ஜனாதிபதி மற்றும் ஆளுநர் சந்திரசிறி முன்னிலையில் விக்னேஸ்வரன் இன்று பதவிப் பிரமாணம்!
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் வட மாகாண சபையின் முதலமைச்சராக தெரிவுசெய்யப்பட்ட சி. வி. விக்னேஸ்வரன் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தி யோகபூர்வமாக அறிவித்துள்ளது. பதவிப் பிரமாணம் செய்து கொள்ளும் நிகழ்வு இன்று காலை 9 மணிக்கு அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. இதேவேளை, இதுவரை யில் அமைச்சர்கள் பற்றிய தீர்மானம் எதுவும் எடுக்கப்பட வில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
விக்னேஸ்வரன் முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் எதிர்வரும் 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்தில் அவரின் முன்னிலையில் கூட்டமைப்பினர்களும் அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார்கள் என கூட்டமைப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியைச் சந்தித்துப் பேசினார். இதன்போதே, விக்னேஸ்வரனின் சத்தியப் பிரமாணம் தொடர்பில் முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, இன்று காலை இந்த சத்தியப்பிரமாண நிகழ்வு இடம்பெறும்.
முதலமைச்சரின் பதவிப் பிரமாணம் நிறைவுபெற்றதன் பின்னர் வட மாகாண அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது. வட மாகாண சபை அமைச்சர்களைத் தெரிவு செய்வது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களின் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அமைச்சரவை தெரிவு செய்வதற்காக வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டம் தீர்மானம் எதுவும் எடுக்காத நிலையில் முடிவுற்றிருந்தது.
தொடர்ந்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சரவை தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எதிர்பாராத விதமாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் வட மாகாண சபை அமைச்சரவை தொடர்பில் முதலமைச்சரே முடிவெடுப்பார் என்று தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி முன்னிலையில் தான் முதலமைச்சராகப் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர், அமைச்சரவை தொடர்பில் முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார். முதலமைச்சர் கூறிய கருத்தினை கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக்கொண்டுள்ளதாக புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment