கூட்டமைப்பில் குழப்பம்: பங்காளி கட்சிகள் தனித் தனியே சந்தித்து பேச்சு!
நடைபெற்று முடிந்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளார்கள் என்பதுடன், எமது தேர்தல் அறிக்கையை ஏற்று, மிகப்பெரிய ஆணையையும் எமக்கு கொடுத்திருக்கின்றனர்.
ஆனால், தேர்தலின் பின்னரான தமிழரசுக் கட்சியின் நடவடிக்கைகள் அனைத்தும் ஏனைய அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களை உள்வாங்காமல் முடிவுகளை தன்னிச்சையாக எடுக்கும் போக்கு தொடர்கின்றது என கூட்டமைப்பின் சார்பாக வடமாகாண சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், புளட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண முதல்வரது பதவிப் பிரமாணம் தொடர்பில் தர்மலிங்கம் சித்தார்த்தன் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூட்டமைப்பின் ஒற்றுமையை வலியுறுத்தி, அதேசமயம் எமது தேர்தல் அறிக்கைக்கு ஆதரவாகவும், மக்கள் கொடுத்த மிகப் பலமான ஆணையை மதிக்காமல் நடக்கின்ற தமிழரசுக் கட்சியின் செயற்பாடுகள் குறித்து அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
குறிப்பாக முதலமைச்சரின் பதவி ஏற்பு வைபவம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய கட்சிகளுக்கு அதிருப்தியை அளிப்பதாக சித்தார்த்தன் தெரிவித்துள்ளார் மேலும் இவை சம்பந்தமாக TELO, PLOTE, EPRLF போன்ற கட்சிகள் தத்தமது கட்சிகளுடன் கூடி ஆராய்ந்து ஒரு தீர்க்கமான முடிவினை எடுத்து, மக்களின் ஆணையை முன்னெடுத்துச் செல்வதாக தீர்மானித்துள்ளதாகவும் சித்தார்த்தன் மேலும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment