Sunday, October 20, 2013

சிறைக்கல்ல, தூக்குமரம் ஏறினாலும் மகிந்தரிடம் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்கிறார் மங்கள!

தான் சிறைக்கூடம் அல்ல, தூக்குமரம் ஏறினாலும் மகிந்த ராஜபக்ஷ போன்ற தலைவரிடம் எவ்விதத்திலும் மன்னிப்புக் கேட்கப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர குறிப்பிடுகிறார். தான் மட்டுமன்றி தமது கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூட அவரிடம் மன்னிப்புக் கேட்க மாட்டார் எனவும் அவர் குறிப்பிடுகிறார்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரணிலுக்கு எதிரான - ஆதரவான இரு தரப்பினரிடையே மாத்தறையில் ஏற்பட்ட மோதலில் காயப்பட்ட தென் மாகாண சபை உறுப்பினர் கிரியஷாந்த புஷ்பகுமாரவை நோய் விசாரிப்பதற்காக காலி - படதுவ இல்லத்திற்கு இன்று (20) சென்றவேளை ஊடகத்திற்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் உண்மையாக இருப்பின், யாரேனும் ஒருவர் முன்வந்து தன்னைப் பிணையில் விடுதலை செய்தால் அதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், யாரேனும் ஒருவருடன் தொடர்புகொண்டு மகிந்த ராஜபக்ஷவின் தேவைக்கு நீதிமன்ற - பொலிஸ் தீர்ப்பை மாற்றியமைக்க முடியும் எனவும் அவர் தெளிவுறுத்துகிறார்.

இதிலிருந்து சொல்லமுடிவது என்னவென்றால் நாட்டின் சட்டம் நாய்க்குச் சென்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார். தொடர்ந்து நாங்கள் தெளிவுறுத்தி வரும் உண்மையும் அதுதான் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்று விசேடமாக இலங்கைப் பொலிஸ் சேவை ராஜபக்ஷ குடும்பத்தின் விருப்பு வெறுப்புக்களை நிறைவேற்றுகின்ற அடிமைச் சேவையாக மாறியிருப்பதாகவும் மங்கள சமரவீர குறிப்பிட்டார். மாத்தறை மாவட்டத்திற்குள் ஐக்கிய தேசியக் கட்சி வேட்டையாடப்படுவதாகவும், இது தொடர்ந்து நடைபெற்றுவருவதாகவும் தற்போதைக்கு முக்கிய உறுப்பினர்கள் 45 க்கு மேற்பட்டோர் சிறையில் வாடுவதாகவும் அவர் மேலும் தெளிவுறுத்தினார்.

மாத்தறைக் கலவரத்தில் ஈடுபட்ட தடியர்களில் இருவரை மாத்திரமே மாத்தறை பொலிஸாரால் கைதுசெய்ய முடிந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் ஜாலிய ஜயவர்த்தனவை சுற்றி வளைத்துத் தாக்கிய தடியர்களின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ள போதும், மாத்தறை பொலிஸார் சந்தேக நபர்களைக் இதுவரை கைதுசெய்யவில்லை என அவர் குற்றம் சுமத்தினார்.

மிகவும் கீழ்த்தரமாக தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்துகிடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவரும், கீழே காயங்களுடன் இருந்தவர்களை உடனடியாக வாகனத்தில் ஏற்றிச் சென்ற சுனில் எனும் இருவரும் மாத்திரமே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதிலிருந்து இலங்கையின் சட்டம் எந்த அளவுக்கு அசிங்கமாக மாறியுள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐவரைத் துப்பாக்கியால் சுட்டு, பொலிஸிற்குச் சென்ற ஹர்மன் குணரத்ன என்ற பயங்கரவாதியுடன் பொலிஸார் நடந்து கொண்டமை பற்றிய காணொளி எங்கள் வசம் உள்ளது எனவும் குறிப்பிட்ட மங்கள சமரவீர, தங்களது பகுதியிலிருந்து சட்டத்தின் முன் நிற்க வேண்டியவர்கள் இன்றோ அல்லது நாளையோ கட்டாயம் காட்சிகொடுப்பர் எனவும் குறிப்பிட்டார்.

மாத்தறைப் பொலிஸின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி உட்பட ஏனைய அதிகாரிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னே நிற்க உத்தேசித்திருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள குறிப்பிட்டார். இந்த வேட்டையை நடாத்திய சூட்சுமமான ஊடக நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றம் செல்லவுள்ளதாகவும் மங்கள சமரவீர மேலும் தெரிவித்தார்.

(கேஎப்)

No comments:

Post a Comment