Thursday, October 24, 2013

வடமாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதே விக்னேஸ்வரனின் பொறுப்பு! கோத்தபாய

விக்னேஸ்வரன் மக்கள் தனக்கு அளித்த ஆணையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் தனது ஆணையை நிறைவேற்றுவதற்காக அரசாங்க அமைப்பு களின் உதவியை பெற்று வடமாகாணத்தின் அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் விவசாயம், கடற்றொழில் துறை களை மேம்படுத்துவதற்கு செயற்படுவது அவசியமென்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித் துள்ளார்.

தமிழ் தேசியப் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களை நேற்று சந்தித்த போது தெரிவித்தார். அத்துடன் வடமாகாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்திருப்பதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், தேசியப் பாதுகாப்புக்காக வடபகுதி உட்பட நாட்டின் நாலா பக்கங்களிலும் உள்ள கேந்திர நிலைகளில் இராணுவ முகாம்கள் வைக்கப்பட்டிருப்பதாக கூறினார்.

புதிய மாகாணசபை தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து வடபகுதியில் இராணுவ சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளது. பொலிஸாரே அப்பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருக்கின்றனர் என்றும் அதனால், இதுவரை காலமும் அமைதியாக இருந்த வடபகுதியில் மீண்டும் மக்களிடம் கொள்ளையிடும் சமூக விரோத செயல்களில் அதிகமானோர் இறங்கியிருக்கிறார்கள் என்றும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.

இன்று வடமாகாணத்தின் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் பொறுப்பு முதலமைச்சரின் கைக்கு வந்துள்ளது. அவரது நேரடி அதிகாரத்தின் கீழ் பொலிஸ் படை இல்லாதிருந்தாலும் தமது பிரதேசத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு முதலமைச்சர் பொலிஸாரின் உதவியை நாட வேண்டுமென்றும் அத்தகைய கோரிக்கைகளுக்கு பொலிஸார் மனமுவந்து ஒத்துழைப்பார்கள் என்றும் பாதுகாப்பு செயலாளர் கூறினார்.

குற்றம் இழைத்தல், கொள்ளையிடுதல், திருடுதல் போன்ற சமூக விரோத சம்பவங்கள் வடபகுதியில் இப்போது அதிகரித்து வருவதாகத் தெரிவித்த அவர், அவற்றை கட்டுப்படுத்த வடமாகாண சபை நிர்வாகம் சிவில் பாதுகாப்பு குழுக்களை மக்களின் பிரதி நிதித்துவத்துடன் அமைத்து அந்தந்த பிரதேசத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு ஒத்துழைத்து குற்றச் செயல்களை குறைப்பதற்கு உதவ வேண்டும்.

இதுவிடயத்தில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நேரடியாக கவனம் செலுத்தி இந்த சமூக பொலிஸ் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி குற்றச் செயல்களை ஒழித்துக் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபக்ஷ தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில், வடபகுதி பெண்களை இராணுவத்தினர் பாலியல் ரீதியில் துன்புறுத்துகிறார்கள் என்று பலரும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறார்கள். இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வெவ்வேறு ஸ்தாபனங்களான UNHCR மற்றும் ஓர்சார்ட் அமைப்புகள் வடபகுதியில் உள்ள பெண்கள் மத்தியில் ஆய்வுகளை நடத்தியது.

இதன்போது, 80 சதவீதமான பெண்கள் தங்கள் கணவன்மார் தொழில் பார்ப்பதற்கு வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் தங்களுக்கு இராணுவத்தினர் எந்தவிதமான தொல்லையையும் கொடுக்கவில்லை என்றும் தாங்கள் அமைதியாக நிம்மதியுடன் வாழ்கிறோம் என்றும் கூறியதாக இவ்விரு அமைப்புகள் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது என்றார்.

சீ.வி.விக்னேஸ்வரன் தமது கட்டுப்பாட்டில் உள்ள மாகாணத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி தமது நற்பணிகளை சிறப்பாக செய்ய வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தமிழ்த் தேசியக்கூட்டமை ப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தமிழ்நாட்டுக்கு சென்று இராணுவம் வட இலங்கையில் தமிழர்களின் காணியை அபகரித்து இருக்கிறதென்றும் இதற்கு எதிராக தமிழக கட்சிகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்க வேண்டுமென்று தெரிவித்திருப்பது குறித்து கேள்வி எழுப்பியதற்கு பதிலளித்த பாதுகாப்பு செயலாளர், இவ்விதம் வெளிநாடுகளுக்கு சென்று தப்பபிப்பிராயத்தை உருவாக்குவதற்கு பதில் அரசாங்கத்துடன் பேசினால் திரு.சம்பந்தனுக்கு உண்மை நிலை புரியும் என்று கூறினார்.

இதுபற்றி கோத்தாபய ராஜபக்ஷ மேலும் கருத்து தெரிவிக்கையில், மக்களின் காணியை இராணுவம் இலவசமாக பயன்படுத்தவில்லை என்பது சம்பந்தனுக்கு தெரிந்திருக்காது. இராணுவம் அந்தக் காணிகளுக்கான வாடகையை அவற்றின் உரிமையாளர்களுக்கு ஆரம்பம் முதல் வழங்கி வருகின்றது. மயிலிட்டியில் உள்ள காணிகளையும் விரைவில் இராணுவம் அவற்றின் உரிமை யாளர்களுக்கு திருப்பி கொடுக்கும்.

வடமாகாணத்தில் பல இடங்களில் இருந்த இராணுவ முகாம்கள் படிப்படியாக மூடப்பட்டு, அவற்றின் சிப்பாய்கள் பலாலி முகாமுக்கு மாற்றப்பட்டார்கள். பலாலி முகாமையும் காங்கேசன் துறை பிரதேசத்தையும் உள்ளடக்கிய பகுதியிலேயே பெருமளவு நிலத்தை இராணுவம் தேசியப் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறது. இவற்றில் பெரும்பகுதியான நிலம் அரசாங்கத்திற்கு சொந்தமானவை. இப்போது அரசாங்கம் படிப்படியாக தனிப்பட்டவர்களுக்கு சொந்தமான நிலத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்கி வருகிறது.

பாதுகாப்பு காரணங்களுக்காக தனியார் காணியை அவற்றின் உரிமையாளர்களுக்கு திருப்பி கொடுக்க முடியாமல் இருந்தால் அரசாங்க நில மதிப்பீட்டாளர் நிர்ணயிக்கும் விலையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு நியாயமான நஷ்டஈடு வழங்கப்படும். இவ்வாறு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

1 comments :

Anonymous ,  October 24, 2013 at 12:46 PM  

We do believe that the CM would do his best to make the northern province back in the track.Further more he may bring all the races together to have a peaceful and friendly life with mutual understanding.This would bring humilty,prosperity and peace to the whole country.We need to avoid the foreign voices which always try to establish a divide and rule policy

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com