செயலாளர் ஜோர்ஜ் லிடில் நேற்று முன்தினம் சனிக்கிழமை உறுதி செய்தார். முன்னணி அல் ஷபாப் தீவிரவாத தலைவர்களை பிடிக்கும் நோக்கிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த இராணுவ நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்ப்பதற்கு அமெரிக்கா முழுமையான அவதானம் செலுத்துகிறது. இந்த தாக்குதலின்போது அல் ஷபாப் ஆயுததாரிகள் கொல்லப்பட்டுள்ளனர். எனினும் அதுபற்றி எமக்கு உறுதி செய்ய முடியாமல் உள்ளது' என்றும் லிடில் குறிப்பிட்டார்.

இதில் அல் ஷபாப் தலைவர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. எனினும் அதனை உறுதி செய்யும் முன்னரே அமெரிக்க அதிரடிப் படையினர் வாபஸ் பெறப்பட்டிருப்பதாக அமெரிக்க சிரேஷ்ட அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. பராவ் பகுதியில் இராணுவ நடவடிக்கைக்கு ஒன்றரை வாரங்களுக்கு முன்னர் திட்டமிடப்பட்டது என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் டைம்ஸக்கு குறிப்பிட்டார்.

வெஸ்ட்கேட் தாக்குதலுக்கு பின்னரே இது திட்டமிடப்பட்டது என அந்த அதிகாரி குறிப்பிட்டார். கென்ய தலைநகர் நைரோபி வணிக வளாகத்தில் அல் ஷபாப் ஆயுததாரிகள் தொடர்ந்த நான்கு நாள் முற்றுகை நடவடிக்கையில் 67 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில் சோமாலிய அரசின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த தகவலில், அமெரிக்கப் படையால் இந்த இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும், சோமாலிய அரசுக்கு முன்கூட்டியே அறிவுறுத்தப் பட்டதாகவும் கூறினார்.

அதேபோன்று சிரேஷ்ட அல் கொய்தா தலைவர் அனஸ் அல் லிபியை இலக்கவைத்து அமெரிக்க அதிரடிப் படையினர் நேற்று முன்தினம் சனிக்கிழமை லிபிய தலைநகர் திரிபோலியில் இராணுவ நடவடிக்கையை முன்னெடுத்தது. இதன் போது குறித்த அல் கொய்தா தலைவர் தனது வீட்டுக்கு முன்னால் வாகனத்தை நிறுத்தி விட்டு வெளியே இறங்கியபோது அவரை மூன்று வாகனங்களில் சுற்றி வளைத்து அவரது ஆயுதத்தை பறிமுதல் செய்து கைதுசெய்யப்பட்டதாக அவரது சகோதரர் நபிஹ் ஏ. பி. செய்திச் சேவைக்கு விபரித்துள்ளார்.

வெளிநாட்டினர் போன்று தோற்றமளித்த அதிரடிப் படையினர் கடத்திச் சென்றதாக அவரது மனைவி குறிப் பிட்டுள்ளார். எனினும் இந்த இராணுவ நடவடிக்கை லிபிய அரசுக்கு தெரிந்தே நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் சி. என். என். தொலைக்காட்சிக்கு குறிப்பிட்டுள்ளார்.

49 வயதான லிபி 1998 ஆம் ஆண்டு 220 பேரை பலிகொண்ட அமெரிக்க தூதரகங்கள் மீதான தாக்குதல்களுக்கு மூளையாக செயற்பட்டவர் என நம்பப்படுகிறது. இவரது உண்மையான பெயர் தாஸிஹ் அப்துல் அஹமதி அல் ருகை ஆகும். ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எப். பி. ஐ. இன் தேடப்பட்டு வரும் பட்டியலில் இருக்கும் இவரது தலைக்கு 5 மில்லியன் டொலர் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட த்தக்கது.

இதில் சோமாலியாவின் தெற்கு கடற்கரை நகரான பராவ்வில் அமெரிக்க அதிரடிப்படையின் நடவடிக்கை தோல்வியடைந்ததாகவும் குறித்த பகுதி தொடர்ந்தும் அல் ஷபாப் கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் மேற்படி ஆயுததாரிகள் அறிவித்துள்ளனர். எனினும் அமெரிக்கப் படையுடன் இந்த தாக்குதலில் பங்கேற்ற பிரிட்டன் மற்றும் துருக்கி அல் ஷபாபின் அறிவிப்பை மறுத்துள்ளன.

No comments:

Post a Comment