Tuesday, October 8, 2013

மத்திய மாகாணசபையில் தமிழ்க் கல்வியமைச்சு ஒழிக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்களில் உண்மையில்லை – ஆ.தொண்டமான்.

வழக்கம் போல 4 அமைச்சர்களில் ஒருவர் தமிழ்ப் பிரதி நிதியாகவே இருப்பார் என்றும் அந்த அமைச்சரின் கீழ் தொடர்ந்தும் தமிழ்க் கல்வியமைச்சும் உறுதியளிக்கப்ப ட்டிருப்பதாகவும் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.

ஆனால், மாகாணத்தின் முழுமையான கல்வியமைச் சையும் தற்போது பதவிப் பிரமாணம் செய்துகொண்ட முதலமைச்சரே பொறுப்பேற்றுள்ளதாகவும் தமிழ்க் கல்வி யமைச்சு பறிபோகும் அபாயம் உள்ளதாகவும் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் மத்திய மாகாணத்தின் முன்னாள் கல்வியமைச் சருமான வீ. இராதாகிருஷ்ணன் கூறினார்.

மத்திய மாகாண சபை 1988 ல் முதன் முதலாக இயங்க ஆரம்பித்த போது அதன் உறுப்பினர்களில் ஒருவரான இராமநாதன் தொண்டமான் (சௌ. தொண்டமானின் மகன்) கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவர் மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்குமான முழுக் கல்வி அமைச்சராக இருந்து நிறைய சிங்களப் பாடசாலைகளை மேம்படுத்தினார். நெல்லுக்கிரைத்த நீர் புல்லுக்கும் பொசிவது போல ஒரு சில தமிழ்ப் பாடசாலைகளையும் மேம்படுத்தினார்.

அவருக்குப் பின்னர், கதிரேசன், சதாசிவம், புத்திரசிகாமணி, இராதாகிருஷணன், அருள்சாமி, அனுசியா போன்ற பலர் மத்திய மாகாணத்தில் நிறைவேற்றதிகாரம் இல்லாத தமிழ்க் கல்வி அமைச்சர்களாக பதவி வகித்தனர். தங்கள் பதவிக் காலத்தில் யானைப்பசிக்கு சோளப்பொரி போட்டது போல தமிழ்ப் பாடசாலைகளுக்கு ஏதோ அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

ஆனால், அவர்கள் எந்த விதத்திலாவது நுவரெலியா மாவட்டத்தில் ஒரு தமிழ்த் தேசிய பாடசாலையாவது உருவாக்காமல் கண்ணுங் கருத்துமாக இருந்தனர். அப்படி ஒரு தமிழ்த் தேசிய பாடசாலை உருவாகிவிட்டால், அது தமது கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் போய்விடும், அப்போது தமது கைக்கூலிகளையும, ஆலவட்டங்களையும் அங்கு அதிபர்களாகவும் ஆசிரியர்களாகவும் நியமிக்க முடியாது போய் விடும் என்று அஞ்சினர்.

ஆனால், அமைச்சர் பதவி வகித்த அந்த பாமரங்களுக்குத் தெரியாது மத்திய அரசாங்க கல்வி அமைச்சு ஒவ்வொரு தேசிய பாடசாலைக்கும் ஆண்டு தோறும் 40 மில்லியன் (4 கோடி) ரூபாவை வழங்கி அதனை அபிவிருத்தி செய்கின்றது. ஆனால், மாகாண சபையோ தனது மாகாணப் பாடசாலைக்கு வெறும் 4 இலட்ச ரூபாவை மாத்திரமே வழங்குகின்றது என்று.

நுவரெலியா மாவட்டம் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே தமிழ் மக்களை அதிமாகக் கொண்ட மாவட்டமாகும். இங்கு தமிழர்கள் 60% இருக்கின்றனர். சிங்களவர்கள் 40% இருக்கின்றனர். இந்த மாவட்டத்தில் 8 க்கு மேற்பட்ட சிங்கள தேசிய பாடசாலைகள் உள்ளன. ஆனால், ஒரு தமிழ்த் தேசிய பாடசாலையாவது இல்லை.

ஒரு தமிழ்த் தேசிய பாடசாலையாவது நுவரெலியா மாவட்டத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டதே இதுவரை காலம் மத்திய மாகாண (அதிகாரம் இல்லாத) தமிழ்க் கல்வி அமைச்சர்கள் செய்த சாதனை.

நுவரெலியா மாவட்டத்தில் தமிழ்த் தேசிய பாடசாலைகள் உருவாகி ஏனைய மாவட்ட மாணவர்களைப் போல் நுவரெலியா மாவட்ட மாணவர்களும் கல்வியில் மேலோங்க இந்த தமிழ்க் கல்வி அமைச்சு மீண்டும் உருவாகாமல் இருக்க இறைவனை மன்றாடுவோமாக.

No comments:

Post a Comment